Published : 10 Jun 2017 10:15 AM
Last Updated : 10 Jun 2017 10:15 AM
வீட்டின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் முற்றம், கொல்லைப்புறம், வெளிப்புற அறை போன்றவற்றைக் காலநிலைக்கு ஏற்றமாதிரி வடிவமைப்பதை இப்போது பலரும் விரும்புகின்றனர். அதிலும் கோடைக்காலத்தில் இந்த இடங்களை அதிகமாகப் பயன்படுத்தலாம் என்பதால் இவற்றை விதவிதமாக வடிவமைப்பது பிரபலமாகி வருகிறது. இந்த வெளிப்புற அலங்காரம் வீட்டுக்கு விருந்தினர்கள் வருவதை அதிகரிக்கும்.
வீட்டின் வெளிப்புற இடங்களைத் திரைச்சீலைகளைப் பிரதானமாக வைத்தே பெரும்பாலும் வடிவமைக்கின்றனர். இந்த முற்றங்களை அமைப்பதற்காகத் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
வீட்டின் மாடியில் நிலாமுற்றம் அமைக்க நினைப்பவர்கள் வெள்ளை நிறத் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். இந்த வெள்ளை நிற திரைச்சீலைகள் கடலோர முற்றத்தில் அமர்ந்திருக்கும் தோற்றத்தைக் கொடுக்கும். எளிமையையும் அமைதியையும் விரும்புபவர்கள் இந்த வெள்ளை நிறத் திரைச்சீலைகளால் முற்றத்தையும் வெளிப்புற அறைகளையும் வடிவமைக்கலாம்.
மாளிகைகளில் அமைந்திருப்பதைப் போன்ற முற்றத்தை வடிவமைக்க நினைப்பவர்கள் மென்மையான வண்ணங்களில் ‘சாடின்’ திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆடம்பரமான தோற்றத்தை விரும்புபவர்கள் ‘பாம்-பாம்’ வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் அலங்காரமான திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒருவேளை, உங்களுடைய வீடு வெளிப்புறத் திரைச்சீலைகள் அமைக்கமுடியாத அளவுக்கு நவீனமாக இருந்தால், நுழைவாயிலில் திரைச்சீலைகளை அமைக்கலாம். இப்படி நுழைவாயிலில் திரைச்சீலைகள் அமைப்பதால் வராண்டாவில் ஒரு சிறிய முற்றத்தையும் அமைக்கலாம்.
வீடு கட்டும்போது வெளிப்புற முற்றத்துக்கான இடத்தை வடிவமைக்கும் திரைச்சீலைகளைச் சுவரிலேயே தொங்கவிடும்படி கட்டமைக்கலாம். இந்தத் திரைச்சீலை சுவர்களைப் பெரும்பாலும் கொல்லைப்புறத்தில் அமைப்பது பொருத்தமாக இருக்கும்.
இந்தத் திரைச்சீலைகளைப் பராமரிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் மிகவும் அடர்த்தியும் இல்லாத மிகவும் மென்மையும் இல்லாத நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த நடுத்தர வண்ணங்கள் நீண்டகாலத்துக்குப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
வெளிப்புற அறைகளை வடிவமைக்கும்போது விளக்குகள், கலைப்பொருட்கள் எனக் கூடுதலான அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் திரைச்சீலைகளை ஒரே வண்ணத்தில் தேர்ந்தெடுக்காமல் இரண்டு முரண்பட்ட வண்ணங்களிலும் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தத் திரைச்சீலைகளை வெளிப்புற இடங்களையும், உட்புற இடங்களையும் பிரிப்பதற்கான பிரிப்பான்களாகவும் பயன்படுத்தலாம்.
திரைச்சீலைகள் மென்மையான துணிகள், ஒளி புகாத் துணிகள் என இரண்டு வகையிலும் சந்தையில் கிடைக்கின்றன. அடர்த்தியான வண்ணங்களில் கிடைக்கும் திரைச்சீலைகள் வெளிச்சத்தை அதிகமாகக் கட்டுப்படுத்தும். வெளிச்சம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் இந்த அடர்நிற திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். வெளிச்சம் தேவை என்று நினைப்பவர்கள் மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் பாலிஸ்டர் திரைச்சீலைகள் உள்ளிட்ட புற ஊதா கதிர்களைக் கட்டுப்படுத்தும் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
வெளிப்புறப் பயன்பாட்டுக்கு என்றே தனியாகத் திரைச்சீலைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. வெளிப்புற அறைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.
திரைச்சீலைகளை வாங்குவதற்குமுன், அவற்றை எந்த அளவில் தொங்கவிடப்போகிறீர்கள் என்பதை அளவெடுத்துக்கொண்டு வாங்குவது நல்லது.
பொதுவான திரைச்சீலை கம்பிகளில்தான் திரைச்சீலைகளைப் பொருத்த வேண்டுமென்ற அவசியமில்லை. கேபிள்கள், மரக்கிளைகள், கொக்கிகள் போன்றவற்றிலும் திரைச்சீலைகளைப் பொருத்தலாம்.
கோடைக்காலம் முடிந்தபிறகு, இந்த வெளிப்புறத் திரைச்சீலைகளை நீக்கிவிடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT