Published : 20 Jun 2015 11:55 AM
Last Updated : 20 Jun 2015 11:55 AM
வீடு கட்டத் தீர்மானித்ததும் முதலில் கட்டுமானப் பணிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை பொறியாளர் உதவியுடன் முடிவு செய்துவிடுவோம். ஆனாலும் கட்டுமானச் செலவு நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகிவிடும். இந்தக் கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்துவது என்பது சவாலான விஷயம்தான். ஆனால் அதற்கெனச் சில வழிமுறைகள் இருக்கின்றன.
பசுமைக் கட்டிடக் கலையின் முனோடிகளில் ஒருவரான லாரி பேக்கரிடம் இருந்து நாம் சில விஷயங்களை அறிந்துகொள்ளலாம். அவர் கட்டிய கட்டிடங்கள் நமக்கு அவர் விட்டுச் சென்ற பாடங்கள். கட்டுமானச் செலவைக் குறைத்துச் சூழலுக்கு உகந்த வீடுகளை அவர் உருவாக்கினார்.
இந்த உத்தியைப் பரவலாக்க முயன்றார். பொதுவாகக் கட்டுமானச் செலவைக் குறைக்கும் முயற்சியில் அடிப்படையான விஷயம் தகுந்த கட்டுமானப் பொருள்களைக் கையாள்வது. பேக்கரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான். நாம் வீடு கட்டும் பகுதிக்கு அருகிலேயே கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவது என்பது பெருமளவில் கட்டுமானச் செலவைக் குறைக்கும் ஒரு வழிமுறை.
வீடு கட்டுவதில் முக்கியமான செலவுகள், கட்டுமானப் பொருள்கள் வாங்குவதால்தான் வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் ஆற்று மணல், செங்கல், சிமெண்ட் என இவற்றையே கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தி வருகிறோம்.
உலக அளவில் பல கட்டுமான மாற்றுப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. பேக்கர் உங்கள் பகுதியில் கிடைக்கும் பொருள்களையே கட்டுமானப் பொருள்களையே பயன்படுத்துங்கள் என்கிறார். உதாரணமாகக் கருங்கற்கள் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில் செங்கல்லுக்கு மாற்றாகக் கருங்கல்லையே பயன்படுத்தலாம்.
இவையெல்லாம் அடிப்படையான காரணிகள். இவற்றைத் தொடர்ந்து கட்டுமானத் தொழில்நுட்பங்கள் மூலம் கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிமுறைகள் வருகின்றன.
அதுபோல இப்போது மாற்று மணல் பரவலாகக் கிடைக்கிறது. அதை ஆற்று மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். செங்கல்லுக்கு மாற்றாக ஃப்ளே ஆஷ் கற்கள், ப்ளாக் கற்கள் போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தலாம். இப்படியான மாற்றுக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்த முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT