Last Updated : 06 Aug, 2016 12:41 PM

 

Published : 06 Aug 2016 12:41 PM
Last Updated : 06 Aug 2016 12:41 PM

முன்கூட்டியே செலுத்தப்படும் வீட்டுக் கடன்: குறைவது அசலா, தவணைக் காலமா?

வீட்டுக் கடன் வாங்கினாலும் பலரும் முழு கால அவகாசத்திலும் தவணைத் தொகையைச் செலுத்த விரும்புவதில்லை. முன்கூட்டியே கடனை அடைக்கவே விரும்புகிறார்கள். முன்கூட்டியே வீட்டுக் கடனை அடைப்பதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளன. முன்கூட்டியே வீட்டுக் கடனை அடைப்பதில் உள்ள வழிமுறைகள், சிக்கல்கள் என்ன?

முதலில் வீட்டுக் கடன் தொகையை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாக அடைக்க முடியுமா என்றால், நிச்சயம் முடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை முன்கூட்டியே வீட்டுக் கடனைச் செலுத்தினால் 2 சதவீத அபராதக் கட்டணத்தை வங்கிக்குச் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. வீட்டுக் கடன் திட்டம் தொடங்கியபோது முன்கூட்டியே கடனை அடைக்கும் வழிமுறைகள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. எனவே வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்கும்போது வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டது. ஆனால், இது வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியது. எனவே இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தலையிட்டு ரத்து செய்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த ரத்து அறிவிப்பு வெளியானது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்குப் பலன் கிடைத்தது. இதன் காரணமாக வீட்டுக் கடன் வாங்கிய ஏராளமானோர், கடனை முன்கூட்டியே அடைக்க ஆரம்பித்தனர். இப்போதெல்லாம் வீட்டுக் கடன் வாங்கிய நாளிலிருந்து 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் ஏராளமானோர் வீட்டுக் கடனை முழுமையாக அடைத்து முடித்து விடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதாவது வீட்டுக் கடனை முழுமையாக முன்கூட்டியே செலுத்தும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. சிலரால் ஒரே சமயத்தில் முன்கூட்டியே முழுக் கடனையும் செலுத்த முடியாது. கையில் கொஞ்சம் தொகை இருக்கும். அதை வீட்டுக் கடனில் செலுத்திவிடலாமா என்று எண்ணுவார்கள். அப்படி அந்தத் தொகையைச் செலுத்தும்போது, அத்தொகை அசலிலிருந்து கழிக்கப்படுமா அல்லது வட்டியிலிருந்து கழிக்கப்படுமா என்பதில் பலருக்கும் குழப்பங்கள் இருக்கின்றன. இதுபற்றி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.

“முன்கூட்டியே ஒரு தொகையைச் செலுத்தும்போது அசலிலிருந்து அந்தத் தொகையைக் கழிக்கமாட்டார்கள். அதேபோல வட்டியைக் கழிப்பதற்காகவும் பயன்படுத்தமாட்டார்கள். தொகை செலுத்தப்பட்ட பிறகு வரும் தவணைத் தொகையிலிருந்துதான் அதைக் கழிப்பார்கள். அதாவது ஒரே சமயத்தில் அசலும் குறையும். வட்டியும் குறையும். அதைவிட முக்கியமாகத் தவணைத் தொகை செலுத்தப்படுவதற்கான காலம் குறையும்” என்றார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

ஒரு வேளை வீட்டுக் கடன் வாங்கியவரால் முன்கூட்டியே பெருந்தொகையைச் செலுத்த முடியாமல் போகலாம். ஆனால், மாதந்தோறும் கூடுதலாகத் தவணைத் தொகையோடு சேர்த்து கூடுதலாக 2 அல்லது 3 ஆயிரம் ரூபாயைச் செலுத்த முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுபோலத் தொகையைச் செலுத்த முடியாது. தவணைத் தொகையைவிடக் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் அந்தத் தொகையைச் செலுத்த முடியும். உதாரணமாக 3 ஆயிரம் ரூபாய் தவணைத் தொகை என்று வைத்துக்கொள்வோம். ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால் தவணைத் தொகையைவிடக் குறைவாக இருக்கிறது அல்லவா? எனவே இந்த முறையில் தவணைத் தொகையுடன் கூடுதல் தொகையைச் செலுத்த முடியாது. அதற்குக் காராணம் இல்லாமல் இல்லை.

“வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை சூத்திரத்தின்படிதான் முடிவு செய்யப்படுகிறது. மாதந்தோறும் ஒரு தொகையைச் செலுத்துவதென்றால் சூத்திரமே அடிபட்டுபோகும். எந்த வங்கியும் சூத்திரத்தை மாற்றிக் கூடுதலாக வசூலிக்கமாட்டார்கள். தவணைத் தொகை செலுத்துவதை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் செலுத்தப்படும் தவணைத் தொகையில் வட்டிக்காகக் கூடுதல் தொகையை எடுப்பார்கள். அசல் தொகையைக் குறைவாகவே எடுப்பார்கள். மத்தியில் அசலுக்கும் வட்டிக்கும் சரிசமமாகத் தவணைத் தொகையை எடுத்துக்கொள்வார்கள். பிற்பகுதியில் அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்குக் குறைவாகவும் தவணைத் தொகையை எடுத்துக்கொள்வார்கள். எல்லா வங்கிகளிலும் இதுதான் நடைமுறை. உலகம் முழுவதும் இப்படித்தான் தவணைத் தொகை வசூலிக்கப்படுகிறது” என்றார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

அதேசமயம் மாதந்தோறும் சிறிய தொகையைச் சேர்த்து வைத்து ஒரு நல்ல தொகையை வங்கியில் செலுத்த முடியும். பெரும்பாலும் குறைந்தபட்சம் 3 தவணைத் தொகைகளையாவது சேர்த்தால்தான் வங்கிகளில் முன்கூட்டியே செலுத்த முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x