Published : 24 Jun 2017 11:03 AM
Last Updated : 24 Jun 2017 11:03 AM
ரோம் நகரத்தின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொலோசியம். கிளாடியேட்டர் அல்லது ஸ்பார்டாகஸ் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு கொலோசியம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். கிளாடியேட்டரின் சண்டைக் காட்சி இந்த இடத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நீள் வட்ட வடிவக் கட்டிடம். இதற்குக் கூரை கிடையாது. அந்தக் கால ரோமப் பேரரசில் யாராவது இறந்தால் அந்தச் சவ ஊர்வலத்தின் முன்பு மூன்று சண்டைகள் நடக்கும். அப்படிச் செய்தால்தான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. இதைப் பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழாவாகக் கொண்டாடத் தொடங்கினர். அடிமைகளும் கைதிகளுமே சண்டையிடுபவர்களாக இருந்தனர். இந்தச் சண்டைக்காகக் கட்டப்பட்டதே கொலோசியம். இதில் சண்டையிடுபவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இவை மக்களுக்குச் சுவாரசியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இருந்தன. பார்ப்பவர்களுக்குத்தான் பொழுதுபோக்கு. பங்கு பெறுபவர்களுக்கு இது உயிரைப் போக்கும் நிகழ்வாக இருக்கலாம்.
கொலோசியத்தின் மத்தியிலுள்ள களத்தில் பயங்கரமான சண்டைகள் ஏற்பாடு செய்யப்படும். சில சமயம் புலிக்கும் அடிமைகளுக்குமிடையேகூடச் சண்டை ஏற்பாடு செய்யப்படும். அதில் அடிமை வென்றால் அவருக்கு விடுதலை கிடைக்கும். நீள் வட்டக் களத்தைச் சுற்றிப் படிகள் அமைந்திருக்கும். அவற்றில் அமர்ந்துகொண்டுதான் மக்கள் இந்தச் சாகசப் போட்டிகளை ரசிப்பார்கள்.
புதுப்பிக்கும் பணிகளுடன் கொலோசியம்
கொலோசியத்தின் புதுக்கோலம்
இந்த கொலோசியத்தைப் புதுப்பிக்கப்போகிறார்கள். இதனால் கடும் சர்ச்சை உருவாகியிருக்கிறது. இத்தாலியின் பண்பாட்டு அமைச்சர் தரியோ இதற்காக 18 மில்லியன் யூரோவை அரசு ஒதுக்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
கடந்த 1,500 வருடங்களாகவே கொலோசியம் பாழடைந்த நிலையில்தான் காட்சி தருகிறது. பல நூற்றாண்டுகளாக எக்கச்சக்கமான சுற்றுலாப் பயணிகள் இந்த அற்புதமான ஆனால், உடைந்த கொலோசியத்தைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறார்கள்.
ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது கொலோசியம். இதன் உயரம் 150 அடி. நீரோ மன்னனின் அரண்மனைக்கு அருகில் அமைக்கப்பட்டது இது.
அரச குடும்பத்தினருக்கு, பெரும் நிலப் பிரபுக்களுக்கு, முக்கியமான வர்களுக்கு, பிறருக்கு என மொத்தம் நான்கு பார்வையாளர்கள் பகுதிகளைக் கொண்டது இது. கொலோசியத்துக்குக் கீழே உள்ள அடித்தளத்தில் அடிமைகளும் மிருகங்களும் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டனர். ஆயுதங்களைச் சேமித்து வைக்க தனிப் பகுதி உண்டு.
கி.பி. 217-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் இங்கு தீவிபத்து ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே அது புதுப்பிக்கப்பட்டது. பின்னர் மூன்று முறை நிலநடுக்கத்தால் சேதமடைந்தது. இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள் வேறு கட்டிட வேலைகளில் பயன்படுத்தப்பட்டன. இரு நூற்றாண்டுகளுக்கு முன் இத்தாலியில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, கொலோசியத்திலுள்ள வெள்ளை மார்பிள் துண்டுகளை உள்ளூர் மக்கள் பெயர்த்தெடுத்து விற்றார்கள். இதனால் கொலோசியம் சிதிலமடைந்தது. கொலோசியத்தில் புதிய தளம் எழுப்பப்படுவதைப் பல சரித்திர ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். புதுப்பிக்கப்பட்டால் இந்தக் கட்டிடத்தின் பழமை பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்து.
கொலோசியம்
60 லட்சம் பார்வையாளர்கள்
ஆனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கொலோசியத்தைப் புதுப்பிப்பது அவசியம் என அரசு நினைக்கிறது. இதற்காகச் சில டிஜிட்டல் ஸ்பெஷல் சங்கதிகளையெல்லாம் நிறுவப் போகிறது.
‘இதெல்லாம் சரித்திரத்தைச் சிதைக்கும் வேலை’என்று எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது. சரித்திரச் சின்னங்கள் ஓரளவாவது அழிந்த நிலையில் பார்க்கப்படும்போதுதான் அதன் மதிப்பு கூடுதலாகத் தெரியும் என்றும் கூறுகிறார்கள். கொலோசியத்தைச் சுற்றிலும் களைப் பயிர்கள் உள்ளன. அவை நீக்கப்படுவதில் கருத்து வேறுபாடு இல்லை. கொலோசியத்தைச் சுற்றிலும் உள்ள படிகள் நிலை நிறுத்தப்பட்டு அந்தப் பகுதியில் பல சிறு கடைகளை நிறுவியிருக்கிறார்கள். இதற்கும் தடையில்லை. ஆனால், கொலோசியத்தின் மேல் தளம் சரி செய்யப்படுவது கடுமையாக எதிர்க்கப்படுகிறது.
கற்கள் திருடப்பட்டதால் உண்டான துளைகள்
இன்றுகூட கொலோசியத்திற்குள்ளே செல்லும்போது, அதன் அத்தனை அழிவுகளையும் மீறி பிரமிப்பு உண்டாகிறது. ஆண்டுக்கு 60 லட்சம்பேர் கொலோசியத்தைக் கண்டு செல்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT