Published : 14 Jan 2017 11:00 AM
Last Updated : 14 Jan 2017 11:00 AM
‘எதையுமே பட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்பார்கள். ஆனால் சொந்தமாக ஒரு வீடு என்கிற விஷயத்தில் பட்டுத் தெரிந்துகொள்வது என்பது மிகவும் காஸ்ட்லியான நிகழ்வாகிவிடலாம். எனவே பிறரது அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவதுதான் இந்த விஷயத்தில் புத்திசாலித்தனம்.
பெங்களூரில் வசிக்கும் ஒருவரின் அனுபவம் இது. அவர் பெயரை ஆனந்தன் என்று வைத்துக்கொள்வோம் (பாவம், தொலைந்துபோன ஆனந்தம் அவரது பெயரிலாவது இருக்கட்டுமே).
பெங்களூரில் எழும்பிக் கொண்டுவந்த அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தைப் பார்த்த உடனேயே ஆனந்தனுக்கு ஆசை வந்துவிட்டது. அதன் கட்டுநர் ஒரு வீட்டுக்கான விற்பனைத் தொகையைக் கூறியதும் அடுத்த கணமே ஆனந்தன் தீர்மானமே செய்து விட்டார் அதை வாங்கிவிடுவது என்று. காரணம் பிற கட்டுநர்கள் இதேபோன்ற அடுக்குமாடி வீட்டுக்குக் குறிப்பிட்ட விலையைவிட இது குறைவாகவே இருந்தது.
தவிர, கட்டுநரின் அலுவலகத்தில் இது குறித்து ஆனந்தனிடம் உரையாடியவர்கள் எல்லாம் மிகவும் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். வெளிப்படையாகப் பேசியதுபோல உணர வைத்தார்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியமாகக் கட்டுமானத்தில் 70 சதவிகிதம் நிறைவடைந்திருந்தது. எனவே அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு கையில் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று கணித்துப் புளகாங்கிதப்பட்டார் ஆனந்தன்.
தன் பெயரில் ஒரு வீட்டைப் பதிவுசெய்தார். மொத்த விலையில் 70 சதவிகிதம் கொடுக்க வேண்டியிருந்தது. (பின் என்ன, கட்டிடம்தான் 70 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதே). மூன்று வாரங்கள் கடந்திருந்தன. கட்டுநரிடமிருந்து ஓர் அழைப்பு. பெங்களூரு நகராட்சியில் சொத்துப் பதிவு செய்வதைக் கொஞ்ச காலத்துக்கு நிறுத்திவைக்கப் போகிறார்களாம் (இதுபோல் முன்பு தாற்காலிகமாக சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்ததுண்டு). எனவே இந்த வீட்டை உங்கள் பெயரில் உடனடியாகப் பதிவு செய்தாக வேண்டும் என்றார்.
ஆனந்தனுக்கு இதில் தடை எதுவுமில்லை. தன் பெயரில் பதிவுசெய்வது தனக்கு மேலும் பாதுகாப்புதானே? ஆனால் அடுத்த தகவல் அவர் எதிர்பாராததாக இருந்தது. “மொத்த விலையில் 90 சதவிகிதமாவது தந்தால்தான் நான் அதை உங்கள் பெயருக்குப் பதிவுசெய்ய முடியும். நாளைக்கே பதிவுசெய்துவிடுவோம். ஒரே மாதத்தில் உங்கள் கையில் வீட்டைக் கொடுத்து விடுகிறேன்.”
ஆனந்தன் இதை நம்பினார். பதிவு செய்துகொள்வதுதானே முக்கியம். ஆறு மாதத்துக்கு அரசு பதிவுசெய்வதை நிறுத்தி வைத்துவிட்டால் என்னாவது? தவிர ஏற்கனவே முக்கால்வாசி முடிவடைந்துவிட்ட கட்டிடத்தை ஒரு மாதத்தில் முழுமையாக்குவது ஒரு பெரிய விஷயம் இல்லையே?
வீடு ஆனந்தனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு கட்டுநரைப் பார்க்கவே முடியவில்லை. அந்த இடத்திலிருந்த பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் எல்லோருமே மாயமாகிவிட்டார்கள். தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆனந்தனும், வேறு பலரும் (அதே அடுக்ககக் கட்டிடத்தில் மீதி வீடுகளை இதேபோல் பதிவு செய்துகொண்டவர்கள்) பெருத்த மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். இதற்குள் வங்கியும் கடன் தவணைகளைச் செலுத்தச் சொல்லி நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விட்டது.
சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு கட்டுநர் சார்பாக வேறொரு நபர் அங்கு வந்தார். (அதாவது பில்டிங் நிறுவனத்தின் இரு பங்குதாரர்களில் இரண்டாமவர் இப்போதுதான் தலைகாட்டுகிறார்). ஒரு பேட்டை தாதாபோல் காட்சியளிக்கும் இவர், “இப்போது இந்த வீட்டின் சந்தை மதிப்பு எவ்வளவோ அதிகமாகிவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் இரண்டு லட்ச ரூபாய் அதிகப்படியாகக் கொடுங்கள். உடனடியாக முடித்துத் தருகிறேன்” என்றார். எதிர்த்துக் கேட்டவர்களிடம் கையை ஓங்கவும் அந்தக் கட்டுநர் தயங்கவில்லை. எப்போதும் அவருடன் ஆறேழு ரவுடிகள். அரசியல் செல்வாக்கு உண்டு என்று வேறு கூறிக் கொண்டிருந்தார். ஆனந்தனைப் போலவே நொந்துபோயிருந்த பலரும் கட்டுமானப் பணி தொடர்ந்து நடக்க அதிகப்படித் தொகையைத் தந்துவிடுவதாக ஒத்துக் கொண்டார்கள். தவணை முறையில் தருவோம் என்றனர் (ரொம்பவும் ஜாக்கிரதை உணர்வு!).
ஒரு கட்டத்தில் ‘கிட்டத்தட்ட’எல்லாம் முடிந்துவிட்டது என்று நெருக்கடி கொடுத்து மொத்தத் தொகை போக அதிகப்படியாக இரண்டு லடசத்தை வாங்கிக்கொண்டுவிட்டார்.
ஆனால் மின் இணைப்பு வந்ததே தவிர, மின்சார சுவிட்சுகள், அவற்றிற்கான போர்டு ஆகியவற்றைக் காணோம். தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டதே தவிர குளியல் அறைகளில் அவற்றிற்கான பைப்புகள் பொருத்தப்படவில்லை. இப்படி எல்லாமே அரைகுறை. கேட்டதற்கு “இதையெல்லாம் தருவதாக நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை” என்றார். உண்மைதான். ஒப்பந்தம் மிகவும் சாமர்த்தியமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை அப்போதுதான் அந்தத் துரதிஷ்டசாலிகள் புரிந்துகொண்டார்கள்.
குறிப்பிட்ட கட்டுநரின் பெயருடன் வலைத்தளத்தில் பிறரை எச்சரிக்கை செய்திருக்கிறார்களாம், ‘இனியாவது இவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று.
நீங்கள் புரிந்துகொண்டீர்கள் அல்லவா எந்ததெந்த விஷயத்திலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று?
முக்கியமாக இதுபோன்ற கட்டுமான நிறுவனம் ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதையும், அதே நிறுவனம் மாற்றுப் பெயரில் கூட உங்கள் பகுதியில் கட்டிடத்தை உருவாக்கக்கூடும் என்பதையும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT