Last Updated : 24 Jun, 2017 11:06 AM

 

Published : 24 Jun 2017 11:06 AM
Last Updated : 24 Jun 2017 11:06 AM

வீட்டைக் கட்ட வேண்டாம்; பிரிண்ட் பண்ணலாம்!

வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டியவுடனே, குறைந்த நாட்களில் வீட்டு வேலைகளை விரைவாக முடித்து, புதுமனை புகுவிழா நடத்தவே பலரும் விரும்புவார்கள். ஆனால், குறைந்த நாட்களில் வீடுகளைக் கட்டி முடிப்பது என்பது எளிதான காரியமல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 6 மாதங்களாவது செலவிட்டால் தான் ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், சீனாவில் அறிமுகமான ஒரு புதிய தொழில்நுட்பத்தால் குறைந்த நாட்களிலேயே வீட்டைக் கட்டி முடித்துவிடுகிறார்கள். அப்படிக் கட்டி முடிக்கும் வீடுகளை பிரிண்டர் வீடுகள் என்று அழைக்கிறார்கள். அதென்ன பிரிண்டர் வீடு?

பொதுவாக பிரிண்டர் என்பது ஒரு கோப்பு அல்லது ஒரு படிவத்தை பிரிண்ட் எடுக்கப் பயன்படுவது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், சீன நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள பிரிண்டர், கோப்புகளை பிரிண்ட் எடுப்பது போல வீடுகளை உருவாக்கித் தருகிறது என்பதுதான் விந்தை. அதுவும், ஒரே நாளில் வீடுகள் தயாராகிவிடும் என்பது ஆச்சரியம் தரும். இந்தத் தொழில்நுட்பத்தில் வீட்டை பார்த்துப் பார்த்துப் பல மாதங்கள் செலவழித்து, கட்டி முடிக்க வேண்டும் என்ற தேவையெல்லாம் இல்லை.

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் வீட்டை மட்டுமே ஏன் பல மாதங்கள் காத்திருந்து கட்டி முடிக்க வேண்டும் என்னும் எண்ணம்தான், இந்தத் தொழில்நுட்பம் உருவாகக் காரணம். அஸ்திவாரம் அமைத்த பிறகு, என்ன அளவில், என்ன வடிவத்தில், என்ன உயரத்தில் வீடு வேண்டும் என்பதை ஆட்டோ கேட் (Auto CAD) மென்பொருள் மூலம் டிசைன் செய்தால் போதும். பிறகு, அந்த டிசைனுக்கு ஏற்ற வடிவத்தில் 3டி பிரிண்டர் இயந்திரம் சுவர்களை அமைத்துத் தருகிறது. இந்த 3 டி பிரிண்டரில் சிமெண்ட் கலவை உருவாக்கி நிரப்பிவிட்டால் போதும், மளமளவென சுவரை கட்டி ஒரே நாளில் கட்டுமானத்தை பூர்த்தி செய்துவிடுகிறது.

இதில் குறிப்பிடும்படியான அம்சம் என்னவென்றால், பிரிண்டரிலிருந்து வெளியாகும் சிமெண்ட் கலவை, அடுத்த சில நிமிடங்களிலேயே உலர்ந்து, உறுதியான சுவர்களை உருவாக்கிவிடுகிறது. அளவில் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் அந்த 3டி பிரிண்டர் 105 அடி நீளம், 33 அடி அகலம், 22 அடி உயரம் கொண்டது. நவீன வசதிகள் கொண்ட ஒரு பங்களாவை பிரிண்டர்கள் மூலம் ஒரே நாளில்கூட வடிவமைத்துவிடலாம். ஆனால், அதற்கு நான்கு 3டி பிரிண்டர்கள் தேவைப்படும். பிரிண்டரைப் பயன்படுத்தும்போது, நீண்ட நாட்களுக்கு வீடுகளைக் கட்ட ஆகும் செலவைவிடக் குறைவான செலவிலேயே வீட்டைக் கட்டி முடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

உயரமான சுவர்கள், வீடுகளுக்குத் தேவையான மின்சார இணைப்புக்கான வழித்தடங்கள், குடிநீர்க் குழாய்களுக்கான வழித்தடங்கள், இதர வீட்டுப் பயன்பாட்டு சாதனங்கள், நீர் செல்வதற்கான வழித்தடங்கள் ஆகியவற்றைக் கட்டுமானத்தின் போதே ஆட்டோ கேட் முறையில் திட்டமிட்டு விடுவதால் சுவர்களை உருவாக்கும்போதே அவை வடிவம் பெற்று விடுகின்றன. தற்போது வரை தனித் தனி வீடுகளே 3டி பிரிண்டரில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த 3டி பிரிண்டரைக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் உருவாக்கவும் முடியுமாம். ஆனால், சீனாவில் 3டி பிரிண்டர் வடிவிலான வீடுகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்படும்போது 3டி பிரிண்டர் வீடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரளவுக்குக் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் வீடு கட்ட விரும்புவோருக்கு இந்தத் தொழில்நுட்பம் நிச்சயம் உதவும். கட்டுமானத் துறையில் 3டி பிரிண்டர் தொழில்நுட்பத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இது உலகம் முழுவதும் கவனம் பெறவும் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x