Published : 07 Apr 2017 05:26 PM
Last Updated : 07 Apr 2017 05:26 PM
வீடு அல்லது மனை வாங்க வாங்கப்போகிறோம் என்றால், விலைக்கான காரணிகள் பல இருக்கும். தேசிய வீட்டு வசதி வங்கி திரட்டிக் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலும் வீடுகளின் விலை நிர்ணயிக்கப்படும் முறை நம் நாட்டில் உள்ளது. அந்த வங்கி அளிக்கும் ‘ரெசிடெக்ஸ்’(Residex) குறியீடு வீட்டு விலையை நிர்ணயிக்க உதவுகிறது. ரெசிடெக்ஸ் என்பது என்ன?
பங்குச் சந்தையில் பங்குகளின் விலை என்ன? பங்குகளின் விலை குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா என்பதை சென்செக்ஸ் குறியீடு மூலம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா? அதுபோல நகரங்களில் வீடு, மனை விலை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா? தற்போதைய நிலவரம் என்ன போன்ற தகவல்களை அளிப்பதுதான் ரெசிடெக்ஸ் குறியீடு. பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகளைக் குறியீட்டு முறையில் சொல்வதைப் போல ரெசிடெக்ஸ் குறியீட்டு முறையில் தேசிய வீட்டு வசதி வங்கி குறிப்பிடுகிறது.
இந்தக் குறியீட்டின்படி சொத்தின் சந்தை மதிப்பு, வழிகாட்டு மதிப்பு, உள்ளாட்சி நிர்வாகங்களால் வசூலிக்கப்படும் சொத்து வரி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனங்கள், வீட்டுக் கடன் அளிக்கும் வணிக வங்கிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் விஞ்ஞானபூர்வமாக இந்த ரெசிடெக்ஸ் குறியீடு வெளியிடப்படுகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாகக் கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய அரசு, தேசிய வீட்டு வசதி வங்கி, ரிசர்வ் வங்கி ஆகியவை இணைந்து ரெசிடெக்ஸ் குறியீட்டு முறையை அறிமுகம் செய்தன. இது இந்தியா முழுமைக்கான குறியீடு அல்ல; சில நகரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட குறியீடு. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இந்தக் குறியீடு அறிமுகமானது. தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய இரு நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
நாடு முழுவதும் 26 நகரங்களில் வீடு, மனை மதிப்புகளின் தகவல்களை ரெசிடெக்ஸ் குறியீடு மூலம் தேசிய வீட்டு வசதி வங்கி மக்களுக்கு வழங்கிவருகிறது. 2007-ம் ஆண்டில் அடிப்படை புள்ளிகளைக் கொண்டு தற்போது ஒவ்வொரு காலாண்டுக்கோ அல்லது அரையாண்டுக்கோ வீடு, மனை மதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்தக் குறியீட்டின் மதிப்பு மூலம் வீடு, மனை வாங்குவதை முடிவு செய்யலாம். நாம் வீடு வாங்க உத்தேசித்துள்ள பகுதியில் சொத்தின் தற்போதைய விலை என்ன? 3 மாதங்களுக்கு முன்பு என்ன விலை? சொத்தின் விலை குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா போன்ற தகவல்களைக் கொண்டு குறிப்பிட்ட சொத்தை வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்யலாம்.
பொதுவாக சொத்து விற்பனை தரகர்கள், ரியல் எஸ்டேட்காரர்களின் தலையீடு அதிகம் இருக்கும். இவர்கள் மூலம் அணுகும்போது, அவர்கள் அளிக்கும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று ஆராய முடியாது. வீட்டின் விலையை இஷ்டத்துக்கு அதிகரித்துச் சொல்லவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தேசிய வீட்டு வசதி வங்கி அளிக்கும் தகவல் ஓரளவுக்கு ஆதாரபூர்வமானது. வீடு அல்லது மனை வாங்கும் முன்பு ரெசிடெக்ஸ் குறியீடுகளைப் பார்த்துச் சென்றால், அதன் அடிப்படையில் வீட்டை விற்பவர்களிடம் நாம் அடித்துப் பேச வாய்ப்பு கிடைக்கும்.
தற்போதைய நிலையில் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான குறியீடுகளே தேசிய வீட்டு வசதி வங்கியால் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நிலவரப்படி சென்னையில் 364 புள்ளிகளாகக் குறியீடு உள்ளது. கோவையில் 179 புள்ளிகளாக உள்ளது. 2007-ம் ஆண்டு நிலவரப்படி இந்த இரு நகரங்களின் அடிப்படைப் புள்ளிகள் 100 தான். கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் இரண்டரை மடங்காகவும், கோவையில் அரை மடங்கு அளவும் சொத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் தள்ளாடிவருகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகமல் இருந்து வருகின்றன. ஆனால், சொத்தின் விலை மட்டும் குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெசிடெக்ஸ் குறியீடு வெளியாகாமல் இருப்பதால் 2015-ம் ஆண்டு நிலவரமே இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் 2016-ம் ஆண்டு வரை குறியீடு வெளியிடும்போது சொத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.
மேலும் தற்போதுள்ள 26 நகரங்கள் என்ற எண்ணிக்கை 100 நகரங்களாக அதிகரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், நகரங்களின் எண்ணிக்கை இதுவரை அதிகரிக்கப்படவில்லை. நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இந்தக் குறியீடு மூலம் பிற நகரவாசிகளும் பயன் அடைவார்கள். ரெசிடெக்ஸ் குறியீடுகளை நீங்கள் பார்க்க விரும்பினால் >http://www.nhb.org.in/Residex/Data&Graphs.php என்ற வீட்டு வசதி வங்கியின் இணையதளத்தில் பார்க்காலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT