Published : 03 Jun 2017 09:56 AM
Last Updated : 03 Jun 2017 09:56 AM
ஊஞ்சல்கள் மகிழ்ச்சியாகச் சுற்றித் திரிந்த குழந்தைப் பருவத்தின் அடையாளம். குழந்தைகளைக் குதூகலிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டில் பெரியவர்கள் இளைப்பாறுவதற்கும் ஊஞ்சல் சிறந்த இடமாக இருக்கிறது. மனதை உடனடியாக லேசாக்குவதற்கு ஊஞ்சலாடுவது சிறந்த வழி. வீட்டுக்குள் ஊஞ்சல் அமைப்பது என்பது இந்திய வீடுகளில் காணப்படும் பாரம்பரியமான வழக்கம்தான். இப்போது பாரம்பரிய மர ஊஞ்சல்களோடு நவீன நகர்ப்புற வீடுகளுக்கேற்ற வடிவமைப்புகளில் நவீன ஊஞ்சல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. வீட்டில் ஊஞ்சல் அமைப்பதற்கான சில வழிகள்:
வரவேற்பறையில் அமைக்கலாம்
வீட்டில் ஊஞ்சலைப் பொருத்துவதற்கு எப்போதும் சிறந்த இடமாக இருப்பது வரவேற்பறைதான். உங்களுடைய அறைக்கலன்களோடு எல்லாவிதங்களிலும் (நிறம், உயரம் உள்ளிட்டவை) பொருந்தும்படி ஊஞ்சலைத் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம். ஒருவேளை, உங்களுக்குப் பாரம்பரியமான மரஊஞ்சல் பிடிக்கவில்லையென்றால் சமகால வடிவமைப்புகளில் வரும் ஊஞ்சலைத் தேர்ந்தெடுக்கலாம். வரவேற்பறையில் ஊஞ்சலைப் பொருத்தும்போது, ஜன்னலுக்கு அருகில் அமைப்பது நல்லது. காற்றோட்டத்துக்கு இது வழிவகுக்கும்.
முற்றத்தில் அமைக்கலாம்
உங்களுடைய வீட்டில் முற்றம் இருந்தால், அங்கே ஊஞ்சல் அமைப்பதனால் அந்த இடத்துக்கே ஒரு புதுப்பொலிவைக் கொடுக்க முடியும். பாரம்பரிய வீடுகளில் முற்றத்தை ஊஞ்சல் அமைப்பதற்குச் சிறப்பான வகையில் பயன்படுத்தியிருப்பார்கள். இப்போது பெரும்பாலான வீடுகளில் முற்றங்கள் அமைப்பதற்கு வசதியில்லை. முற்றம் அமைக்க வசதியிருப்பவர்கள் ஊஞ்சலுடன் சில செடிகளையும் அமைத்து ஒரு பிருந்தாவனத்தை வீட்டுக்குள்ளே உருவாக்கலாம்.
ஊஞ்சலில் படுக்கை
படுக்கை அமைப்புடன் இருக்கும் பிரத்யேகமான ஊஞ்சல்கள் இப்போது பிரபலமாக இருக்கின்றன. இதை வைப்பதற்கு இட வசதி தேவைப்படும். இந்தப் படுக்கை ஊஞ்சலை பால்கனியில் வைத்தால் போர்வை, தலையணையுடன் இயற்கையான காற்றோட்டத்துடன் தூங்கலாம். அப்படியில்லாமல் படுக்கையறையிலேயே இந்தப் படுக்கை ஊஞ்சலை வடிவமைக்க நினைத்தால் உங்களுடைய வீட்டின் பொறியாளருடன் கூரையின் வலிமைத்தன்மையைப் பற்றி கலந்தாலோசித்து வடிவமைக்கலாம்.
அலங்காரமான ஊஞ்சல்
வீட்டுக்குப் பாரம்பரியமான தோற்றத்தைக் கொடுக்க நினைப்பவர்கள் அலங்காரமான மர ஊஞ்சலைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த ஊஞ்சலை அமைப்பதற்கும் சற்று பெரிய இடம் தேவைப்படும். வீட்டுக்குப் பாரம்பரியம், ஆடம்பரம் என இரண்டு தோற்றத்தையும் இந்த ஊஞ்சல் கொடுக்கும்.
மூங்கில் ஊஞ்சல்
இப்போது மூங்கில் ஊஞ்சல்கள் விதவிதமான வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. இந்த ஊஞ்சல்களைப் பராமரிப்பதும் பயன்படுத்துவதும் எளிமையானது. இதை வீட்டில் நீங்கள் விரும்பும் இடத்தில் அமைத்துக்கொள்ளலாம். பெரிதாக எந்தத் திட்டமிடலும் இதற்குத் தேவையில்லை. பால்கனி, படுக்கையறை, வரவேற்பறை எனப் பிடித்த இடத்தில் இதைப் பொருத்திக்கொள்ளலாம். இந்த மூங்கில் ஊஞ்சல்களின் விலையும் குறைவு என்பதால் பெரும்பாலானவர்கள் இவற்றை விரும்பி வாங்குகிறார்கள்.
தொட்டில்கள்
இதுவரை பால்கனியிலும், தோட்டத்திலும் அமைக்கப்பட்டுவந்த தூங்கும் தொட்டில்களை (hammock) இப்போது வீட்டுக்குள்ளும் அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை வரவேற்பறை, படுக்கையறை, பால்கனி என எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். இந்தத் தொட்டிலைப் பொருத்துவதற்கு முன்பு, வீட்டின் உத்திரமும், தூண்களும் அதற்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். மதிய நேரங்களில் குட்டித் தூக்கம் போட விரும்புபவர்கள் இந்தத் தூங்கும் தொட்டிலைத் தேர்ந்தெடுக்கலாம்.
உலோக ஊஞ்சல்
ஊஞ்சலில் ஆட வேண்டும் என்று விரும்பும் பெரியவர்களுக்கு ஏற்றது உலோக ஊஞ்சல்தான். குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு உலோக ஊஞ்சல் ஏற்றதாக இருக்கும். இளைப்பாறல் மட்டுமல்லாமல் குதூகலத்துடன் விளையாடுவதற்கு இந்த உலோக ஊஞ்சல் பயன்படும்.
தோட்டத்திலும், மாடியிலும், பால்கனியிலும் எந்த மாதிரியான ஊஞ்சல்களை வேண்டுமானாலும் பொருத்தலாம். ஊஞ்சல்களைத் தேர்ந்தெடுக்கும்போது வழக்கமான வடிவமைப்புகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் இப்போது சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் சமகால வடிவமைப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் புதிய வடிவமைப்புகள் வீட்டின் தோற்றத்தையே அட்டகாசமாக மாற்றிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT