Published : 13 Aug 2016 12:00 PM
Last Updated : 13 Aug 2016 12:00 PM

அனுபவ பாத்தியதையின் மூலம் நிலத்தைச் சொந்தமாக்க முடியுமா?

ஒரு வீடும், 20 செண்ட் நிலமும் எனது மாமனாரின் சொத்துக்கள். அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இவற்றில் வீடு என் மாமனாரின் பெயரிலும் நிலம் என் மாமியாரின் பெயரிலும் உள்ளன. என் கணவருக்கு இரு அக்காமார் உண்டு. இந்நிலையில் இந்தச் சொத்துகளை எப்படிப் பாகப் பிரிவினை செய்வது? அவரது அக்காமார்களுக்கு எப்படிப் பங்கு கொடுப்பது?

- விஜி, சிதம்பரம்.

உங்கள் மாமியார் உயிருடன் இருக்கிறாரா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் மாமனார் மற்றும் மாமியாரின் தாயார்கள் உயிருடன் இருக்கின்றனரா என்றும் நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் மாமியார் உயிருடன் இருக்கிறார், மேலும் உங்கள் மாமனாரின் தாயார் உயிருடன் இல்லை என்று வைத்துக்கொண்டால், உங்கள் கணவர், அவரது இரு சகோதரிகள் மற்றும் உங்கள் மாமியார், ஆகிய நால்வருக்கும் உங்கள் மாமனாரின் சொத்தில் தலா 4-ல் ஒரு பாகம் சட்டப்படி உரிமை உள்ளது. உங்கள் மாமியாரும் உங்கள் மாமனாரின் தாயாரும் உயிருடன் இல்லை என்று வைத்துக்கொண்டால், உங்கள் கணவர் மற்றும் அவரது இரு சகோதரிகளுக்கு உங்கள் மாமனாரின் சொத்தில் தலா 3-ல் ஒரு பாகம் சட்டப்படி உரிமையுள்ளது. உங்களது மாமியாரின் சொத்தைப் பொறுத்தவரையில், உங்கள் மாமியாரும் அவரது தாயாரும் உயிருடன் இல்லை என்று வைத்துக்கொண்டால் உங்கள் கணவர் மற்றும் அவரது இரு சகோதரிகளுக்குத் தலா 3-ல் ஒரு பாகம் சட்டப்படி உரிமையுள்ளது. மாமியார் உயிருடன் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் அவர் காலமான பிறகே அவருடைய சொத்தில் உங்கள் கணவர் மற்றும் அவரது வாரிசுகளுக்குச் சட்டப்படி உரிமை வரும்.

எனது தந்தைக்கு நாங்கள் 6 குழந்தைகள். என்னோடு சேர்த்து இரு ஆண்கள், நான்கு பெண்கள். எங்கள் ஆறு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை சுயசம்பாத்தியத்தின் மூலம் வாங்கிய வீட்டையும் எனது தந்தைக்கு அவரது தாயாரின் மூலம் வந்த காலி மனையையும் என் பெயருக்குக் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான செட்டில்மெண்ட் செய்துவைத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு எனது தந்தையின் சுயசம்பாத்திய சொத்தான வீட்டின் தான செட்டில்மெண்ட்டை ரத்து செய்துவிட்டார். இந்நிலையில் எனக்கு தான செட்டில்மெண்டில் கிடைத்த எனது தந்தையின் தாயார் வழி நிலத்தில், வங்கிக் கடன் பெற்று ஒரு வீடு கட்டியிருக்கிறேன். இந்த வீட்டுக்கான சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவற்றை என் பெயருக்கு மாற்றி நானே கட்டிவருகிறேன். தந்தை மூலமாகவோ என் உடன் பிறந்தவர்களாலோ இந்த மனைக்கு பிற்காலத்தில் ஏதெனும் பிரச்சினை ஏற்படுமா?

- எம்.எஸ்.ராஜன், திருச்சி

உங்கள் தந்தைக்கு அவரது தாயார் மூலம் வந்த காலி மனை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் தந்தைக்கு அந்த காலி மனை மீது எவ்வாறு உரிமை வந்தது என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் தந்தையின் தாயாருக்கு அந்த சொத்து சுயசம்பாத்திய சொத்தாக இருந்து, உங்கள் தந்தையின் தாயார் எழுதி வைத்த உயில் அல்லது தான செட்டில்மெண்ட் மூலம் உங்கள் தந்தைக்கு அந்த காலி மனை மீது உரிமை வந்திருந்தால், உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு அந்த காலி மனையின் மீது சட்டப்படி எந்த உரிமையும் எந்த காலத்திலும் வராது. உங்கள் தந்தையின் தாயாருக்கு அந்த சொத்து மரபுரிமை மூலம் கிடைத்து, அவரிடமிருந்து உங்கள் தந்தைக்கும் மரபுரிமை மூலம் கிடைத்திருந்தால், உங்கள் தந்தை உங்களுக்கு எழுதி வைத்துள்ள செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி செல்லாது. மேலும் உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு அந்தக் காலி மனையின் மீது சட்டப்படி உரிமை உண்டு.

எனது பெற்றோருக்கு இரண்டு பிள்ளைகள்; நானும் தங்கையும். எனது தந்தை தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டை முதலில் எனது தாயின் பேரில் பதிவுசெய்தார். பின்பு வங்கிக் கடன் வாங்கும் பொருட்டுத் தன் பெயரில் மாற்றிக்கொன்டார். அவர் வாங்கிய வங்கிக் கடன் முடிந்த பிறகு, நான் எனது தந்தையை இணைக் கடன்தாரராகச் (joint borrower) சேர்த்து எனது பெயரில் வங்கிக் கடன் வாங்கியும் எனது சேமிப்பை சேர்த்தும் முதல் தளத்தைக் கட்டினேன். தற்போது என் பெற்றோர் முதல் தளத்தில் வசித்துவருகின்றனர்.

எனது தங்கை திருமணத்திற்குப் பிறகு, குடும்பச் சூழலால் கணவருடன் எனது வீட்டுக்கே வந்து நிரந்தரமாகத் தரைத் தளத்தில் தங்கி விட்டார். தற்சமயம் எனது தந்தையார் எனக்கும் எனது தங்கைக்கும் சரிசமமாகச் சொத்தைப் பங்கிட நினைக்கிறார். அதாவது மேல் தளத்தை எனக்கும், தரைத் தளத்தை எனது தங்கைக்கும் எனப் பிரிக்க நினைக்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தாயும் தந்தையும் உயிரோடு உள்ளனர். இந்தச் சொத்தினை எவ்வாறு பிரச்சினை இன்றிப் பிரிக்க முடியும்? ஒருக்கால் எனது தந்தை தங்கையின் பெயரில் முழுச் சொத்தையும் மாற்றினால் நான் வீடு கட்டுவதற்குச் செய்த தொகையினைச் சட்டப்படி பெற முடியுமா? தந்தையின் மறைவுக்குப் பிறகு எவ்வாறு சொத்தைப் பிரிக்க வேண்டும்? அல்லது இப்பொழுதே சட்டபடி தீர்வு காண முடியுமா?

- இரா. கார்த்திகேயன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள சொத்தில் அடிமனையும், தரைத் தள வீடும் சட்டப்படி உங்கள் தந்தைக்கு உரிமையானவை. முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டினைப் பொறுத்தவரையில் நீங்கள் வங்கிக் கடன் பெற்றுக் கட்டியுள்ளதால் அந்த முதல் தள வீடு மட்டுமே (அடி மனையினை சேர்க்காமல்) சட்டப்படி உங்களுக்கு உரிமையானது. உங்களது தந்தைக்கு உரிமையான அடிமனையினையும் தரைத் தள வீட்டினையும் பொறுத்தவரையில் அது அவரது சுய சம்பாத்தியச் சொத்து. ஆகையால் அதனை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.

ஒருவேளை உங்கள் தந்தை மொத்த சொத்தினையும் உங்கள் தங்கைக்கு தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தால் நீங்கள் முதல் தள வீட்டினைக் கட்டுவதற்குச் செலவு செய்த தொகையினைச் சட்டப்படி திரும்பப் பெற முடியும். தந்தை மற்றும் தாயாரின் காலத்திற்குப் பிறகு சொத்தினைப் பிரிப்பது சம்பந்தமாக உங்களுக்கும் உங்கள் தங்கைக்கும் சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை என்றால் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தில் பாகப்பரிவினை பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் செய்து தீர்வு பெறலாம். இப்போதே தீர்வு காணச் சட்டத்தில் இடமில்லை.

எனது தாத்தாவுக்கு அவரது தந்தையிடமிருந்து பாகப் பிரிவினை மூலம் பெற்ற நிலம் உள்ளது. எனது தாத்தா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது தாத்தாவுக்கு இரண்டு குழந்தைகள். ஓர் ஆண் (எனது தந்தை) ஒரு பெண். எனது தாத்தாவின் நிலத்தை இன்னும் பாகப் பிரிவினை செய்யவில்லை.

எனது பாட்டி நலமாக உள்ளார். எனது தாத்தாவின் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி எனது பாட்டிக்கு உரிமை உள்ளது. அதை மகன் வழிப் பேரனான எனக்குக் கொடுக்க நினைக்கிறார். பாகப் பிரிவினை செய்யாத நிலத்தை எனது பெயருக்கு செட்டில்மென்ட் அல்லது கிரயம் செய்து கொடுக்க முடியுமா? அல்லது உயில் எழுதிவைக்க முடியுமா? (தாத்தாவின் நிலத்திற்கு இன்னும் வாரிசுச் சான்றிதழ் வாங்கவில்லை. இறப்புச் சான்றிதழ் மட்டுமே உள்ளது)

- முத்துரத்தினம், கோவை

பாகப் பிரிவினை செய்யாத நிலத்தை உங்கள் பாட்டி உங்கள் பெயருக்கு செட்டில்மெண்ட் அல்லது கிரையம் செய்து கொடுக்க முடியாது. உயிலும் எழுதி வைக்க முடியாது.

என் அம்மாவுடைய தம்பிக்கு அரசுக் குடியிருப்பு வீடு ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு, அவர்கள் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட வீடு அது. அந்த வீட்டைப் பணம் வாங்கிக்கொண்டு என் அம்மாவின் பெயருக்கு உயில் எழுதி வைத்துவிட்டார் அவரது தம்பி. இந்நிலையில் அவர் எதிர்பாராத விதமாக நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். அந்த வீட்டுக்குப் பட்டா இல்லை. இந்நிலையில் அந்த வீட்டை என் அம்மாவின் வாரிசுகள் சொந்தமாக்க முடியுமா? பட்டா வாங்க முடியுமா? எதிர் காலத்தில் ஏதாவது சட்டச் சிக்கல் வர வாய்ப்புள்ளதா? அதை எப்படி வாரிசு பெயருக்கு மாற்றுவது?

- முருகன், கிருஷ்ணகிரி

எதிர்பாராத விதமாக இறந்து போனது உங்கள் தாயாரா அல்லது அவரது தம்பியா என்று நீங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. உங்கள் மாமா உயிருடன் இருக்கிறார் என்றும் உங்கள் அம்மா இறந்துவிட்டார் என்று வைத்துக்கொண்டால், அந்த வீட்டை உங்கள் அம்மாவின் வாரிசுகள் சொந்தமாக்க முடியாது. பட்டா வாங்க முடியாது. உயில் எழுதியவர் உயிருடன் இருக்கும்போதே அந்த உயில் மூலம் பயன் பெற இருந்தவர் இறந்து போய்விட்டால், அந்த உயில் சட்டப்படி செல்லாது. தற்போது உங்கள் மாமா மீண்டும் உங்கள் அம்மாவின் வாரிசுகளுக்குச் சாதகமாக வேறு ஓர் உயில் எழுதிவைத்து, அந்த உயிலும் உங்கள் மாமாவின் காலத்திற்குப் பிறகு அமலுக்கு வந்த பிறகே உங்கள் அம்மாவின் வாரிசுகள் அந்த வீட்டின் உரிமையாளர்கள் ஆவீர்கள். அவ்வாறு உங்கள் மாமா வேறு உயில் ஏதும் எழுதிவைக்காமல் காலமாகிவிட்டார் என்றால், அந்த வீடு உங்கள் மாமாவின் வாரிசுகளுக்கே சொந்தம். ஒரு வேளை அந்த வீட்டின் சுவாதீனத்தில் உங்கள் அம்மாவின் வாரிசுகளில் யாராவது ஒருவரோ அல்லது அனைவருமோ இருந்தால் எதிர்காலத்தில் உங்கள் மாமாவின் வாரிசுகள் மூலம் கண்டிப்பாகச் சட்டச் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடமிருந்து காலி மனை வாங்கினோம். எங்களுக்கு மனை விற்றவருக்கு இந்த இடம் நிலப் பரிமாற்றத்தின் மூலம் இன்னொருவரிடமிருந்து பெறப்பட்டது. அவரும் பத்திரப் பதிவு செய்யவில்லை. நாங்களும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் தற்பொழுது அதே இடத்தில் வீடு கட்டி 7ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். முதல் நபரிடம் கேட்டால் அனுபவ பாத்தியமாக வைத்து, வீட்டு ரசீது போட்டு வாருங்கள் உங்களுக்குச் சொந்தமாகிவிடும் என்கிறார். இதற்கு ஏதாவது சட்டபூர்வமான தீர்வு உண்டா? தற்பொழுது பத்திரப் பதிவு செய்தால் பத்திரப் பதிவுக்கான தொகையை வீட்டுக்கும் சேர்த்துதான் பதிவுசெய்ய வேண்டுமா? எங்களைப் போன்று இந்தப் பகுதியில் 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு என்ன தீர்வு?

- ராஜா

உங்களுக்கு வாய்வழியாகக் காலி மனையினை விற்றவருக்கும் (முதலாமவர்), அவருடன் தனது நிலத்தினை பரிமாற்றம் செய்துகொண்டவருக்கும் (இரண்டாமவர்) இடையில் ஏற்பட்டுள்ள நிலப் பரிமாற்றமானது, முத்திரைத் தாளில் எழுதப்பட்டு, உரிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாததால், தற்போதும் நீங்கள் வீடு கட்டிக் குடியிருக்கும் அடிமனையின் உரிமையாளர் இரண்டாமவர்தான். அதனால் அந்த அடிமனையினைப் பொறுத்து முதலாமவர் வாய்வழியாக உங்களுக்குச் செய்த விற்பனை சட்டப்படி செல்லாது. ஏழு ஆண்டுகளாக நீங்கள் வீடு கட்டி அனுபவித்து வருவதாலும், அனுபவ பாத்தியதையைக் கொண்டு மேற்படி வீட்டினைப் பொறுத்து வீட்டு வரியினை உங்கள் பெயரில் கட்டுவதாலும் அந்த அடிமனைக்கு நீங்கள் எப்போதுமே உரிமையாளர் ஆக முடியாது. இதற்குச் சட்டபூர்வமான தீர்வு என்பது இரண்டாமவரிடமிருந்து அடி மனையினை நீங்கள் கிரையம் பெறுவதும் அந்தக் கிரையப் பத்திரத்தினைப் பதிவுசெய்வதுமே ஆகும். கிரையப் பத்திரத்தினைப் பதிவுசெய்வதற்கு அடி மனையின் தற்போதைய சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வையும் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டியதிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x