Published : 18 Jun 2016 11:44 AM
Last Updated : 18 Jun 2016 11:44 AM
பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நகருக்குள் நேரிடையாக வர வேண்டுமென்றால் பூந்தமல்லிதான் நுழைவாயில். சென்னை மேற்குப் பகுதிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்துள்ள பூந்தமல்லி ஏராளமான போக்குவரத்து, தொழிற்சாலை வசதிகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விருப்பத் தேர்வாகிவிட்ட பூந்தமல்லியின் ரியல் எஸ்டேட் நிலவரத்தைப் பார்ப்போம்.
மேற்கே மட்டும் நிலம்
சென்னையில் ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை நான்கு மண்டலங்களாக உள்ளன. வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய சென்னை எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு மண்டலங்களிலும் ரியல் எஸ்டேட் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறது.
இவற்றில் நுங்கம்பாக்கம், போட்கிளப், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், தி. நகர், மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், அடையார் போன்ற மத்திய சென்னைப் பகுதிகளிலும், தண்டையார்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், அயனாவரம் போன்ற வட சென்னைப் பகுதிகளிலும் புதிதாக வீடுகளைக் கட்டவோ, புதிய வீட்டுத் திட்டங்களை அறிவிக்கவோ எங்குமே நிலம் இல்லை. இந்தப் பகுதிகளில் நெருக்கமாகக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இதனால், மேற்கு சென்னையை நோக்கி ரியல் எஸ்டேட் கட்டுநர்களின் பார்வைத் திரும்பியிருக்கிறது.
வளர்ச்சியும் வசதிகளும்
மேற்கு சென்னைக்குட்பட்ட பெரும்புதூர், அம்பத்தூர், முகப்பேர், போரூர், பூந்தமல்லி, நந்தம்பாக்கம், நொளம்பூர், குன்றத்தூர் போன்ற பகுதிகளில் வலம் வந்தால் ஏராளமான கட்டுமானத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மேற்கு சென்னையில் அமைக்கப்பட்ட வெளி வட்ட சாலையின் மூலம் அந்தப் பகுதி வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதில் குறிப்பாக பூந்தமல்லியும் அதன் சுற்றுவட்டாப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்துவருகிறது. வீடுகளை வாங்கும் அளவுக்கு விலையும் ஏற்ற வகையில் இருப்பதால் பூந்தமல்லி இப்போது மக்களின் விருப்பத் தேர்வாக மாறிவருகிறது.
பூந்தமல்லி சென்னையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. முன்பு இது சென்னயின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாக இருந்தது. இன்றோ மேற்கு சென்னையின் நுழைவாயிலாக மாறிவிட்டது. சென்னையிலிருந்து ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளை நேரிடையாக இணைக்கும் இணைப்புச் சாலை பூந்தமல்லிதான்.
பூந்தமல்லியிலிருந்து போரூர் வழியாகத் தென் தமிழகத்தை இணைக்கும் ஜி.எஸ்.டி. சாலையை எளிதாகக் கடந்துவிட முடியும். விமான நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே எனப் போக்குவரத்து வசதிகள் நிரம்பிய பகுதி. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு எளிதான போக்குவரத்து வசதிகள் உள்ளன.
திட்டங்கள் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த துணைக்கோள் நகரமான திருமழிசை பூந்தமல்லிக்கு அருகேதான் உள்ளது. பூந்தமல்லியிருந்து கத்திப்பாரா, வடபழனி போன்ற பகுதிகளை இணைக்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டமோனோ ரயில் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கிவிட்டது. பூந்தமல்லியைச் சுற்றி ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளன.
தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதி
பூந்தமல்லியைச் சுற்றி குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுபாக்கம், வேலப்பன்சாவடி என நிறைய பகுதிகள் உள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன. தொழிற்சாலைகள் நிறைந்த இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீ பெரும்புதூர், ஓரகடம் போன்ற பகுதிகள் பூந்தமல்லியிருந்து அரை மணி முதல் ஒரு மணி நேர தூர பயணத்தையே கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியில் பணி செய்பவர்கள் பூந்தமல்லியிருந்து எளிதாகச் சென்றுவிடலாம்.
கட்டுமானத் திட்டங்கள்
இப்படி நிறைய வசதிகள் பூந்தமல்லி பகுதியில் இருப்பதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இந்தப் பகுதியில் புதிய வீட்டுக் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு மேற்கு சென்னையில் சுமார் 77 சதவீதக் கட்டுமானத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்டத்தக்க அளவு பூந்தமல்லியிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகளும் அணிவகுப்பதால் பூந்தமல்லியும் அதைச் சுற்றியுள்ள குமணன்சாவடி, கரையான்சாவடி, வேலப்பன்சாவடி போன்ற பகுதிகள் வளர்ச்சி கிடுகிடுவென உள்ளது.
ரியல் எஸ்டேட் நிலவரம்
இந்தப் பகுதிகளில் புதிய மனைகள் இல்லை எனும் அளவுக்கு ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும், பூந்தமல்லி, வேலப்பன்சாவடி பகுதிகளில் மறுவிற்பனை மனைகள் தாரளமாகக் கிடைக்கின்றன. சென்னையின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் இங்கு மனைகளின் விலை குறைவாகவே இருக்கிறது. இதேபோல பூந்தமல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையும் சமாளிக்கும் வகையிலேயே உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பூந்தமல்லியில் வீடுகள், மனைகளின் விலை உயரலாம் என்பதால், முதலீடாக வாங்குபவர்களுக்கு பூந்தமல்லி நல்ல தேர்வாக இருக்கும்.
சென்னை நகரை விட்டுக் கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் வீடு, மனைகளை இங்கே மக்கள் வாங்கவே செய்கிறார்கள். சென்னயின் பிற புறநகர்ப் பகுதிகளில் உள்ளது போல குடிநீர், கழிவு நீர் வடிகால், மழை நீர் வடிகால் போன்ற வசதிகளில் சிறிது குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன.
ஒரு பகுதி வேகமாக வளர்ந்து வரும்போது இதுபோன்ற வசதிகளைச் செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் தாமாகவே முன்வரும் என்பதால், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பூந்தமல்லியில் மனை மற்றும் வீடுகளை மக்கள் வாங்குகிறார்கள்.
வளர்ச்சி அடையும் பூந்தமல்லி
கடந்த இரு ஆண்டுகளாக இந்திய ரியல் எஸ்டேட் துறை பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் இந்திய நகரங்களிலேயே சென்னை மட்டும்தான் இந்தப் பெரும் பாதிப்பிலிருந்து தப்பிய நகரம் என ரியல் எஸ்டேட் நிபுணர்களால் புகழப்படும் நகரம் எனப் பெயரை எடுத்தது.
இதை அந்தச் சமயத்தில் வெளிவந்த பல ரியல் எஸ்டேட் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நைட் ஃப்ராங் (Knight Frank) போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளும் உறுதிப்படுத்தின. சென்னையின் வெற்றிக்குப் பின்னால் உள்ள பகுதிகளுள் குறிப்பிடத்தகுந்த பகுதி பூந்தமல்லி ஆகும்.
சென்னை ரியல் எஸ்டேட்டை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கிறது. வடசென்னைப் பகுதிகள் தண்டையார்பேட்டை, பெரம்பூர், அயனாவரம் போன்றவற்றிலும் புதிதாக வீட்டுத் திட்டங்கள் தொடங்க நிலம் இல்லை. சென்னையைப் பொறுத்தமட்டில் மேற்கு சென்னைப் பகுதி தென்சென்னைப் பகுதி ஆகியவை வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதிகள் எனச் சொல்லப்படுகிறது. மேற்குச் சென்னையில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதிகளுள் முக்கியமானது பூந்தமல்லி.
அதுபோலச் சென்னையில் 26 சதவீதம் வீடுகள் மேற்குச் சென்னைப் பகுதியில்தான் கட்டப்பட்டுள்ளன. வடசென்னையிலும் நகரின் மிக அதிக விலையுள்ள மத்திய சென்னையிலும் சேர்த்து 8 சதவீதம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன.
மேற்கு சென்னையைக் காட்டிலும் தென் சென்னையில்தான் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தென்சென்னைப் பகுதியில் 75 சதவீதமாக இருந்த ரியல் எஸ்டேட் வளர்ச்சி, 69 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாறாக பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு சென்னையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி, 22 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வெளிவட்டச் சாலை (அவுட்டர் ரிங் ரோடு) போன்ற பல திட்டங்களால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. வெளிவட்டச் சாலையால் குத்தம் பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்துவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT