Published : 30 Jul 2016 12:21 PM
Last Updated : 30 Jul 2016 12:21 PM
ஒரு வீட்டை எதற்கு வாங்குகிறோம்? என்னங்க கேள்வி இது குடியிருக்கத்தானே எல்லோரும் வீடு வாங்குகிறோம் என்கிறீர்களா. உங்கள் பதில் சரிதான் ஆனால் அது முழுமையான பதிலா என யோசித்துப் பாருங்கள்.
சிலர் முதலீட்டு நோக்கத்திலும் வீட்டை வாங்கத்தானே செய்கிறார்கள். உண்மையில் வீட்டை முதலீட்டு நோக்கத்தில் வாங்குவது எப்போதும் லாபகரமான விஷயம் தானா என்பதைச் சிந்திக்க வேண்டும். இருபத்தைந்து லட்சம் முப்பது லட்சம் என லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து ஒரு வீட்டை வாங்குகிறோம். அது நாம் குடியிருப்பதற்கானதாக இருந்தால் அதன் விலை குறித்த விவரங்கள் குறித்துப் பெரிதாக விவாதிக்கத் தேவையில்லை. ஏனெனில் அது உணர்வு தொடர்பானது. வீட்டை வாங்கிய பின்னர் அதனால் ஏற்படும் பொருளாதார நிலைமையை நம்மால் சமாளிக்க முடியுமா என்பதை மட்டும் ஆலோசித்தால் போதுமானது. ஆனால் முதலீட்டுக்காக வீட்டை வாங்க முற்படும்போது பல விஷயங்களையும் அலசிப் பார்த்துத் தான் செயலில் இறங்க வேண்டும். ஏனெனில் பல லட்சம் லாபம் கிடைக்கும் என்று யாரோ கூறுவதை வைத்து லட்சக்கணக்கான பணத்தைச் செலவழித்து வீட்டை வாங்கிவிட்டுப் பின்னர் அதை விற்க முடியாவிட்டாலோ அல்லது குறைந்த விலைக்கு விற்க நேர்ந்தாலோ நஷ்டமே ஏற்படும்.
இப்போது வீட்டை முதலீட்டு நோக்கத்தில் வாங்கினால் நமக்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதை ஆலோசிக்க வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரையில் வீட்டின் விலை அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். புறநகர்ப் பகுதியிலும் நிறைவடைந்த குடியிருப்புகள் விற்கப்படாத நிலையில் இருக்கின்றன. காரணம் அதிகப்படியான விலைதான் என்று கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறை கொடிகட்டிப் பறக்கிறது என இப்போது சொல்வது கடினம். அதன் மவுசு இறங்குமுகத்திலேயே இருக்கிறது. இந்த நிலைமை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது இன்னும் சில ஆண்டுகளுக்கு இப்படியே தொடர வாய்ப்புள்ளது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள்.
வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்கிறார்கள். காரணம் வீடுகளின் விலை சராசரியான வருமானம் உள்ளோர் வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. விலை அதிகமாக இருப்பதால் அது குறையட்டும் என வீடுகளை வாங்க விரும்புவோர்கள் காத்திருக்கிறார்கள். கட்டுப்படியாகும் விலை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அது அவரவர் வருமானத்தையும் வீட்டுக் கடனின் வட்டியையும் பொறுத்தது. வீட்டுக்கடனுக்கான வட்டி குறைக்கப்படும்போது அது வாங்கும் திறனை வளர்க்கும். வட்டி குறைக்கப்பட்டால் மாதத் தவணைத் தொகையும் குறையும். ஆகவே பலர் வீடுகளை வாங்க வரலாம். ஆகவே வாங்கும் திறன் அதிகரிக்க வாய்ப்புண்டு. வருமானம் அதிகமாகும்போது வாங்கும் திறன் அதிகரிக்கும். ஆனால் இந்தக் காரணங்களால்கூட வீடு வாங்குவோரின் எண்ணிக்கை இப்போது அதிகரிக்கவில்லை என்பதே யதார்த்தம் என்கிறார்கள் நிபுணர்கள். காரணமாக அவர்கள் சொல்வது வீடுகளின் குறிப்பிடத் தகுந்த விலையேற்றம்.
பொதுவாக ஒரு வீட்டை முதலீட்டு நோக்கத்தில் வாங்கி என்ன செய்வீர்கள்? ஒன்று வாங்கி நல்ல விலைக்கு விற்பீர்கள். அல்லது அந்த வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கப் பார்ப்பீர்கள். வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்க முயலும்போது வாடகையானது வீட்டுக்காகச் செலுத்தும் மாதாந்திரத் தவணைத் தொகையைவிட அதிகமாக இருந்தால் நல்லது. ஆனால் இப்போது நிச்சயமாக மாதாந்திரத் தவணையைவிட அதிகமாக வாடகை கிடைக்க வாய்ப்பில்லை.
பெரிய நகரங்களில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக ரியல் எஸ்டேட் நிலைமை மேம்பட்டிருக்கும் சூழலில் கையிருப்பு வீடுகளை விற்பதற்கு 8 முதல் 12 மாதங்கள் ஆகும். இப்போதோ கையிருப்பு வீடுகளை விற்பதற்கு மூன்று முதல் நான்கு வருடங்கள் வரை ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அதுவும் புதிய குடியிருப்புகள் அதிகம் அறிமுகப்படுத்தப்படாத நிலையிலேயே இது சாத்தியம். கட்டுமானச் செலவும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆனாலும் வீடுகளின் விலையைக் கட்டுரநர்களால் உயர்த்த முடியாத நிலையில் அவர்கள் கையிருப்பு வீடுகளை விற்கும் முயற்சியில் ஈடுபடலாம்.
ஆகவே இந்தச் சூழலில் புதிதாக வீடுகளை வாங்கி அவற்றை நீங்கள் விற்று லாபம் சம்பாதிப்பது எளிதல்ல. ஆனால் நிபுணர்களில் சிலர் இந்தச் சூழலில் வீடுகளை வாங்குவதையும் ஆதரிக்கிறார்கள். ஏனெனில் வீடுகளை விற்கும் முயற்சியில் உள்ள கட்டுநர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி குறைந்த விலைக்கு வீட்டை வாங்கவும் முடியும். ஆனால் கட்டி முடித்த வீடுகளை வாங்குவதைவிடக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளை, தகுதியான கட்டுநர்களால் கட்டப்படும் வீடுகளை, அதுவும் அதிகம் விலைபோகக்கூடிய இடங்களில் உள்ளதாகப் பார்த்து வாங்குவது உசிதம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் தற்போதைய நிலைமை மேம்படும் தருணத்தில் நீங்கள் வாங்கும் வீடு கட்டி முடிக்கப்படும்போது அது உங்களுக்கு லாபம் தரும் ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT