Published : 11 Oct 2014 12:58 PM
Last Updated : 11 Oct 2014 12:58 PM
சென்னை நகர் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஒருபக்கம் வாகன ஓட்டிகளுக்குச் சிரமம்தான் என்றாலும், பணிகள் பூர்த்தியடையும்போது சென்னையின் போக்குவரத்துத் தேவை பெருமளவு நிறைவேறும் என்ற திருப்தியும் சந்தோஷம் தோன்றுகிறது.
இந்த மெட்ரோ ரயில் சென்னையின் புறநகர் ரயில் இணைக்காத பகுதிகளையும் இணைக்க இருக்கிறது. மேலும் ஆலந்தூரில் இரண்டடுக்கு ஷாப்பிங் காம்ளெக்ஸ் ஒன்றையும் உருவாக்கவுள்ளது. இம்மாதிரி இன்னும் ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுபோன்ற வர்த்தக மையங்களை உருவாக்கும் திட்டமிட்டுள்ளது. பயணிகளும் அருகில் வசிப்பவர்களும் தங்கள் மாலை நேர ஷாப்பிங்கை இனி மெட்ரோ ரயில் காம்ப்ளெக்ஸிலேயே முடித்துக்கொள்ளலாம். அதாவது மெட்ரோ தனது ரயில் நிலையங்களை நகரின் வர்த்தக மையங்களாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறது.
ஆலந்தூர் - கோயம்பேடு ரயில் பாதை பணிகள் முழுமை அடைந்ததும் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் 2 அடுக்கில் இருந்து 9 அடுக்குகள்வரை கொண்ட ஷாப்பிங் மால்களைக் கட்டத் தீர்மானித்துள்ளது. ஆலந்தூர், ஈக்காடுத்தாங்கல், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் இதுபோன்ற மால்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதுபோன்று மால்களில் கடைகளைக் கட்டி வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்குவிட மெட்ரோ உத்தேசித்துள்ளது. ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுவரை உள்ள சாலை வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த 100 அடி சாலையாகும். அதனால் இந்தப் பகுதியில் இது போன்ற மால்களுக்கு நல்ல தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
32 ஆயிரம் சதுர அடி நிலப் பரப்பில் இருந்து 1 லட்சம் சதுர அடி நிலப் பரப்பு வரை மால்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் ஈக்காட்டுதாங்கலில் ஹில்டன் ஹோட்டலுக்கு எதிரில் 1 லட்சம் சதுர அடி அளவிலான மால் அமையவுள்ளது. இது ஒன்பது மாடிக் கட்டிடம். இது இல்லாமல் அரும்பாக்கம் பகுதியில் இரண்டு ஒன்பது மாடிக் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT