Last Updated : 01 Apr, 2017 10:13 AM

 

Published : 01 Apr 2017 10:13 AM
Last Updated : 01 Apr 2017 10:13 AM

சூரிய மின் தகடு அமைக்கிறீர்களா?

புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இல்லத்தில் சூரிய தகடு மின்சாரம் அமைப்பது எப்படி என்று சில அடிப்படை விவரங்களைப் பார்ப்போம். சூரிய மின்சக்தி எப்படித் தயாராகிறது எனத் தொழில்நுட்ப ரீதியாக அல்லாமல் எளிதாக நமக்குத் தேவையான சூரிய மின்சக்தி தொடர்பாக மட்டும் பார்க்கலாம்.

பொதுவாகக் கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிமாகத்தான் இருக்கும். இன்று குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

மின் பயன்பாடு இயல்பாகவே கோடைக்காலத்தில் அதிகமாகும். அதே சமயம் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்போவதில்லை. இந்தக் கோடைக்காலம் மட்டுமல்ல பொதுவாக நமது வீட்டின் மின் தேவையைச் சமாளிக்க நமக்கு இயற்கையே தரும் ஒரு வழிதான் சூரிய மின்னாற்றல்.

பொதுவாக இன்றைக்குப் பெரும்பாலும் பல வீடுகளில் இன்வெட்டர் பொருத்தியிருக்கிறார்கள். மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெட்டரை வைத்துச் சமாளித்து வருகிறார்கள். ஆனால் இந்த இன்வெட்டரில் சேமிக்கப்படும் மின்சாரம் என்பது மின் வாரியம் மூலமாக நமக்குக் கிடைக்கும் மின்சாரம்தான். அதைத்தான் சேமித்துப் பயன்படுத்திவருகிறார்கள். ஆனால் இந்த சூரியத் தகடு (Solar Panel) மின் பற்றாக்குறையையும் சமாளிக்க உதவும். சூரியத் தகடு மற்றும் அதற்கான சார்ஜ் கன்ட்ரோலர் என்ற இயந்திரம் ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி மாட்டினால் நமது மின்தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். உலகிலேயே இந்தியாவில்தான் வருடத்திற்கு அதிகபட்சமாக 300 நாட்கள் முழு அளவிற்கு சூரிய வெளிச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

சாதாரணமாக ஒரு வீட்டில் இன்வெட்டர் வைக்கும்போது மின்சாரம் இல்லாதபோது 2 ஃபேன்கள் 3 லைட்டுகளை 3 அல்லது 4 மணிநேரம் இயங்குவது மாதிரி வைப்பது வழக்கம். இதற்கு ஒரு 150 எ.ஹெச் பேட்டரி மற்றும் 850 வி.ஏ இன்வெர்ட்டர் சரியாக இருக்கும். சூரியத் தகடு வைக்க இதை இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டராக மாற்ற வேண்டும். இதற்குச் சற்றுக் கூடுதலாகச் செலவாகும். 1கேவி சூரியத் தகடு பயன்படுத்த இந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் போதுமானது. 1 கேவி என்பது 1000 வாட்ஸ். இந்த 1000 வாட்ஸ் பேனலில் தினந்தோறும் 5 யூனிட் வரை மினசாரம் சேமிக்க முடியும். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதால் 60 தினங்களுக்கு நாம் 300 யூனிட்கள் வரை மிச்சப்படுத்தலாம்.

லாபம் தரும் செயல்

1000 வாட்ஸ் சூரிய சக்தி பேனல் வாங்க அதன் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து விலை விகிதம் மாறுபடும் சராசரியாக ஒரு யூனிட் சூரியத் தகடு ரூ. 40 முதல் ரூ. 60 வரை இருக்கும். இதன் ஆயுள் காலம் சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாகும். நாம் பயன்படுத்தும் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களின் ஆயுள் காலம் அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து 2 முதல் 4 ஆண்டுகாலம் இருக்கும். பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியதிருக்கும்.

ஆனால் சூரியத் தகடு 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதால் நமது முதலீடு கண்டிப்பாக லாபத்தையே தரும் என உறுதியாக நம்பலாம். சூரியத் தகடு சார்ஜ் கன்ட்ரோலரின் விலையும் அதன் நிறுவனத்தைப் பொறுத்து அமையும். இதுவும் சாராசரியாக ரூ.2000 முதல் 5000 வரை இருக்கும். தற்போது சார்ஜ் கன்ட்ரோலருடன் இணைந்த இன்வெர்ட்டர்களும் கிடைக்கின்றன.

சூரியத் தகடு பொருத்தினால் லாபமா நஷ்டமா என்று கேள்வி வரும். அதைப் பார்ப்போம். 1000 வாட்ஸ் சூரியத் தகடு இணைப்பு கொடுத்த வீட்டுக்கு ஒரு நாளைக்கு சுமார் 5 யூனிட் மிச்சமாகும் என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 150 யூனிட். வருடத்துக்கு 1800 யூனிட். 20 வருடத்துக்கு 36,000 யூனிட். சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிட்டால் (20 வருடங்களுக்குப் பிறகு யூனிட் கண்டிப்பாக இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்) ரூ1,44,000 மிச்சமாகும்.

இதில் நமது இன்றைய செலவு என்று பார்த்தால் சுமார் 60 ஆயிரம் மட்டும்தான் (கண்டிப்பாக அனைவரும் தங்களது வீட்டில் இன்வெட்டர் வைத்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் சூரியத் தகடு மற்றும் சார்ஜ் கன்ட்ரோலர் செலவு மட்டும்). ஆனால் சூரியத் தகடு பொருத்தும் பட்சத்தில் அதிகபட்சமாகத் தொடர்ந்து 4 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டாலும் இந்த சூரியத் தகடு மின்சாரம் தடைப்படாமல் வரும் என்பதை நிச்சயமாச் சொல்லலாம். பகல் முழுவதும் பராமரிப்புப் பணிக்காக மின்சார வாரியம் மின்சாரத்தை நிறுத்தினால் பகலில் 2 ஃபேன்களை தொடர்ந்து 7 முதல் 9 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும்.

சூரியத் தகடில் மானியம்

முதலில் சொன்னதுபோல் இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டர் மாட்டினால் பிறகு சிறிது நாள் கழித்துக்கூட சூரியத் தகடை மாட்டிக்கொள்ளலாம். ஆனால் புதிய வீடு கட்டும்போது செலவோடு செலவாக இதைச் செய்து விட்டால் பின்னால் கஷ்டமில்லாமல் இருக்கலாம்.

சூரியத் தகடிலிருந்து பேட்டரியில் சேகரமாகும் டிசி மின்சாரத்தை ஏசி-ஆக இன்வெர்ட்டர்கள் மாற்றித் தருவதால் நாம் வழக்கமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதைப் போலப் பயன்படுத்துகிறோம். மின் இணைப்பே வேண்டாம் என்றால் பகலில் சேகரமாகும் மின்சாரம் இரவில் சுமார் 4 மணிநேரத்திற்கு மட்டுமே இருக்கும். அதுவும் அதிகபட்ச வாட்ஸ் உள்ள டிவி, ஃபிரிட்ஜ், மிக்ஸ், மோட்டார் ஆகியவற்றை பேட்டரி மூலம் பயன்படுத்த இயலாது என்பதால் இம்முறை சாத்தியமில்லாதது.

எல்லாம் சரி, சூரியத் தகடு இணைப்பிற்காக அரசாங்கம் மான்யம் தருகிறதே அதை எப்படி பெறுவது என்பதைப் பற்றிச் சொல்லவேயில்லையே என்றால் அதற்கு பதில் இதுதான். மாநில அரசாங்கத்தின் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு பெற்ற சூரியத் தகடு நிறுவனங்கள் மூலமாக சூரியத் தகடு இணைப்பு பெற்றால் அவர்கள் தங்களது நிறுவனத்தின் மூலம் இன்வெர்ட்டர், பேட்டரி, சூரியத் தகடு, சார்ஜ் கன்ட்டோலர் என்று அனைத்துக்கும் மொத்தமாகக் கணக்கிட்டு அதில் அரசாங்க மான்யத் தொகை கழித்து மீதமுள்ள தொகையைச் செலுத்தினால் சூரியத் தகடு இணைப்பை அளிப்பார்கள். மான்யத் தொகையை பின்னர் அவர்கள் நமது சார்பில் பெற்றுக் கொள்வார்கள். இந்தச் சலுகையைப் பெற குறைந்த பட்சம் 1 கேவி அளவுக்குச் சூரியத் தகடு அமைக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x