Published : 29 Mar 2014 01:50 PM
Last Updated : 29 Mar 2014 01:50 PM
சென்னை மாதிரியான நகரங்களில் சொந்த வீட்டில் வசிப்பவர்களைக் காட்டிலும் வாடகை வீட்டுவாசிகள்தான் மிக அதிகம். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நீண்ட காலமாகவே முரண்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றி வாரப் பத்திரிகைகளில் ஜோக்குகள் வரும் அளவிற்கு அந்த முரண்பாடு மிகப் பிரபலம். இருவருக்கும் சட்டப்படியான தெளிவு இல்லாதது இந்த முரண்பாட்டுக்கு முக்கியமான காரணம் எனலாம். கவனிக்க வேண்டிய சில அம்சஙகளை இருவரும் பின்பற்றினால் பிரச்சினை வராமல் இருக்கும்.
முதலில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத் தொகை, கரண்ட் பில், ஒயிட் வாஷ், அட்வான்ஸ் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். முரண்பாடு ஏற்படும்போது அட்வான்ஸ் தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் ஒயிட் வாஷ் அடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் ஒயிட் வாஷ் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றால் அதைப் பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்சினை இல்லாமல் போய்விடும்.
வாடகை ஒப்பந்தப் பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் - உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் 11 மாதத்திற்குத்தான் போடுவார்கள். 11 மாதத்திற்கு ஒருமுறை அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரப் பதிவுகளைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் வீட்டு வாடகைப் பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன.
வீட்டுக்கான அட்வான்ஸைப் பொறுத்தவரை அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லை. அது ஒவ்வொரு நகரங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. சென்னையில் ஐந்து மாத வாடகையை அட்வான்ஸாக வாங்குவர்களும் உண்டு. 10 மாத வாடகை அட்வான்ஸாக வாங்கிபவர்களும் உண்டு. பேசிவர்களின் சாமர்த்தியத்தின் அடிப்படையிலேயே அட்வான்ஸ் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. வீட்டு வாடகையைப் பார்த்தீர்கள் என்றால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்னையில் ஐடி துறை வளர்ச்சியின் காரணமாக வீட்டு வாடகை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டால் பல மடங்கு உயர்ந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கோடம்பாக்கத்தில் 2500 ரூபாய்க்கு சிங்கிள் பெட்ரூம் ப்ளாட் கிடைக்கும். ஐடி துறையில் கிடைத்த அதிகபட்ச வருமானத்தால் வாடகை இரண்டு மடங்கானது. இதனால் மற்ற இடங்களிலும் வாடகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இன்று நாம் வாங்கும் சம்பளத்தில் பாதித் தொகையை வீட்டு வாடகைக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
அதனால் வீட்டு வாடகைக்கும் பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் வீட்டின் வசதியைப் பொறுத்து நாம் வாடகையைக் குறைக்கச் சொல்லிக் கேட்கலாம். அதுபோல வாடகை கொடுக்கும்போது ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கான ரசீது புத்தகங்கள் ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கின்றன. வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்றால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்தில் உள்ளவர்கள், முன்ஸிப் நீதி மன்றங்களை நாடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment