Published : 08 Sep 2018 11:27 AM
Last Updated : 08 Sep 2018 11:27 AM
வீட்டுக்கு நாற்காலி வாங்குவதில் சிறப்பாக எந்தக் கவனமும் செலுத்தத் வேண்டியதில்லை என்று நினைப்பவரா நீங்கள்? நாற்காலியின் வண்ணம், அதற்குக் கைப்பிடி இருக்கிறதா இல்லையா, அது நன்கு உழைக்குமா, ஆகிய கோணங்களைத் தவிர ஒரு நாற்காலி வாங்குவதில் வேறென்ன கோணம் இருந்துவிடப் போகிறது என்கிறீர்களா? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் பெரும்பாலான நேரம் - கட்டிலுக்கு அடுத்தபடியாக – நீங்கள் கழிப்பது நாற்காலியில்தான். தொலைக்காட்சி பார்ப்பதாக இருந்தாலும் சரி, கணினியில் தொடர்ந்து வேலை செய்வதாக இருந்தாலும் சரி உங்கள் இருக்கை என்பது நாற்காலியில்தான்.
சரியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளாதவர்கள் பலவிதச் சிக்கல்களுக்கு உள்ளாகலாம். முதுகுவலி மட்டுமல்ல; கால்வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கும் இது காரணமாக அமையலாம்.
சிறந்த அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கான நாற்காலிகளை வாங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. தலைசிறந்த நாற்காலி தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது ‘ப்ரீமியம்’ நாற்காலிகளில் அதன் வலிமையைத் தவிரவும், வேறு பல விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. இவற்றை அறிந்து கொண்டு அந்த அடிப்படையில் நம் வீட்டுக்கும் உரிய நாற்காலிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் மிக அவசியம். அவை என்னவென்று பார்ப்போம்.
பணிச்சூழலுக்குத் தகுந்த நாற்காலிகள்
‘Ergonomically” வடிவமைக்கப்பட்ட நாற்காலிகள் என்பதை இப்போது அதிக அளவில் பேசுகிறார்கள். அதென்ன ‘எர்கனாமிகலி’? தமிழில் இதைப் பணிச்சூழலியல் என்கிறார்கள். இது ஊழியர்களுக்குத் தகுந்த மாதிரி வேலை, கருவிகள், பணியிடம் ஆகியவற்றை வடிவமைக்கும் பிரிவு எனலாம். அதாவது உடலில் கடுமையான வலிகள் உண்டாவதைத் தடுப்பதற்கு ஏற்றவகையில் பணிச்சூழல் இருக்க வேண்டும். அந்த விதத்தில் நாற்காலியின் பங்கு என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
முதலில் ஒரு நாற்காலியின் உயரம் எப்படி இருக்க வேண்டும்? அதில் உட்காரும்போது பாதங்கள் எளிதில் தரையில் பட வேண்டும். அதிகப்படி முயற்சி எடுத்தால்தான் பாதங்களைத் தரையில் வைக்க முடியும் எனும்படி இது இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் (அதாவது நாற்காலி மிக உயரமானதாக இருந்தால்) நம்மையும் அறியாமல் அதில் உட்கார்ந்திருக்கும்போது நம் பாதங்கள் தரையிலிருந்து மேலெழும்பி இருக்கும். இதனால் கால் தசைகளும், காலிலுள்ள மூட்டுகளுக்கும் நாளடைவில் பாதிப்பு உண்டாகும்.
நாற்காலியின் உயரத்தை மாற்றிக் கொள்ளும்படியான நெம்புகோல் அல்லது சுழலும் கைப்பிடி (Lever) இருப்பது நல்லது. ஆனால், வீட்டிற்காக வாங்கும் நாற்காலிகளில் இதைப் பலரும் ஏற்பதில்லை (பல சலூன்களில் காணப்படும் இந்த வகை நாற்காலிகளின் விலை அதிகமானவை).
அப்போது நீங்கள் வேறொன்றில் கவனம் செலுத்தலாம். நாற்காலியின் உயரம் என்பது உட்காரும் பகுதியிலிருந்து தரைவரை 16-லிருந்து 21 அங்குலங்கள் வரை இருக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு இந்த உயரம் சரியானதாக இருக்கும். மிக உயரமானவர்களும் மிகக் குள்ளமானவர்களும் இந்த அளவைக் கொஞ்சம் மாற்றி மனதில் கொள்ள வேண்டும். இந்த உயரத்தில் உட்காரும்போது பாதங்கள் தரையில் படும். தொடைப் பகுதி தரைக்கு கிடைமட்டத்ததில் (Horizontol) இருக்கும். கைகள் எதிரிலுள்ள மேஜைக்குக் கிடை மட்டத்தில் இருக்கும்.
உயரம் மட்டுமல்ல; ஒரு நாற்காலியின் அகலமும், ஆழமும்கூட முக்கியம்தான். இங்கே ஆழம் என்பது நாற்காலியின் இருக்கையின் முன்புறத்திலிருந்து பின்புறம் வரை இருக்கக் கூடிய நீளத்தைக் குறிக்கிறது. நாற்காலியின் அகலம் என்பது 18லிருந்து 20 அங்குலம் வரை இருப்பது வழக்கம். நாற்காலியின் ஆழமும் போதுமானதாக இருக்க வேண்டும். அதாவது ஒருவரது முதுகு நாற்காலியின் பின்புறம் நன்கு சாய்ந்திருக்கும் நிலையிலேயே அவரால் எதிரிலுள்ள மேஜையில் உள்ள கணினியில் வேலை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் தொடர்ந்து வேலை செய்யும்போது அவர் முன்புறமாகத் தன் உடலைச் சாய்ப்பார். முதுகுக்கு ஆதரவு இருக்காது. நீண்ட நேரம் இப்படி இருக்கும்போது முதுகெலும்புக்கும், தண்டு வடத்துக்கும் பாதிப்புகள் உண்டாகலாம்.
சூழலும் நாற்காலிகள்
நம் முதுகெலும்பு என்பது பல சிறு எலும்புகளால் ஆனது. இதன் கீழ்ப் பகுதியை - அதாவது அடி முதுகுப் பகுதியை lumbar பகுதி என்பார்கள். குறிப்பாக, இந்தப் பகுதிதான் நாற்காலியில் ஓய்வுப் பகுதியில் இருக்க வேண்டும் (அனைவரின் முதுகெலும்பும் முழுமையாக ஓய்வெடுக்கும் வகையில் நாற்காலி தயாரிப்பது கடினம். ஏனென்றால், நம் முதுகெலும்பு நேரானது அல்ல. வளைவுகளைக் கொண்டது).
நீண்ட நேரம் கீழ் முதுகெலும்பு ஒய்வெடுத்துக் கொள்ளாத நிலையில் நாம் அமர்ந்திருந்தால் முதுகெலும்பின் இயல்பான வளைவு நாளடைவில் பாதிக்கப்படும். இது பலவிதச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவேதான் இந்தக் கோணத்தை மனத்தில் கொண்டு தகுந்த உயரமும் ஆழமும் கொண்ட நாற்காலியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வீட்டு உபயோகத்துக்குக்கூடச் சுழலும் நாற்காலியை வாங்கலாமா என்று சிலர் யோசிப்பது உண்டு. உட்கார்ந்தபடியே தன்னைச் சுற்றி இருக்கும் பல பொருட்களை எடுக்க முடியும், பயன்படுத்த முடியும் என்ற கோணத்தில் சுழலும் நாற்காலிகள் பயனுள்ளவைதாம். ஆனால், சிலர் தன்னையும் அறியாமல் உடலை அசைத்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்தால் அது தானாகவே இங்குமங்குமாகச் சுழலும். இது அதில் அமர்ந்திருப்பவர் சீராகப் பணியாற்றுவதைப் பாதிக்கும்.
உயர்ந்த குஷன்கள் அமரும் பகுதியில் இருக்கலாம். ஆனால், இது போன்ற நாற்காலிகளை வாங்கும்போது தொடர்ந்து மூன்று நிமிடங்களாவது அதில் உட்கார்ந்து பார்த்து விட்டு வசதியாக இருந்தால் மட்டுமே வாங்குங்கள்.
குஷன்கள் இல்லாத நாற்காலி என்றால் உட்காரும் பகுதியில் துவாரங்கள் இருக்கும்படித் தேர்ந்தெடுங்கள். பலவித வித்தியாசமான டிசைன்களில் இப்படி நிறைய துவாரங்கள் இருக்கும்படி தயாரிக்கிறார்கள்.
கீழ்ப்புறமிருந்து நம் உடலுக்கு இயற்கைக் காற்று கொஞ்சமாவது உள்நுழைவது நல்லது. கைப்பிடிகளைக் கொண்ட நாற்காலி என்றால் அவற்றில் கைகளை வைத்துக் கொள்ளும்போது கைகளுக்கு மட்டுமல்ல, தோள்களுக்கும் அது வசதியாக இருக்க வேண்டும். எதிரிலுள்ள கணினியில் டைப் செய்யும்போது நமது முன்கை நாற்காலியின் கைப்பிடியில் பட்டுக் கொண்டிருக்கக் கூடாது (முழங்கை மட்டும் அப்படி இருக்கலாம்). இல்லையென்றால் முன்கையில் உள்ள தசைகளும், நரம்புகளும் அதிக அளவு களைப்படையும்.
‘ஒரு நாற்காலிக்கு இவ்வளவு கோணங்களா?’ என்று யோசிக்காதீர்கள். பதவி நாற்காலி மட்டுமல்ல; நம் வீட்டு நாற்காலிக்கும் மெனக்கெடத்தான் வேண்டும். அப்போதுதான் நம் வருங்காலம் வளமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT