Last Updated : 31 Mar, 2018 10:58 AM

 

Published : 31 Mar 2018 10:58 AM
Last Updated : 31 Mar 2018 10:58 AM

உங்கள் வங்கி மதிப்பெண்கள் எவ்வளவு?

 

நீ

ங்கள் வங்கியிலிருந்து கடன் பெற விரும்பினால் - குறிப்பாக, பெருந்தொகை தேவைப்படும் வீட்டுக்கடன் பெற விரும்பினால் - உங்கள் சிபில் ஸ்கோர் என்ன என்பதை அறிய வங்கி விரும்பும்.

அதென்ன சிபில் ஸ்கோர்? சிபில் என்பது Credit Information Bureau India Limited (CIBIL) என்பதன் சுருக்கம். இது அளிக்கும் மதிப்பெண்தான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மதிப்பெண் என்பது மூன்று இலக்கங்கள் கொண்டது. அதிகபட்சம் 900 மதிப்பெண் பெற முடியும் (குறைந்த பட்சம் 300). 750 மதிப்பெண் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதைவிட அதிக மதிப்பெண் பெற்றால் உங்களுக்கான மதிப்பு அதிகமாகும். 750-லிருந்து மதிப்பெண் குறையக் குறைய உங்களுக்கான கடன் வழங்கக்கூடிய வாய்ப்பு குறையும். நீங்கள் மிக அதிக சிபில் மதிப்பெண் பெற்றவராக இருந்தால் வங்கியில் சில உரிமைகளைக்கூடக் (கொஞ்சம் குறைவான வட்டி விகிதிம்) கேட்டுப் பெறலாம்.

இந்த மதிப்பெண் எப்படி அளிக்கப்படுகிறது?

பலவித அடிப்படைகளில் இந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது. உங்கள் கடந்த கால செயல்பாட்டுக்கு 30 சதவீதம். கடன் வகை மற்றும் காலகட்டத்துக்கு 25 சதவீதம். கடன் பயன்பாட்டுக்கு 25 சதவீதம். வேறு பிறவற்றுக்கு 20 சதவீதம். ஒவ்வொன்றும் என்னவென்று பார்ப்போம்.

மிக முக்கியமாக, அதிகபட்ச மதிப்பெண் வழங்கப்படுவது உங்கள் கடந்த கால செயல்பாட்டுக்குத்தான். தனிப்பட்ட முறையில் நீங்கள் ஒழுக்கமானவரா என்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. கடனைத் திருப்பித் தருவதில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்திருக்கிறீர்களா என்பதுதான் இதன் சாரம். இதை எப்படி அறிவது? நீங்களே உங்களை உயர்த்தி, சிறப்பாகக் கூறிக்கொண்டால் சிபில் அமைப்பால் என்ன செய்ய முடியும்? இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது. காரணம் இவற்றை அறிவிப்பது நீங்கள் அல்ல.

வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் தாங்கள் வழங்கும் ஒவ்வொரு கடன் குறித்த விவரங்களையும் சிபில் அமைப்புக்கு மாதந்தோறும் அனுப்பும். கடந்த மூன்று வருடங்களில் நீங்கள் உங்கள் மாதத் தவணைகளை முன்பு பெற்ற கடன்களுக்கு ஒழுங்காகச் செலுத்தியிருக்கிறீர்களா என்பதுதான் இதில் முக்கியம்.

ஒருவேளை நீங்கள் பெற்ற கடன் வாராக்கடனாகக் கருதப்பட்டிருந்தால் உங்களுக்கான சிபில் ஸ்கோர் தாறுமாறாகக் குறையும். மாதத் தவணைகளைச் சீராகச் செலுத்தவில்லை என்றாலும் குறையும். கடன் அட்டைகளைப் பயன்படுத்திவிட்டு உரிய காலத்துக்குள் அதற்கான தொகையை உங்கள் கணக்கில் செலுத்தியிருக்காவிட்டாலும் உங்கள் கடந்த காலச் செயல்பாடு என்பது குறைவுள்ளதாகவே மதிப்பிடப்படும்.

அடுத்தது கடன் பயன்பாடு. அதாவது Credit Utilisation. நீங்கள் முன்பு வாங்கியிருந்த கடன்கள் தொடர்பானது இது. இன்னும் கட்ட வேண்டிய கடன் தொகையை உங்களுக்கு அளிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகையால் வகுத்தால் கிடைப்பதுதான் கடன் பயன்பாடு. நாளடைவில் இந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனால் அதை சிபில் எதிர்மறையாகப் பார்க்கும். அதாவது போகப் போக உங்கள் கடன் சுமை அதிகமாகிக்கொண்டே போகிறது என்ற அர்த்தம்.

எந்தவகைக் கடன்களை வாங்கி இருக்கிறீர்கள்? அவை எவ்வளவு காலத்துக்கானவை? இவையும் சிபில் ஸ்கோரை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீட்டுக் கடன்கள் பாதுகாப்பான கடனாகவும், கடன் அட்டை கடன்கள் பாதுகாப்பற்ற கடனாகவும் கருதப்படுகிறது (ஏனென்றால், வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் உங்கள் வீட்டை விற்று வங்கி கடன் தொகையைக் கழித்துக்கொண்டு மீதத்தை உங்களுக்குத் தரலாம்).

பாதுகாப்பான கடன்களையே நீங்கள் அதிகம் வாங்கியிருந்து உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்தியிருந்தால் உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கும்.

பிற காரணங்கள் என்பவற்றில் சமீபத்தில் எவ்வளவு முறை பல்வேறு நிதி நிறுவனங்களில் கடனுக்காக விண்ணப்பித்திருந்தீர்கள் போன்றவை அடக்கம். இப்படி அதிகமாக விண்ணப்பித்திருந்தால் அது கொஞ்சம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். நினைத்தபோதெல்லாம் கடனை வாங்கி தாம் தூம் என்று செலவு செய்பவர்களுக்குக் கடனை வழங்க வங்கிகள் தயங்கும்.

ஆனால், ஒன்று சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்து விட்டால் மட்டுமே உங்கள் கடனுக்கான விண்ணப்பம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில்லை. உங்களுக்கு இப்போது கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் கடன் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x