Published : 24 Mar 2018 10:56 AM
Last Updated : 24 Mar 2018 10:56 AM
ஒ
ரு தோட்டம் வைத்து அதில் பல செடி கொடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான கால அவகாசம் இந்தக் காலத்து இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை. இருந்தாலும், ஒரு குட்டிச் செடியாவது வளர்க்க வேண்டும் எனப் பலருக்கு ஆசை இருக்கிறது. செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ சின்ன சின்ன செடிகளை வைத்துக்கொள்வதுண்டு. அதை அழகாகவும் எளிய முறையிலும் செய்ய சில முறைகள் உள்ளன ...
பாட்டில் பாட்:
நாம் தண்ணீர் பாட்டில்களைப் பல இடங்களில் வாங்கிப் பருகுவதுண்டு. ஆனால், அந்த பாட்டில்களைக் குப்பையில் போடாமல் சேர்த்து வைத்தால், ஒரு பாட்டில் பாட் உருவாக்கலாம். பாட்டிலைப் பாதியாக வெட்டி, அடிப்பகுதியில் மண் நிரப்பி , தேவையான பூச்செடிகளை வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் மேஜையிலே இந்த பாட்டில் பாட்-ஐ வைத்து அழகு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பிளாஸ்டிக் பாட்டில், மண், அலங்கரிக்க பொருட்கள்
முக்கியமாக இதை பிளாஸ்டிக் பாட்டில்களில் செய்ய வேண்டும். மேலும் இதற்கு அழகு சேர்க்க வண்ணம் பூசுவது, விண்டேஜ் லுக் கொடுக்க கயிற்றால் அலங்கரிப்பது போன்றவற்றைச் செய்தால் அவை பார்க்க அழகாக இருக்கும். இவை பாட்டில்தானா என வியக்க வைக்கும் அளவுக்கு அதன் தோற்றமே மாறிவிடும்.
பல்ப் பாட்:
வீட்டில், பழைய காலத்தில் உபயோகித்த லோ வாட்ஸ் பல்புகள் தற்போது அழிந்து வருகின்றன என்று கூறலாம். அந்த வகையில் இந்த பல்பைக் காண முடிந்தாலே அதிசயம். அதிலும், அழகான பூந்தொட்டியாகப் பயன்படுத்தினால் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்!
தேவையான பொருட்கள்: லோ வாட்ஸ் பல்ப், பச்சை செடி ( எ.கா. மணி ப்ளாண்ட்) , நீர்.
உபயோகித்த பல்புகளை மட்டுமே பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால், அதில் டங்க்ஸ்டன் செயலிழந்திருக்கும். பல்பின் மேலுள்ள பகுதியைத் திருகினால் அதைக் கழற்றிவிடலாம். அதன் பிறகு, அதிலுள்ள டங்க்ஸ்டனை எடுத்துவிட்டு, நம் செடியை பொருத்திவிட வேண்டும். இதை மேசையிலும் வைக்கலாம் அல்லது கயிறு கட்டி வீட்டு பால்கனியிலும் தொங்க விடலாம். குறிப்பு: சில செடிகளுக்குச் சூரிய வெளிச்சம் மிகவும் அவசியம். எனவே, வெயில் படும் இடத்தில் வைப்பது நல்லது.
காபி கப் பாட்:
காபி கப்பில் பல டிசைன்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஒருவருக்கு ஏதேனும் பிறந்தநாள் பரிசளிக்க வேண்டும்மென்றால் முதலில் தோன்றுவது வித்தியாசமான ஒரு காபி கப்பை வாங்கி அசத்திவிடலாம் என்பதே. ஆனால், அதில் எத்தனை பேர் அந்தப் பரிசைப் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் கேள்வி. அப்படி நெருங்கியவர்கள் கொடுத்த காபி கப்பைப் பூட்டி வைக்காமல், தினந்தோறும் நீங்கள் பார்க்கும் வகையில் அழகான பூந்தொட்டியாக மாற்றலாம்.
தேவையான பொருட்கள் : காபி கப், மண், செடிகள்
காபி கப்பில் மண் நிரப்பி அதில் செடியை நட்டால் மட்டுமே போதும். மேலும் அழகாக்க வேண்டுமென்று நினைத்தால், ஓவியம், ஸ்டிக்கர், பீட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி கப்பை அலங்கரிக்கலாம். இதற்கு டேபிள் ரோஜா, கேக்டஸ் போன்ற செடிகளை உபயோகிக்க வேண்டும்.
டயர் பாட்:
வாகனங்களின் தேவையற்ற டயரை எடைக்கு தான் போட வேண்டுமென்று இல்லை. இந்த டயர்களுக்கு மெருகேற்றி நம் வீட்டினுள்ளே வைத்தால் அதுதான் டயர் பூந்தொட்டி. வாகனப் பிரியர்கள் வீட்டை அதே தீம் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என நினைத்தால் இதைப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் : டயர், பூச்செடிகள், பெயிண்ட்
முதலில் டயர் முழுவதும் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் பெயிண்ட் செய்து காய வைக்க வேண்டும். பிறகு, டயரின் உள்ளே உள்ள இடைவெளியில் மண் நிரப்பவேண்டும். கீழே உள்ள பகுதியில் மட்டும் மண் நிரப்பினால் போதுமானது. அதில் செடிகளை நட வேண்டும் . டயரின் மேற்பகுதியில் இரண்டு துழையிட்டு அதில் கயிற்றைக் கொண்டு கட்டி சுவரில் தொங்கவிடலாம். குறிப்பு: பூச்செடிகளை மட்டும் நட்டால் பார்க்க அழகாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT