Last Updated : 24 Mar, 2018 10:55 AM

 

Published : 24 Mar 2018 10:55 AM
Last Updated : 24 Mar 2018 10:55 AM

வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா?

 

வீ

ட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறீர்களா? வீட்டைப் பாழ்படுத்தக் கூடாதுதான். வீட்டின் உரிமையாளரிடம் அராஜகமாக நடந்துகொள்ளக் கூடாதுதான். ஆனால், அதற்காக எல்லா விஷயங்களிலும் அடங்கிப் போக வேண்டும் என்பதில்லை. உங்களுக்குள்ள உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்.

“நமக்குள்ளே எதுக்காக எழுத்துபூர்வ ஒப்பந்தம்? வாய் சுத்தம் இருந்தால் போதாதா? நம்பிக்கைதானே எல்லாமே’’ என்றெல்லாம் வீட்டின் உரிமையாளர் கூறினால் ஒத்துக்கொள்ளாதீர்கள். எழுத்துபூர்வமான ஒப்பந்தம் அவசியம். சொல்லப் போனால் 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டத்துக்கு வீட்டில் குடியிருக்கப் போகிறீர்கள் என்றால் அந்த ஒப்பந்தம் பதிவு செய்யப்படவும் வேண்டும் (அதனால்தான் பலரும் 11 மாதங்களுக்கு என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்).

அமைதியான விதத்தில் வாழும் உரிமை உங்களுக்கு உண்டு. “என் வீடுதானே. நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன்’’ என்றபடி வீட்டின் உரிமையாளர் நினைத்தபோதெல்லாம் நீங்கள் வாடகை தரும் வீட்டுக்கு வர முடியாது. அதற்காக அவர் வரவே கூடாது என்று நீங்கள் கண்டிப்பு காட்டவும் முடியாது. ஆனால் ‘அடிக்கடி வரக் கூடாது. வருவதற்கு முன்னால் சொல்லிவிட்டு வர வேண்டும்’ என்பதில் நீங்கள் கண்டிப்பு காட்டலாம்.

ஒப்பந்தத்தில் இருப்பதைவிட அதிக அளவு வாடகையை ஏற்ற முடியாது. “நான் சொல்லும் வாடகையைக் கொடுக்காவிட்டால் வீட்டைக் காலி செய்ய வேண்டும்’’ என்றெல்லாம் வீட்டின் உரிமையாளர் அராஜகமாகச் செயல்பட முடியாது. இதுபோன்ற நேரத்தில் ‘நீங்கள் வாடகையைச் சரியாகச் செலுத்தாததால் வீட்டைக் காலி செய்யச் சொல்வதாக’ வீட்டு உரிமையாளர் கூறலாம். எனவே, நீங்கள் ஒழுங்காக வாடகையைச் செலுத்துகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் ரசீது பெற்றுக் கொள்ளுங்கள். இதைவிடச் சிறந்த வழிமுறை என்பது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்குக்கு வாடகைத் தொகை செலுத்தும்படியான ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம். உங்கள் வங்கியை அணுகினால் ‘Standing instructions’ என்ற வகையில் இதற்கான ஏற்பாட்டைச் செய்வார்கள்.

ஒப்பந்தத்தில் வாடகை உயர்வு பற்றி எதுவுமே குறிப்பிடாமல் இருந்து விட்டால், கடைசிவரை அதே வாடகையை மட்டுமே தரும் உரிமை உங்களுக்கு உண்டு என்று அர்த்தமில்லை. அதற்காகத் திடீர் திடீரென்று மிக அதிக அளவில் வாடகையை உயர்த்தும் உரிமையும் வீட்டு உரிமையாளருக்குக் கிடையாது. இருதரப்புக்கும் பிரச்சினை ஏற்படும்போது வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தை (Rent Control Board) வீட்டு உரிமையாளர் அணுகலாம். பொதுவாக ஒன்பதிலிருந்து 15 சதவீதம் வரை வாடகை உயர்வுக்கு (குறிப்பிட்ட காலகட்டங்களில்) அனுமதிப்பதுண்டு.

தகுந்த காரணம் இல்லாமல் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யுமாறு உங்களை வற்புறுத்த முடியாது. தகுந்த காரணம் இருந்தால்கூட உடனடியாக உங்களை வெளியேற்ற முடியாது. நியாயமான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அது பெரும்பாலும் ஒரு மாதமாக இருக்கும். ஒப்பந்தத்தில் வேறு மாதிரி இருந்தால்

(இரண்டு மாத நோட்டீஸ் அல்லது மூன்று மாத நோட்டீஸ் என்பதுபோல்) அப்போது அதுதான் செல்லுபடியாகும்.

வீட்டை மாற்றி அமைக்கும்படியான செலவுகளைச் செய்துவிட்டு அந்தச் செலவை வீட்டுச் சொந்தக்காரர் உங்கள் தலையில் கட்டக் கூடாது. நீங்கள் கூறியதன் பேரில்தான் அந்த மாற்றங்கள் நடைபெற்றன என்றால்கூட நிலைமை இதேதான். (“இந்தக் கட்டுமானங்களை மாற்றி அமைக்கும்படி நான் ஆலோசனை கூறுகிறேன். இதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று நீங்கள் எழுத்துப்பூர்வமாக ஒத்துக்கொண்டிருந்தால் அப்போது நீங்கள் அதைக் கொடுத்துதான் ஆக வேண்டும்).

காலி செய்வதற்கான நோட்டீசை நீங்கள் கொடுத்த பிறகு, தொடர்ந்து அங்கு தங்குவதற்கான வாடகையை நீங்கள் கொடுத்த முன் பணத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

ஒருவேளை வாடகைக்குக் குடியிருப்பவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினரை வீட்டிலிருந்து காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர் கூறுவதற்குச் சட்டம் இடம் கொடுக்கிறதா? இல்லை, இறந்தவரின் வாரிசுகள் தொடர்ந்து அங்கே தங்கலாம். ஆனால், அவர்களும் ஒப்பந்தப்படி நடந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் நினைத்தபோது வீட்டைக் காலி செய்ய முடியுமா? அதற்குரிய அறிவிப்பை அளித்துவிட்டு அல்லது ஒப்பந்தப்படி இதற்கெனக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து விட்டு, நீங்கள் தாராளமாகக் காலி செய்யலாம். அல்லது திடீரென்று காலி செய்தால் ஒப்பந்தத்தின்படி நோட்டீஸ் காலத்துக்கான தொகையைச் செலுத்திவிட்டு (அல்லது திருப்பித் தர வேண்டிய முன்பணத்தில் குறைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டு) நீங்கள் உடனடியாகக் காலி செய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x