Published : 06 Apr 2019 12:51 PM
Last Updated : 06 Apr 2019 12:51 PM
வீட்டுக் கடன் குறித்துப் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துகொண்டே இருக்கும். முதலில் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.
விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்), தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி), விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல், கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்) ஆகிய ஆவணங்களுடனும்
பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தையும் அளிக்க வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்குவதற்கு என்ன தகுதி என்பது அடுத்த கேள்வி. திருப்பிச் செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும். அதாவது உங்கள் மாதந்த்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக, மிஞ்சும் பணத்தை வைத்தே உங்களால் எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் கணக்கிடும். கணவன், மனைவி இருவரும் பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் வீட்டுக் கடன் தகுதி அதிகமாக இருக்கும்.
பிறகு வட்டி விகிதம் குறித்துக் கேள்விகல் எழும். ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவது அல்லது குறைக்கப்படுவதைப் பொறுத்து மாறும் தன்மை உடையது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முழு காலத்துக்கும் ஒரே அளவு மாதத் தவணை (இ.எம்.ஐ.) இருக்காது.
அவ்வப்போது சில நூறு ரூபாய்கள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இந்த ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியுமானால் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்யலாம். இந்த விவரங்கள் கடன் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கடன் வழங்கும் காலத்தில் உள்ள வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பொருந்தும்.
உங்கள் மாதத் தவணையின் ஒரு பகுதி கடன் முதலில் இருந்து கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட முதல் மீதே அடுத்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. குறிப்பிட காலம் கடன் மீதான தவணைகள் செலுத்தப்பட்ட பின் தவணையில் வட்டிப்பகுதி குறைந்து முதல் பகுதி அதிகரிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT