Published : 27 Apr 2019 01:04 PM
Last Updated : 27 Apr 2019 01:04 PM
நகர்ப்புற வாழ்க்கைப் பரபரப்பிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடியவை ஜென் தோட்டங்கள். ஜப்பான் கல் தோட்டம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தோட்டம், இப்போது நகர்ப்புற வீடுகளில் பிரபலமாகிவருகிறது.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அமைதியான மனநிலையை உணரவைக்கும் ஆற்றல் இந்த ஜென் தோட்டத்துக்கு உண்டு. இந்தத் தோட்டத்தைப் பராமரிப்பது எளிது என்கின்றனர் உள்அலங்கார வடிவமைப்பாளர்கள்.
இயற்கை, கலை என்ற இரண்டு முக்கிய அம்சங்களை இணைத்து ஜென் தோட்டம் அமைக்கப்படுகிறது. கற்கள், நீர், மணல், பாதைகள், படிக் கற்கள், செடிகள் போன்றவற்றால் இந்தத் தோட்டம் வடிவமைக்கப்படுகிறது. வீட்டில் எளிமையான முறையில் ஜென் தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகள்…
பாசி, கூழாங்கற்கள்
கூழாங்கற்களையும் பாசியையும் இணைத்தும் ஜென் தோட்டத்தையும் அமைக்கலாம். சுற்றிச் சில செடிகளையும் கூண்டுவிளக்குள், நீர் போன்ற அம்சங்களையும் இணைக்கலாம். இந்தத் தோட்டம் அமைப்பதற்குச் சிறிய இடம் இருந்தாலே போதுமானது.
நிலம், நீர்
வீட்டில் மரத்தாலான முற்றம் அமைத்து அதை ஜென் தோட்டமாக வடிவமைக்கலாம். வெறும் கற்கள், நீர், செடிகள் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தி இந்தத் தோட்டத்தை வடிவமைக்கலாம்.
மணல்
ஜென் தோட்டத்தின் தவிர்க்க முடியாத அம்சம் மணல். மணலின் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டு பலவிதமான அமைப்புகளை உருவாக்க முடியும். நீர், ஓடும் நதிகள், அருவிகள், கடலின் அலைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும்விதமாக மணலில் சிற்றலைகளை அமைக்கலாம். இந்த மணல் அலைகளை மனநிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம். இந்த மணல் வடிவமைப்பு அமைதியை ஏற்படுத்த உதவும்.
கற்களும் மணலும்
மணல் அலை அமைப்புகளுடன் கற்களையும் இணைத்து ஜென் தோட்டத்தை வடிவமைக்கலாம். ஜென் தோட்டத்தைப் பொறுத்த வரை, கற்கள் மலைகளைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றன.
கல் கூண்டு விளக்குகள், தியானச் சிற்பங்கள்
வீட்டின் உட்புறத்தில் இல்லாமல் வெளிப்புறத்தில் ஜென் தோட்டம் அமைப்பதாக இருந்தால், கல் கூண்டு விளக்குகளையும் தியானச் சிறப்பங்களையும் வைத்து வடிவமைக்கலாம். இரவில் இந்த கல் கூண்டு விளக்குகளை ஏற்றி வைப்பது, தோட்டத்துக்கு வேறொரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்.
போன்சாய்ச் செடிகள்
ஜென் தோட்டத்துக்கு ஏற்றவை போன்சாய் செடிகள். இந்தச் செடிகளைப் பராமரிப்பது எளிது. போன்சாய் செடிகளுக்கு மாற்றாக ‘Succulents’ எனப்படும் சதைப்பற்றுள்ள செடிகளையும் அமைக்கலாம். இந்தச் செடிகள் உங்கள் ஜென் தோட்டத்தை அழகானதாக மாற்றும்.
கற்பானைகள், கூழாங்கற்கள்
உங்கள் வீட்டின் பால்கனி சிறியதாக இருக்கிறது. எப்படி அதை ஜென் தோட்டமாக மாற்றுவது என்று யோசிக்கிறீர்களா? அதற்கும் வழி இருக்கிறது.
பெரிய அழகாக வடிவமைக்கப்பட்ட கற்பானைகள், கூழாங்கற்கள் இரண்டையும் வைத்தே நீங்கள் எளிமையான ஜென் தோட்டத்தை வடிவமைக்கலாம். இந்த இரண்டு அம்சங்களும் வீட்டுக்குள் அமைதியைக் கொண்டுவரக்கூடியவை.
எங்கே அமைக்கலாம்?
உங்கள் வீடு பெரிதாக இருந்தால், மணல் அலைப் பிரதிபலிப்புக்குப் பதிலாக நீரையே பயன்படுத்தலாம். ஓர் அழகான நீர் ஓடம் போன்ற அமைப்பை வீட்டுக்குள் உருவாக்குவது பொருத்தமாக இருக்கும்.
மாடியில் வெளிப்புறத்தில் ஜென் தோட்டம் அமைப்பதாக இருந்தால், நீர் ஊற்று வடிவமைப்பை உருவாக்குலாம். இந்த நீர் ஊற்றின் ஒலி வீட்டுக்குள் எளிமையாக அமைதியான மனநிலையை உருவாக்கும்.
மாடிப்படிகளின் கீழ் இருக்கும் இடத்தில் போதுமான வெளிச்சம் இருந்தால், அந்த இடத்தையும் ஜென் தோட்டமாக வடிவமைக்கலாம். இந்த இடத்தில், கூழாங்கற்களுக்குப் பதிலாகச் செடிகளைப் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT