Last Updated : 06 Apr, 2019 11:50 AM

 

Published : 06 Apr 2019 11:50 AM
Last Updated : 06 Apr 2019 11:50 AM

பத்திரம், பத்திரம்

நாம் மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டிய ஆவணங்களில் முக்கியமானவை நமக்குச் சொந்தமான வீடு தொடர்பானவை.

வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி வைக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில கோணங்கள் உண்டு. சிலர் இந்த ஆவணங்கள் மீதும் வேறு பல பொருட்களை அடுக்கி விடுவார்கள். இதன் காரணமாக அந்த ஆவணங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டுவிட வாய்ப்பு உண்டு. அதுவும் வீட்டின் தாய்ப் பத்திரம் மிகவும் பழமையானதாக இருந்தால் இது மேலும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.

பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு சிலர் இந்த ஆவணங்களை லாமினேட் செய்து விடுகிறார்கள். இதனால் ஆவணங்கள் பாதுகாப்புடன் இருக்கலாம். ஆனால் பின்னர் ஏதாவது சட்டச் சிக்கல் வந்தாலோ, வீட்டை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற நினைத்தாலோ அப்போது சிக்கல் ஏற்படலாம்.

வங்கி லாக்கரில் வீடு தொடர்பான ஆவணங்களை வைப்பது நல்லது. அப்படி வைக்கும்போது லாக்கரில் பல பொருள்களை வைக்க வேண்டியிருந்தால் வீட்டு ஆவணங்களை மடித்து வைக்கக் கூடாது.

பரிந்துரைக்கத்தக்க இன்னொன்று, வீட்டு ஆவணங்களை ஸ்கேன்செய்து வைத்துக் கொள்ளுங்கள். காலப்போக்கில் ஆவணங்களில் உள்ள எழுத்துகள் மங்கிக் காணப்பட்டால் ஸ்கேன் பிரதி உதவும். இப்படி ஸ்கேன் செய்த ஆவணங்களை உங்களுக்கு நம்பகமான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு (அது உங்கள் வாழ்க்கைத் துணைவரோ, மகன், மகளாகவோ இருக்கலாம்) மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள்.

வீட்டில் மரப் பெட்டிகளில் ஆவணங்களை வைக்க வேண்டாம். எளிதில் தீப்பற்றக்கூடிய எதற்குள்ளும் ஆவணங்களை வைக்காதீர்கள்.

இந்த ஆவணங்களை நாம் கையாளும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதால் கரையான் அரிக்க முடியாத இடங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஸ்டீல் பீரோவுக்குள் வைத்தால்கூட பாச்சா உருண்டைகளை அவற்றின் அருகே போடுவது நல்லது.

வீடு தொடர்பான விற்பனைப் பத்திரம், வில்லங்கமில்லாச் சான்றிதழ், தாய்ப் பத்திரம் போன்ற அடிப்படையான முக்கிய ஆவணங்களை ஒரு பகுதியாகவும், வீடு தொடர்பான இதர ஆவணங்களை (செலவு செய்த பட்டியல், வழக்கமான ரசீதுகள்) போன்றவற்றை தனித்தனியாகப் பிரித்தும் பாதுகாக்கலாம். முதலில் கூறிப்பிட்டவற்றுக்கு மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை.

என்ன காரணத்திற்காகவோ வீட்டு ஆவணங்களில் ஒன்றிரண்டை வெளியே எடுக்க நேர்ந்தால் மீண்டும் அதை அதற்கான இடத்தில் வைத்துவிட வேண்டும்.

வங்கி லாக்கரில் இந்த ஆவணங்களை வைத்தால் அந்த லாக்கர் தொடர்பான அடிப்படை விஷயங்களை (லாக்கர் எண் உட்பட) நெருங்கிய உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி விடுங்கள்.

எங்கே வைக்கிறோம், எந்த நிலையில் பராமரிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தவில்லை என்றால் தேவைப்படும் சமயத்தில் ‘‘அந்த முக்கியமான ஆவணம் எங்கே போய்த் தொலைந்தது?’’ என்று பற்களை நரநரக்கும் நிலை தோன்றுவதைத் தவர்க்கலாம். “ஐயோ கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஆவணங்களுக்கு இந்தக்கதி நேர்ந்திருக்காதே’’ என்று வருத்தப்படும் நிலையையும் தவிர்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x