Published : 20 Apr 2019 01:07 PM
Last Updated : 20 Apr 2019 01:07 PM
முன்பெல்லாம் ஆக்ரமிப்பு என்றாலே ஒரு மன்னன் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்து வெல்வதையோ ஒரு நாடு ராணுவத்தின் மூலம் இன்னொரு நாட்டின் பகுதியை எடுத்துக் கொள்வதையோதான் கூறுவார்கள்.
ஆனால், இப்போது ஆக்ரமிப்பு என்றவுடனேயே நில ஆக்ரமிப்புதான் நினைவுக்கு வருகிறது. என் உறவினர் ஒருவர் தன் பரம்பரைச் சொத்தான வீட்டை முழுவதுமாக இடித்தார். அந்த நிலத்தைச் சமன்படுத்தினார். நிதி நெருக்கடி காரணமாக இரண்டு வருடம் கழித்து வீடு கட்டிக் கொள்ளலாம் என்று நகரின் வேறொரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்.
அதற்குப் பிறகு அவர் தனது நிலத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. திடீரென்று ஒரு நாள் வழியில் தன் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது “பரம்பரை வீடு இருந்த இடத்தில் வீடு கட்டத் தொடங்கவில்லையா?’’ என்று கேட்டிருக்கிறார். “இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை’’ என்றார் என் உறவினர். “அங்க ஏதோ கட்டுமானம் நடந்துக்கிட்டிருக்கே’’ என்றார் நண்பர் வியப்புடன்.
அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பு
பதற்றத்துடன் என் உறவினர் அங்கு சென்று பார்த்ததில் அவர் நிலத்தை யாரோ ஆக்ரமித்திருந்தது புரிந்தது. தட்டிக் கேட்டதற்கு ஓர் அரசியல்வாதியை அழைத்து வந்தார்கள். இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துக்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி லாபம் பார்ப்பது அந்தக் கட்சிக்கு வழக்கமான ஒன்றுதான். “ஐந்து லட்சம் ரூபாய் கொடுங்கள். காலி பண்ணச் சொல்றோம். ஏழைகளுக்குக் கொடுத்தா குறைஞ்சுட மாட்டீங்க’’ என்று சொன்னார் கட்சியின் உள்ளூர்த் தலைவர். பிறகு ஒரு வழியாக மூன்று லட்ச ரூபாய் கொடுத்த பின்தான் அந்த நிலத்தை மீட்க முடிந்தது.
நீதிமன்றத்துக்குப் போகும் மனநிலை உறவினருக்கு இல்லாததும் கட்சி அடியாட்களிடம் பயந்து போனதும் இதற்குக் காரணங்கள். நம்முடைய நிலத்தை இதுபோன்ற ஆக்ரமிப்புகளிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பதை அறிந்திருக்க வேண்டியது மிக முக்கியம். நீங்கள் நிலத்தை வாங்குகிறீர்கள் என்றால் அதற்கான தொகையை முழுவதுமாகச் செலுத்தியவுடன் உங்கள் பெயரில் அந்த நிலத்தைப் பதிவுசெய்ய வேண்டியது மிக முக்கியம்.
நிலத்துக்குக் காப்பீடு வேண்டும்
ஒரு நிலத்தை அப்படியே விட்டு வைத்திருந்தால் அதில் பலவிதமான அபாயம் உண்டு. அவற்றில் ஆக்ரமிப்புகள் என்பது மிக முக்கியம். ‘வீடு பாழடைந்த நிலையில் இருக்கிறது. அதை இடித்துவிட்டுக் கட்ட வேண்டும்’ என்று அதைக் காலியாகவே அப்படியே விட்டு வைத்திருந்ததால் ஒருவர் வேறொரு சோதனைக்கு உள்ளானார். சட்டத்துக்கு விரோதமான சில செயல்களைச் செய்ய அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் சில விஷமிகள். இதைத் தொடர்ந்து எந்தப் பாவமும் செய்யாத அந்த வீட்டின் உரிமையாளர் காவல் நிலையம், நீதி மன்றம் என்று அலைய வேண்டியிருந்தது.
ஆக நிலமோ, வீடோ காலியாகப் போட்டு வைத்திருந்தால் பலவித சிக்கல்கள் உண்டு. அங்குள்ள மின் இணைப்புகள், நீர் இணைப்புகள் போன்றவை பழுதடைந்து போகலாம் என்பதும் ஒரு சிக்கல்தான்.
சில முதலீடு என்ற பெயரில் நிலத்தை வாங்கிப் போட்டுக் கொள்வார்கள். காலப்போக்கில் அது பெரும் தொகையை ஈட்டித்தரும் என்ற கணக்கு. நிலம் என்பது ஒரு சொத்து. அதைப் பாதுகாக்க வேண்டும். வீட்டில் வசிக்கும்போது நிலத்துக்குக் காப்பீடு வாங்க வேண்டிய அவசியம் குறையும்தான் (வீட்டுக்குக் காப்பீடு வாங்கினால் போதுமானது). ஆனால், வெறும் நிலத்தை விட்டு வைக்கும்போது அதற்குக் காப்பீடு எடுத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இதற்கான காப்பீட்டுத் தவணை என்பது குறைவுதான். வழக்கமான காப்பீடுகளில் ஆக்ரமிப்புகள் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், சிலவகைக் காப்பீடுகளில் ஆக்ரமிப்பும் சேர்க்கப்படுகிறது. அதாவது யாராவது உங்கள் நிலத்தை ஆக்ரமித்தால் அதை நீக்குவதற்காக உங்களுக்கு ஆகும் செலவைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கும்.
நிலத்தைக் கண்காணிக்க வேண்டும்
ஆனால், மேலே குறிப்பிட்டதுபோல ஆக்ரமிப்பாளர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து காலி பண்ணச் செய்தால் அதைக் காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. காரணம் அது சட்டவிரோதமானது. நிலத்தை நோக்கி சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்துவது நல்லது (வீட்டைக் காலியாக வைத்திருந்தால் அதை உறுதியான பூட்டுக்களால் பூட்டுவதும், திருடர்கள் வந்தால் அலாரம் அடிக்கும்படியான வழிவகை செய்வதும் முக்கியம்). முதலில் நிலத்தைச் சுற்றிக் கம்பிகளால் வேலி போடுங்கள் அல்லது சுவர் எழுப்புங்கள். ஒரு வேலி உருவாக்கி அதைப் பூட்டுங்கள்.
“இந்த நிலம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அணுகுங்கள்’’ என்பதுபோல அறிவிப்புப் பலகையை உங்கள் நிலத்தில் நட்டு வையுங்கள்.
உள்ளூர் காவல் நிலையத்தில் நீங்கள் இந்த விஷயத்தைச் சொல்வதில் தவறில்லை. உங்கள் நிலம் இருக்கும் பகுதியில் நம்பத்தகுந்த ஒருவரிடம் நட்பாக இருங்கள். இதன் மூலம் ஏதாவது ஆக்ரமிப்பு தொடங்கினால் அவர் உங்களைத் தொடர்பு கொண்டு இதைத் தெரிவிக்கலாம்.
உள்ளூரில் இருந்தால் மாதம் ஒரு முறையாவது வந்து அந்த நிலத்தில் சிறிது நேரம் இருங்கள். ஆக்ரமிப்பு செய்பவர்கள் இதை அறியும்போது கொஞ்சம் விலகியே இருப்பார்கள். நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்தால், உள்ளூரிலுள்ள நம்பகமான ஒருவரிடம் உங்கள் நிலத்தை அவ்வப்போது பார்த்துவிட்டு வரச் சொல்லுங்கள்.
ஆக்ரமிப்பு என்பது ஒருபோதும் நிகழவே கூடாது என நினைத்தால் செக்யூரிட்டி ஒருவரைக் காவலுக்குப் போடலாம். முக்கியமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் இதற்கு ஆகும் செலவைப் பொருட்படுத்தக் கூடாது. காவலாளியை நம்பத் தகுந்த செக்யூரிட்டி ஏஜன்ஸி மூலமாக நியமிப்பது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT