Last Updated : 09 Mar, 2019 12:38 PM

1  

Published : 09 Mar 2019 12:38 PM
Last Updated : 09 Mar 2019 12:38 PM

சிபில் ஸ்கோர் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

சிபில் ஸ்கோரைப் (CIBIL Score) பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிபில் என்ற அமைப்பு உங்களுக்கு அளிக்கும் மதிப்பெண் இது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் உங்களுக்குக் கடன் கொடுக்கும். கடந்த காலத்தில் வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியுள்ளீர்களா என்பது போன்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சிபில் மதிப்பெண்கள் வழங்கும். இது 300லிருந்து 900 வரை வழங்கப்படும் இந்த மதிப்பண்ணில் 700-ஐவிட நீங்கள் குறைவாகப் பெற்றிருந்தால் வங்கிகள் உங்களுக்குக் கடன் கொடுக்கத் தயங்கும். எனவே சிபில் ஸ்கோரை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கும்.

அதற்கான சில வழிமுறைகள் இவை.

பாக்கி வேண்டாம்

ஏற்கெனவே நீங்கள் வாங்கிய கடனில் நிலுவைத் தொகை இருந்தால் அதைக் கட்டிவிடுங்கள். கடந்த சில மாதங்களுக்கான தவணையை ஒருவேளை கட்டாமல் இருக்கலாம். அது பெரிய விஷயம் அல்ல என்று நீங்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால், அது உங்களது சிபில் ஸ்கோரைக் குறைக்க வாய்ப்பு உண்டு.

கடன் அட்டைகள் மீது

கவனம் தேவை

கடன் அட்டைகளைக் கொண்டு நீங்கள் நிறையப் பொருள்களை வாங்கியிருக்கலாம். உங்கள் கணக்கிலுள்ள தொகையைவிட அதிகமான

தொகைக்கு நீங்கள் வாங்கியிருக்கலாம். ‘இதற்காகத்தானே கடன் அட்டை இருக்கிறது’ என்று நீங்கள் உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்த அதிகப்படித் தொகையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நீங்கள் செலுத்திவிட வேண்டும். மீறினால் உங்கள் வங்கி மிக அதிகமான வட்டித் தொகையை உங்களிடமிருந்து வசூலிக்கும் என்பது ஒருபுறமிருக்க, சிபில் ஸ்கோரும் குறையத் தொடங்கும்.

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு பெரிய கடன் தொகையை (அது வீட்டுக் கடனோ தனிநபர் கடனோ) வங்கிக்குச் செலுத்தி முடித்தபின் அந்த விவரத்தை அந்த வங்கி சிபில் அமைப்புக்குத் தெரியப்படுத்தி விட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

சரிபார்த்தல் அவசியம்

ஏதாவது பெரிய வங்கிக் கடனை நீங்கள் முழுவதுமாகச் செலுத்தி விட்டீர்கள் என்றால் www.cibil.com என்ற வலைத்தளத்துக்குச் சென்று உங்கள் சிபில் மதிப்பெண் என்னவாக இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். அது மிகவும் குறைவாக இருப்பதாக நீங்கள் கருதினால் இது குறித்து உங்கள் வங்கியின் மூலம் சிபில் அமைப்பை அணுகி நீங்கள் தீர்வு பெறலாம். இந்தப் பிரச்சினையைச் சரிசெய்த பிறகு அடுத்த கடனுக்காக நிதிநிறுவனங்களை நாடுவதுதான் புத்திசாலித்தனம்.

தவணையைத் தவற விடாதீர்கள்

வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணைகளை ஒவ்வொரு மாதமும் ரொக்கமாகச் செலுத்துவது அல்லது ஒவ்வொரு மாதமும் அந்தத் தவணைக்கான காசோலையை உங்கள் கடன் கணக்கில் கட்டுவது என்பதில் சில சிக்கல்கள் ஏற்படக் கூடும். ஏதாவது ஓரிருமுறை சில அவசரத் தேவையால் இப்படித் தொகைகளைச் செலுத்துவதில் தாமதம் உண்டாகலாம். உங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் கடன் கணக்குக்கு மாதத் தவணையை மாற்றிக்கொள்ளும்படியான நிரந்தர உத்தரவை (Standing Instructions) நீங்கள் அளிக்கலாம். சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ள இதுவும் ஒரு வழி.

அது புத்திசாலித்தனமல்ல

ஒரு வங்கியில் அதிக அளவுக்குக் கடன் பெற அனுமதி வாங்கிவிட்டு அதில் ஒரு பகுதியை மட்டும்தான் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால் ‘நான் புத்திசாலி’ என்று நீங்கள் பெருமைபட்டுக் கொள்ளலாம். ஆனால், ‘தேவைப்படும் நிதியைக் கணிக்கத் தெரியாதவர்’ என்ற கோணத்தில் உங்கள் சிபில் மதிப்பெண் குறையக் கூடும்.

காலம் அதிகமாகலாம் –

தவணை அதிகம் வேண்டாம்

வங்கியிலிருந்து கடன் பெறும்போது மாதத் தவணைக்கான தொகை அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடன் செலுத்த வேண்டிய காலம் சற்று அதிகமானாலும் பரவாயில்லை. இதன் காரணமாக மாதத் தவணையைச் செலுத்துவதில் சுணக்கம் ஏற்படாது. சிபில் மதிப்பெண் அதிகமாகும். பெருந்தொகை கைக்கு வந்தால் வீட்டுக் கடன் கணக்கில் அப்போது அதிகமாகச் செலுத்தி விடலாம்.

ஒன்றுக்குப் பிறகு அடுத்தது...

ஒரே நேரத்தில் பலவித வங்கிகளில் கடன்களைப் பெற வேண்டாம். ஓரிரு கடன்களைப் பெற்று அவற்றை அடைத்து விட்டபிறகு அடுத்தடுத்த கடன்களை விண்ணப்பித்தால் நீங்கள் நிதி நிலைமையைச் சரியாகத் திட்டமிடுகிறீர்கள் என்று சிபில் அமைப்பு கருதும்.

பழையதைப் புறக்கணிக்க வேண்டாம்

நம் நாட்டில் சிலர் நாலைந்து கடன் அட்டைகளை வைத்திருப்போம். வேறு சிலர் நெடுநாட்களாகப் பயன்படுத்திய கடன் அட்டைகளுக்கான வங்கிக் கணக்கை க்ளோஸ் செய்து விடுவோம். சமீபத்தில் பெற்ற கடன் அட்டை போதுமானது என்ற முடிவுக்கு வந்து விடக் கூடும்.

நீண்ட நாட்களாக ஒரு வங்கிக் கணக்கைச் சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தீர்கள் என்றால், அதற்கான கடன் அட்டையைச் சிக்கலின்றிப் பயன்படுத்தி இருந்தீர்கள் என்றால் (அதாவது உரிய காலத்துக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்துதல்) அந்தக் கணக்கையும் கடன் அட்டையையும் தொடர்ந்து ஓரளவாவது பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சிபில் மதிப்பெண்ணை ஏற்றுவதற்கு உதவும்.

உங்கள் சிபில் மதிப்பெண் உயர்ந்தால் அடுத்து நீங்கள் ஒரு பெரிய தொகைக்குக் கடன் கேட்பதற்கு சிக்கல் இருக்காது. எனவே, மேற்கூறிய கோணங்களில் கவனம் செலுத்துங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x