Last Updated : 02 Mar, 2019 11:20 AM

 

Published : 02 Mar 2019 11:20 AM
Last Updated : 02 Mar 2019 11:20 AM

கட்டிடங்களின் கதை 14: கடல் அலைக் கட்டிடம்

டென்மார்க்கின் முக்கியமான நகரங்களுள் ஒன்றான வைலேவில் (Vejle) உள்ளது ‘த வேவ்’ அடுக்குமாடிக் குடியிருப்பு. இந்தக் கட்டிடம் வடிவமைப்பால் உலகப் புகழ்பெற்றது. இதன் முன் நின்று பார்ப்பவர்கள் ஒரு கணம் தங்களை அலையடித்துச் சென்றுவிடக் கூடும் என அச்சப்படலாம். ஏனெனில், கடலலையைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டது இந்தக் கட்டிடம்.

முழுமை பெறுவதற்கு முன்பே விருது

அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பொதுவான தோற்றத்தை உடைத்து நவீனக் குடியிருப்புக்கான வடிவமைப்பை உருவாக்கியதில் மிகப்பெரும் பங்கு ‘த வேவ்’ கட்டிடத்துக்கு உண்டு. சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் ‘த வேவ்’ கட்டிடத்தை வடிவமைத்தவர் பிரபலக் கட்டிட வடிவமைப்பாளரான ஹென்னிங் லார்சன்.

கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘த வேவ்’ கட்டிடத்துக்கான பணிகளை முழுவதுமாக முடிக்கவே 11 ஆண்டுகள் ஆயின. இதனிடையில் 2009-ம் ஆண்டு உலக அளவில் நிலவிய பொருளாதார மந்தநிலை ரியல் எஸ்டேட் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்கம் ‘த வேவ்’ கட்டிடப் பணிகளையும் பாதித்தது. ஆனால், ‘த வேவ்’ கட்டிடம் இரண்டு பாகங்கள், ஐந்து தளங்களை முடித்திருந்த நிலையில் அதனுடைய புதுமையான வடிவமைப்புக்காக டென்மார்க் கட்டிட வடிவமைப்பியல் இதழின் சார்பில் சிறந்த கட்டிடத்துக்கான விருதைப் பெற்றது. ‘த வேவ்’ முழுமை பெறுவதற்கு முன்பே கடலலை போன்ற அதனுடைய வடிவமைப்புக்குச் சர்வதேச விருதுகளைக் குவிக்கத் தொடங்கியது.

வைலெவின் அடையாளச் சின்னம்

டென்மார்க்கில் மடிப்பு மலைகளும் ஏரியும் ஒன்றிணைந்த இடமாக வைலே உள்ளது. இதுபோன்ற காட்சி அந்நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம். இப்படிப்பட்ட பசுமைச் சூழல் நிறைந்த இடத்தில் பதினான்காயிரம் சதுர அடிப் பரப்பளவில் ‘த வேவ்’ கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மடிப்பு மலைகளைப் போல் மேலும் கீழுமாக வளைந்து உள்ள ‘த வேவ்’ கட்டிடம் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகத்திலும் ஒன்பது மாடிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் நூறு சொகுசுக் குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் பால்கனியும் ஏரியை நோக்கியுள்ளது.

கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையின் மேல் உள்ள சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் நுழைய வழிசெய்யப்பட்டுள்ளன. ‘த வேவ்’ கட்டிடத்தில் உள்ள சொகுசு வீடுகளின் உள்கட்டமைப்புகள் எளிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளின் தரைத்தளம், பால்கனி உட்பட அனைத்து இடங்களும் மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தின் நுழைவாயிலில் பிரம்மாண்டமான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிக்கட்டுகள் கீழ்ப் பகுதியில் உள்ள ஏரியை இணைக்கின்றன. பகல் பொழுதில் கட்டிடத்தின் பிம்பம் ஏரியில் பிரதிபலிக்கும். அதேபோல் மாலை நேரத்தில் மலைகளுக்கு நடுவே எரியும் ஜோதியைப் போல் ‘த வேவ்’ மின்விளக்குகளால் மின்னுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான சிறந்த கட்டிடத்துக்கான சிவிக் டிரஸ்டி விருது ‘த வேவ்’ கட்டிடத்துக்கு வழங்கப்பட்டது.

larsenjpgஹென்னிங் லார்சன்

சாதனைக்குச் சொந்தக்காரர்

டென்மார்க் நாட்டின் முக்கியமான கட்டிட வடிவமைப்பாளர் ஹென்னிங் லார்சன். இவருடைய கட்டிட வடிவமைப்பு முறைகள் அந்நாட்டின் நவீனக் கட்டிடங்களுக்கு ஆதாரமாக விளங்கின. அந்நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக கோபன்ஹேகனில் உள்ள டென்மார்க் தேசிய ஓப்ரா அரங்கத்தை வடிவமைத்தார்.

அதேபோல் ஐஸ்லாந்து நாட்டில் இவர் வடிவமைத்த ஹர்பா அரங்கம் நவீன கட்டிடத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய விருது வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய கட்டிடக்கலைக்காக ‘பிரீமியம் இம்பீரியல்’ விருதுபெற்ற முதல் டென்மார்க் கட்டிடக் கலைஞர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஹென்னிங் லார்சன்.

இவர் ‘த வேவ்’ கட்டிடத்துக்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் தன்னுடைய 87 வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x