Published : 30 Mar 2019 11:49 AM
Last Updated : 30 Mar 2019 11:49 AM
வீட்டின் அறைக்கலன்களில் முக்கியமானது சோஃபா. ஒரு சோஃபா வாங்குவதென்பது பெரிய முதலீடு. ஒரு வடிவமைப்பாளரின் உதவியில்லாமல் சோஃபா வாங்கும்போது, அவற்றின் வண்ணங்களில் கவனமாக இருப்பது அவசியம். ஒவ்வொரு வண்ண சோஃபாவையும் எப்படிப்பட்ட வண்ணங்களுடன் பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள்..
வெள்ளை நிறம்
வெள்ளை நிற சோஃபா எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. வெள்ளை சோஃபாவுடன் எப்படிப்பட்ட பொருட்களையும் இணைத்து பயன்படுத்த முடியும். வெள்ளை சோஃபாவுடன் உங்கள் ரசனைக்கேற்ற வகையில், எந்த நிற நாற்காலிகளையும் பயன்படுத்தமுடியும். ஆனால், உறைத்துணியைத் தேர்ந்தெடுக்கும்போது, எளிதில் துவைக்கும்படியான துணியைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
கிரீம் நிறம்
வெள்ளையைப் போன்றே கிரீம் நிறமும் பன்முகத்தன்மை கொண்டது. இந்த வண்ண சோஃபாவுடன் கறுப்பு, சிவப்பு, சாம்பல் போன்ற வண்ணங்களை இணணைத்து பயன்படுத்தலாம்.
பிஸ்கட் நிறம்
பிஸ்கட் வண்ண சோஃபாவுடன் நீலம், கறுப்பு, வெள்ளை, போன்ற வண்ணங்களுடன் இணைத்துப் பயன்படுத்தலாம். இந்த வண்ண சோஃபாவைப் பெரும்பாலும் அடர்நிறங்களுடன் பயன்படுத்தலாம்.
பிரவுன் நிறம்
சாம்பல் வண்ணம் பிரபலமானதால் தற்போது பிரவுன் நிற சோஃபா சற்று பின்தங்கியுள்ளது. ஆனால், பிரவுன் நிறம் சார்பற்றது. அத்துடன், கிளாசிக் தன்மையுடையது. பாரம்பரிய வண்ணங்களை விரும்புபவர்கள் பிரவுன் நிற சோஃபாவைத் தேர்ந்தெடுக்கலாம்.
மென் சாம்பல் நிறம்
மரவேலைப்பாடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீடுகளில் மென் சாம்பல் நிற சோஃபாவைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அத்துடன், மென் சாம்பல் அடர் நகை வண்ணங்களான ‘மயில்கழுத்து’ ‘மரகதப்பச்சை’ போன்ற வண்ணங்களுடன் கச்சிதமாகப் பொருந்தும். அத்துடன், இயல்பாகவே சாம்பல் நிறம் கறுப்பு, வெள்ளையுடன் பொருந்திபோகும் என்பதால், மற்ற அறைக்கலன்களை கறுப்பு, வெள்ளையில் பயன்படுத்தலாம்.
மங்கலான வண்ணங்கள்
மங்கலான வண்ணங்களில் சோஃபாவைத் தேர்ந்தெடுக்கும் போது, வழக்கமான நிறத்தில் இல்லாமல் புதுமையான நிறக்கலவையுடன் தேர்ந்தெடுங்கள். பொதுவாக, ஒரு மங்கலான நிறத்துடன் அதை ஈடுசெய்யும்படி, மற்றொரு வண்ணம் இணைக்கப் பட்டிருக்கும். உதாரணத்துக்கு, மங்கலான நீல நிறத்தில் ஆரஞ்சு நிறம் சற்று சேர்க்கப்பட்டிருக்கும். புதுமையான வண்ணங்களை முயற்சிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மங்கலான வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
இயற்கையின் நிறம்
இயற்கையின் நிறங்களான நீர் நீலம், பச்சை போன்றவற்றை மங்கலாகப் பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும்.
நுட்பமான வடிவங்கள்
நுட்பமான வடிவங்கள் அமைந்திருக்கும் சோஃபாக்களைப் பாரம்பரிய வடிவமைப்புகளைக் கொண்ட வீடுகளில் பயன்படுத்தலாம். இந்த சோஃபா அமைந்திருக்கும் வடிவங்களை அடிப்படையாக வைத்தும் மற்ற அறைக்கலன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
தோல் சோஃபா
தோல் சோஃபாவைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், எந்த வண்ணத்திலும் தேர்ந்தெடுக்கலாம். வீட்டின் மற்ற வடிவமைப்புகளோடு அது பொருந்திபோகவேண்டுமென்ற அவசியமில்லை. அது அழகான தோற்றத்தை வீட்டுக்கு அளிக்கும். வீட்டின் தோற்றத்தை அடிக்கடி மாற்ற விரும்புபவராக இருந்தால், சிவப்பு, அடர் மஞ்சள் போன்ற வண்ணங்களைத் தவிர்த்துவிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT