Published : 02 Feb 2019 12:11 PM
Last Updated : 02 Feb 2019 12:11 PM
ஸ்டுடியோ என்றால் ஒளிப்படம் எடுக்கும் இடம் என்றுதான் பலரும் புரிந்து வைத்திருப்போம். அப்படியானால் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் என்றால் என்ன? ஒரு ஒளிப்படக்காரர் ஒரு ஃபிளாட்டை வாங்கி அல்லது வாடகைக்குப் பெற்று அங்கே தன் அலுவலகத்தை நடத்தினால் அது ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் என வேடிக்கையாக யோசிக்கலாம்.
ஆனால் ஸ்டுடியோ அபார்ட் மெண்ட் என்பது வேறொன்றைக் குறிக்கிறது. ஒரு பெரிய அறை, அதோடு ஒட்டிய கழிப்பறை – இவை மட்டுமே ஒரு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டில் காணப்படும்.
இப்படியொரு ஃப்ளாட் விலைக்கு வந்தால் அதை வாங்குவது புத்திசாலித்தனமா, இல்லையா? இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்து மேலும் கொஞ்சம் தெளிவு கொள்ளலாம்.
ஒரே ஒரு பெரிய அறை மட்டுமே இதில் இருக்கும் என்பதை மனத்தில் கொண்டு ஒற்றை அறை ஃப்ளாட்டும் (Single bedroom flat) இதுவும் ஒன்றுதான் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் ஒரு கூடம், சமையல் அறை ஆகியவை உண்டு. படுக்கையறை ஒன்றும் இருக்கும். ஆனால், ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டில் கூடம், சமையல் அறை என்று எதுவும் தனித்தனியாக இருக்காது.
ஒரே அறையில் ஒரு பகுதியில் சோபா போடப்பட்டு அதை வரவேற்புப் பகுதியாகக் கருதுவார்கள். மற்றொரு மூலை சமையல் அறையாகப் பயன்படும். தேவை என்றால் இவற்றை எல்லாம் மரத்தடுப்புகளோ, குறைவான உயரமுள்ள மெல்லிய சுவர்களோ பிரிக்கும்.
அதே சமயம் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டில் உள்ள ஒரே அறை என்பது மிகப் பெரியதாக இருக்கும். ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டின் வாடகை குறைவாகத்தான் இருக்கும்.
குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரிந்து தனியே வாழ்பவர்கள் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை வாங்கலாம். நகரிலிருந்து மிகவும் தள்ளிய புறநகர்ப் பகுதியில் வசிப்பவர்களும், குடும்பத்தில் ஓரிருவர்தான் என்றால் தொடக்கத்தில் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை வாங்கலாம்.
இதில் கிடைக்கக் கூடிய இன்னொரு வசதி என்பது மின் கட்டணம் குறைவாகவே ஆகும் என்பதுதான். மொத்த அறைக்குமே பளிச்சென்ற ஒரே பல்பு போதும் - ஒவ்வொரு அறைக்கும் ஏ.சி. என்பது கிடையாது.
எல்லாப் பொருள்களையும் ஒரே அறையில் வைப்பதால் அவற்றைக் கையாள்வது சுலபம். தொலைந்து போனாலும் ஒரே அறையில் அவற்றைத் தேடினால் போதும்!
அடுக்கு மாடிக் கட்டிடங்களில்கூட இடப்பற்றாக்குறை காரணமாகச் சில ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்கள் விலைக்கு வரும். இவற்றை வாங்கினால் நீச்சல் குளம், ஜிம் போன்ற பொது வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது கொஞ்சம் சுலபம் (ஒரே அறைதானே!) ஆனால், ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை என்றால் வீட்டுக்கு எந்த விருந்தாளி வந்தாலும் அந்த ஒழுங்கீனம் பளிச்சென்று புலப்பட்டு விடும்.
நகரின் முக்கியமான பகுதிகளில் அமைந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்கள் கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். வேறு அசவுகரியங்களும் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வரும்போது அங்கு தங்குவதற்குச் சங்கடப்படலாம். வழக்கமான ஃப்ளாட்களை விற்பதைவிட ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை விற்பதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும்.
பிரிட்டனில் இந்த வகை வீடுகளை ‘பேச்சிலர் அபார்ட்மெண்ட்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். சில மேலை நாடுகளில் ‘சின்னஞ் சிறிய வீடு இயக்கம்’ (Tiny–house movement) என்று உண்டு. அதாவது பெரிய வீடு வைத்திருக்கக் கூடாது என்றும், அனைவருமே சிறு வீடுகளில்தான் வசிக்க வேண்டும் என்றும், அதுதான் சோஷலிசம் என்றும் கருதுபவர்கள் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை ஆதரிப்பதுடன் அவற்றைப் பரிந்துரைக்கவும் செய்கிறார்கள்.
ஆனால், எக்கச்சக்கமான சாமான்களை வைத்திருப்பவர்களும் பெரிய குடும்பத்தைக் கொண்டவர்களும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை மறந்து விடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT