Last Updated : 09 Feb, 2019 10:43 AM

 

Published : 09 Feb 2019 10:43 AM
Last Updated : 09 Feb 2019 10:43 AM

தண்ணீர்த் தொட்டிக்கு ஒரு இயற்கை டானிக்- ஐந்து வழிமுறைகள்

சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி குடியேறிச் சில ஆண்டுகளிலேயே மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது தண்ணீர்த் தொட்டியைப் பராமரிப்பதுதான்.

ஐந்து வழிமுறைகள்

வீட்டிலுள்ள சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை, கழிப்பறை என அனைத்தையும் வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து பராமரிப்போம். ஆனால் தண்ணீர்த் தொட்டிகள் பக்கமே பல ஆண்டுகளாகச் சென்றிருக்க மாட்டோம். இதனால் தொட்டியில் திடீர் விரிசல், தண்ணீர்க் கசிவு அல்லது தண்ணீரில் பூச்சிகள், தண்ணீர்க் குழாய்களில் அடைப்பு எனப் பிரச்சினை வரும்போதுதான் தண்ணீர்த் தொட்டியை எட்டிப் பார்ப்போம். அப்போதுதான் இதைச் சரிசெய்ய யாராவது இருப்பார்களா எனத் தேடத் தொடங்குவோம். அப்படிப்பட்டவர்களுக்கு ‘இதோ நாங்கள் இருக்கிறோம்’ என்கிறார் ‘டேங்க்மேன்’ சுந்தர்ராஜன்.

வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு, அலுவலகம், கல்வி நிலையங்கள், கோயில் வளாகம் என அனைத்து இடங்களிலும் உள்ள தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்துகொடுப்பது. தண்ணீர்த் தொட்டியில் விரிசல், பூச்சி வராமல் தடுப்பது போன்ற வேலைகளைத் தன்னுடைய ‘டேங்க் மேன்’ நிறுவனம் மூலமாக அவர் செய்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இந்த நிறுவனத்தை நடத்திவரும் சுந்தர்ராஜனுக்கு இதுவரை 2,500 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் பல சினிமா பிரபலங்களும் அடங்குவார்கள். “டேங்க் மேன் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு கட்டிட நிறுவனம் ஒன்றில் இருபத்தைந்து ஆண்டுகள் பிளம்பிங் பணிகளைச் செய்துவந்தேன். ஆனால் அந்நிறுவனம் மூடப்பட்டவுடன் குடும்பத்தினரின் ஆதரவால் தொடங்கியதுதான் ‘டேங்க்மேன்’ நிறுவனம். தண்ணீர்த் தொட்டியில் அடைப்பு அல்லது வேறுமாதிரியான பிரச்சினை என்றால் இன்றைக்கு பிளம்பர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரிய வேலையாக உள்ளது. இதன் காரணமாகத்தான் தண்ணீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் வேலையைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் அவர்.

தண்ணீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு ஐந்து முறைகளைக் கடைப்பிடிக்கிறார் சுந்தர்ராஜன். முதலில் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது, இரண்டாவது ‘ஆர்கானிக் கிளினிங்’ இயற்கை முறையிலான ரசாயனத்தைப் பயன்படுத்தி தொட்டியின் தரைப்பகுதி, சுவர்களில் படிந்துள்ள பாசி, பூஞ்சை போன்றவற்றை அகற்றுவது. மூன்றாவது தொட்டியிலுள்ள அழுக்கைத் சுத்தம்செய்து வெளியேற்றுவது. நான்காவது வேக்குவம்கிளீனர்கொண்டு தண்ணீர், சிறு தூசியைக்கூட எடுப்பது. இறுதியாக இரண்டு கோட்டிங்வொயிட்சிமெண்ட் பூசிக் காயவிடுவது.

பிளீச்சிங் இல்லை

‘பொதுவாகத் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதென்றாலே பிளீச்சிங் பவுடரைக் கொண்டுதான் சுத்தம் செய்வார்கள். இதனால் உடல்நல பாதிப்பு, சரும பாதிப்பு மற்றும் தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி வேலைச் செய்பவர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால்தான் பிளீச்சிங் பவுடருக்குப் பதிலாக எங்கள் வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் ரசாயனத்தைப் பயன்படுத்துகிறேன். இதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது. சிண்டெக்ஸ், தரை அடியிலுள்ள தண்ணீர்த் தொட்டி (சம்ப்), இரண்டையும் சுத்தம் செய்து கொடுக்கிறோம். இதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களை நானே எடுத்துச் சென்றுவிடுவேன். வேலைக்கு ஆட்கள் வைத்துள்ளேன். வீடாக இருந்தாலும் அலுவலகமாக இருந்தாலும் வேலை நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று அனைத்து வேலைகளையும் சுத்தமாகச் செய்து கொடுத்துவிடுவேன். எல்லா வீட்டையும் என்னுடைய வீடு போல்தான் நினைத்துச் செய்வேன்” என்கிறார் அவர்.

அதேபோல் தண்ணீர்த் தொட்டிகளில் பூச்சிகள் வராமல் இருக்க நெட் போட்டுத் தரப்படுகிறது. இதனால் பூச்சிகள் தண்ணீரில் விழுவதில்லையாம். ஒருமுறை தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தால் அதிகபட்சம் பதினைந்து மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும். தண்ணீர்த் தொட்டி சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் சுத்தம் செய்து கொடுக்கிறார் இவர். இதற்காகக் குறைந்தபட்ச தொகையை மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x