Last Updated : 16 Feb, 2019 03:34 PM

 

Published : 16 Feb 2019 03:34 PM
Last Updated : 16 Feb 2019 03:34 PM

‘கீல்’கள் கவனம்

வீடுகளுக்கு கீல்கள் (Hinge) பொருத்துவது என்பதைப் பலரும் பெரிய விஷயமாகக் கருதுவதில்லை. பெரும்பாலும் இதைக் கட்டிடம் கட்டுபவரின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறார்கள். ஆனால் இதில் பல நுணுக்கங்கள் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எந்தவகையான கீல்கள் எங்கே பொருத்த வேண்டும் என்பதற்குச் சில அடிப்படைத் தர்க்கங்கள் உண்டு. வெளிக் கதவுக்குப் பொருத்தப்படும் கீல்கள் இரும்புக் கலப்பு இல்லாதாக இருக்க வேண்டும்.

எஃக்கில் உருவாக்கப்பட்ட கீல்கள் உண்டு. பித்தளையிலும் வெண்கலத்திலும் இருக்கலாம், இரும்பில் இருக்கலாம். இவற்றில் வெண்கலம், பித்தளை போன்றவற்றில் இரும்புக் கலப்பு கிடையாது.

வெளியில் பொருத்தப்படும் கீல்கள் துருப்பிடிக்கக் கூடாது (அங்கு துருப்பிடிக்க வாய்ப்பு அதிகம். எனவேதான் இரும்புக் கலப்பில்லாத கீல்கள் அங்கே பொருத்தப்பட வேண்டும்).

மற்றபடி வீட்டிலுள்ள பெரிய, கனமான கதவுகளுக்கு வெண்கல கீல்கள் பொருத்தமானவை. இளவார்ப்பிரும்பு அல்லது வார்ப்பிரும்பு ஆகியவையும் இதற்கு ஏற்றவைதான்.

பலவித வண்ணங்களில்கூட கீல்கள் கிடைக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கேற்ப இதைத் தேர்வு செய்யலாம். அப்படித் தேர்ந்தெடுக்கும்போது கதவின் வண்ணத்தையும் மனதில் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் பலவித டிசைன்களில் கீல்கள் கிடைக்கின்றன. இலைகளின் வடிவில், கைமுஷ்டியைப் போல இன்னும் பல வடிவங்கள். மிக முக்கியமான இன்னொரு விஷயம் எந்த அளவு கொண்ட கதவுகளுக்கு எந்த அளவினாலான கீல்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது.

கதவின் அகலம் 36 அங்குலம் அல்லது அதற்குக் குறைவாக இருந்து கதவின் தடிமன் இரண்டு அங்குலமாக இருந்தால் கீல்கள் நான்கரைக்கு நான்கரை அங்குல அளவில் இருக்கலாம். 36லிருந்து 48 அங்குலங்கள் வரை கதவின் அகலம் இருந்து, கதவின் தடிமன் இரண்டே முக்கால் அங்குலத்தைவிட அதிகமாக இருந்தால் ஆறுக்கு ஆறு அங்குல அளவில் கீல்கள் இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கீல்கள் கதவுகளுக்குத் தேவைப்படும்.

ஒரு கதவுக்கு எத்தனை கீல்கள் பொருத்தப்பட வேண்டும்?

கதவின் உயரம் 60 அங்குலம் அல்லது அதற்குக் கீழ் என்றால் இரண்டு கீல்கள் போதுமானது. 61லிருந்து 80 அங்குலம் வரை என்றால் மூன்று கீல்கள் தேவைப்படும். இதைவிட அதிக உயரம் கொண்ட கதவு என்றால் நான்கு கீல்கள்.

சரியான விதத்தில் கீல்கள் பொருத்தப்படாவிட்டால் கதவைத் திறந்து மூடுவது இயல்பாக இருக்காது.

கதவின் மேற்புறத்திலிருந்து மிக உயரமான கீல் என்பது குறைந்தது ஐந்து அங்குல இடைவெளியில் இருக்க வேண்டும். அதேபோல கதவின் கீழ்ப்பகுதியிலிருந்து, கீழ்ப்புறம் பொருத்தப்படும் கீல்களுக்கு பத்து அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட கீல்கள் பொருத்தப்பட்டால் அவற்றிற்கிடையே உள்ள தூரம் சமமாக இருக்க வேண்டும்.

எந்த வீட்டுக்கும் கதவு என்பது முக்கியம். ஒரு கதவு அளிக்கும் பாதுகாப்பு என்பது அதன் கீல்களையும் பொருத்தது. எனவே கீல்களைப் பொருத்துவதிலும் நாம் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x