Published : 12 Jan 2019 10:37 AM
Last Updated : 12 Jan 2019 10:37 AM
பொங்கல் என்பது அறுவடைப் பண்டிகை. சூரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது. சூரிய வழிபாடு உலகின் பல்வேறு பண்பாடுகளில் உள்ளது. சூரியனை வணங்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. சூரியனை வழிபாட்டுக்காகத் தனிக் கோயில்கள் ஒடிசாவிலும் குஜராத்திலும் உள்ளன. சூரிய வழிபாட்டுப் பண்டிகையை ஒட்டி சூரியக் கட்டிடங்களைக் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது:
டிஈஜோ சூரிய மின் நிலையம்
சீனவில் டிஈஜோ நகரில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான சூரிய மின் நிலையம் இது. 75,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இது உலகின் மிகப் பெரிய சூரிய மின் நிலையம்.
மோதேரா சூரியக் கோயில்
குஜராத்தில் மோதேரா என்னும் இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. சாளுக்கியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் முதலாம் பீமதேவனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. சாளுக்கியக் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இந்தக் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சூரிய குண்ட தெப்பக் குளம் மிகப் பிரசித்திபெற்றது. இது இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.
ரா சிலை
எகிப்தியர்களிடத்தில் சூரிய வழிபாடு இருந்துள்ளது. அவர்கள் ரா என்ற பெயரில் சூரியக் கடவுளை வழிபட்டார்கள். எகிப்திய பிரமிடுகளில் உள்ள சூரியக் கடவுளின் சிற்பம் இது.
கோனார்க் சூரியக் கோயில், ஒடிசா
ஒடிசாவில் கோனார்க் என்னும் இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கலிங்கத்தை ஆண்ட கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மத் தேவர் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. கறுப்புக் கிரானைட் கற்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ள இந்தக் கோயில், கலிங்கக் கட்டிடக் கலையின் சான்றாகத் திகழ்கிறது.
சன்ரைஸ் கெம்பஸ்கி விடுதி
சீனாவில் பீஜிங் நகரத்தில் 2014-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் ஒரு தங்கும் விடுதி. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உதய சூரியனைப் போல் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21 மாடிக் கட்டிடமான இதில் மொத்தம் 306 விருந்தினர் அறைகள் உள்ளன. தொகுப்பு: விபின்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT