Published : 29 Dec 2018 11:18 AM
Last Updated : 29 Dec 2018 11:18 AM
2019-ம் ஆண்டை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வீட்டின் வண்ணங்களை மாற்றலாம் என்று பலரும் யோசித்துகொண்டிருப்பார்கள். தனிநபர்களின் உடல், உணர்வு, மனம், ஆன்மிக மட்டங்களில் தாக்கம் செலுத்தக்கூடியவை வண்ணங்கள். அதனால், வீட்டின் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுதல் கவனம் எடுத்துகொள்வது நல்லது.
வண்ணங்களுக்குக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. நாம் பார்க்கும் வண்ணங்கள் நமக்குள் பலவிதமான ஆற்றல்களைக் கடத்துகின்றன. ஒவ்வொரு நிறமும் தனித்துவம் வாய்ந்த அதிர்வைக் கொண்டிருக்கிறது. அதனால், வீட்டுக்கு வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துகொள்ளலாம். இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தைத் தவிர்க்கும்போது, அது நமக்குள் சோம்பல், சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை உருவாக்கும்.
அதுபோல, வண்ணங்களில் நல்ல வண்ணம் கெட்ட வண்ணம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஒரே வண்ணத்துக்கு நல்ல இயல்புகள், தீய இயல்புகள் என இரண்டுமே இருக்கின்றன. அதனால், எந்தவொரு வண்ணத்தையும் அளவுக்கு மீறி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
வண்ணங்களை வீட்டின் சுவர்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அறைக்கலன்கள், கலைப்பொருட்கள், ஓவியங்கள், விளக்குகள், செடிகள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள், தலையணைகள், படுக்கைவிரிப்புகள் போன்ற அம்சங்களிலும் பயன்படுத்தலாம். எந்த அறைக்கு என்ன வண்ணமடிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள்…
*வீட்டின் கூரைக்கு (Ceiling) எப்போதும் வெள்ளை, மங்கிய வெள்ளை நிறத்தைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. வெள்ளை நிறம் வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதால் கூரைக்கு ஏற்றதாக இருக்கும்.
*இயற்கையான வண்ணங்களான பச்சை (வாழ்வையும் வளர்ச்சியையும் குறிக்கும்), மஞ்சள் (நிலைத்தன்மை), ஆரஞ்சு (மகிழ்ச்சி), நீலம் (கவனம் குவிக்க உதவும்) போன்றவை குழந்தைகளின் அறைகளுக்கு ஏற்றவை.
* பூஜை அறைக்கு ஊதா, லாவெண்டர் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். ஆன்மிகம், அமைதி, ஞானம் போன்றவற்றை இரண்டு வண்ணங்களும் விளக்குவதால், அவை பூஜை அறைக்கு ஏற்றதாக இருக்கும்.
*ஆரஞ்சு வண்ணத்துக்கு உற்சாகம், ஆர்வத்தைத் தூண்டும் வலிமை இருக்கிறது. இந்த வண்ணம் உடற்பயிற்சி அறைக்கு ஏற்றதாக இருக்கும்.
* சிவப்பு வண்ணம் பசியைத் தூண்டும் வல்லமை கொண்டது. அதனால், சிவப்பு வண்ணச் சிதறல்கள் சாப்பாட்டு அறையில் இருப்பது பொருத்தமானதாக இருக்கும். சிவப்பு வண்ண மலர்கள், சிவப்பு மேசைத் துணி போன்றவற்றை இதற்குப் பயன்படுத்தலாம்.
* படுக்கையறைகளில் எப்போதும் அமைதியான வண்ணங்களைப் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். இளஞ்சிவப்பு, பீச் (Peach), இளம் மஞ்சள், பச்சை போன்ற மென்மையான வண்ணங்கள் படுக்கையறைக்குப் பொருத்தமாக இருக்கும். சிவப்பு, கோபத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் என்பதால் இந்த வண்ணத்தைப் படுக்கையறைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT