Published : 24 Nov 2018 11:32 AM
Last Updated : 24 Nov 2018 11:32 AM

சந்தை மதிப்புக்கு மனைக் கடன் கிடைக்குமா?

கட்டிய வீட்டை வாங்குவதுபோல மனை வாங்கி நம் விருப்பப்படி வீடு கட்டவும் பலருக்கும் விருப்பம். ஆனால் மனை வாங்கக் கடன் கிடைக்குமா என்பது பலருக்குள்ளும் இருக்கும் கேள்வி. வீடு வாங்கக் கடன் கிடைப்பதுபோல மனை வாங்கவும் கடன் கிடைக்கின்றன.

வீட்டுக் கடன் விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் மனைக் கடனுக்கும் தேவைப்படும். விண்ணப்பிப்பவரின் புகைப்படம், அரசு வழங்கிய அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழ், மாதச் சம்பளச் சான்றிதழ் (வேலை செய்யும் நிறுவனம் வழங்கும் சம்பள ஸ்லிப்), கடன் கேட்கும் தேதியிலிருந்து முந்தைய 6 மாத காலத்துக்கான வங்கிக் கணக்கு அறிக்கையின் நகல் ஆகியவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது மட்டுமல்ல,  மனையை யார் விற்கிறாரோ அவரது நில உரிமை ஆவணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். விலைக்கு வாங்கும் மனையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் (ஈ.சி.), சிட்டா சான்றிதழ், இடத்துக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட மனை சி.எம்.டி.ஏ. (சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழுமம்) மற்றும் டி.டீ.சி.பி. (நகர ஊரமைப்பு இயக்ககம்) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற நிலத்தின் வரைபடம், நிலத்தின் உரிமையாளர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனை வரி செலுத்திய ரசீது ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு உங்கள் கடன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கப் பரிசீலனைக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதைக் காசோலையாக வங்கிகள் பெற்றுக்கொள்ளும்.

வீட்டுக் கடனுக்கு 80 சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்கும். 20 சதவீதத் தொகையை நாம் தயாராக்க வேண்டும். அதுபோலத்தான் மனைக்கும். மனையின் மதிப்பு பெரு நகரம், சிறு நகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதற்கேற்றபடி மனைக் கடன் கிடைக்கும். மனைக் கடனில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் சந்தை மதிப்புக்கு ஏற்ப மனைக் கடன் கிடைக்காது.

அரசு வழிகாட்டு மதிப்புபடியே மனைக் கடன் கிடைக்கும். பெரு நகரங்களில் உள்ள மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பைப் பொறுத்து 70 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும். சில வங்கிகள் 80 முதல் 85 சதவீதம் வரைகூட மனைக் கடன் வழங்குகின்றன. சிறிய நகரங்களில் உள்ள மனைகளுக்கு மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும்.

மனைக் கடனில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இதற்கு வருமான வரிச் சலுகை இல்லை. வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கு வரி விலக்கு நிச்சயம் கிடைத்துவிடும். வீட்டுக் கடனுக்கு வழங்கப்படுவது போல மனைக் கடனை அடைக்கச் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு எந்த விதமான வரி விலக்கும் கிடையாது.

ஏனெனில், இது முதலீடாகப் பார்க்கப்படும். அதே நேரம் வாங்கிய மனையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு வரி விலக்குப் பெற முடியும். அந்த மனையில் கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறைவு செய்தால் முழு வரிச் சலுகை கிடைக்கும்.

- முராரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x