Published : 10 Nov 2018 12:02 PM
Last Updated : 10 Nov 2018 12:02 PM
என் நண்பர் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். வாடகைக்கு இருந்தவர் வேலை மாற்றலால் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு நகருக்குச் சென்றுவிட்டார். வீட்டைக் காலிசெய்தபோது வீட்டுக்கான இரு சாவிகளில் ஒன்றை மட்டும்தான் திருப்பிக் கொடுத்திருந்தார். “இன்னொன்றை எங்கேயோ வச்சிட்டேன். புது இடத்திலே செட்டில் ஆனதும் தேடி அனுப்புகிறேன்’” என்று சொன்னவர் அதை அனுப்பவே இல்லை.
புதிதாகக் குடிவந்தவருக்கு ஒரு சாவி கொடுக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் வீட்டில் சில பொருட்கள் களவு போயின. அவர் இல்லாதபோது யாரோ மாற்றுச் சாவியைப் போட்டுத் திறந்து பொருட்களைத் திருடிச் சென்றிருக்கிறார்கள். காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
என் நண்பரிடம் “உங்க வீட்டுக்கு டூப்ளிகேட் சாவி இல்லையா?’’ என்று கேட்க, நண்பர் நடந்ததைச் சொன்னார். முதலில் குடியிருந்தவரை அழைத்து விசாரிக்க, அவருக்கு மிகுந்த வருத்தம். கடைசியில் பொருட்கள் கிடைக்கவில்லை.
“நீங்க அலட்சியமா சாவியைக் கூடத்தில் வச்சிடுவீங்க. இந்த வீட்டுக்கு வந்து போற யார் வேண்டுமானாலும் அதற்கு டூப்ளிகேட் செய்திருக்கலாம்” என்று பொருளைத் தொலைத்தவர் மனைவி தன் கணவனைக் கடிந்து கொண்டாராம். இந்தச் சம்பவத்தில் வீட்டுப் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. முதலில் குடியிருந்தவர் வீட்டைக் காலி செய்வதற்கு முன்பாகவே கெடுபிடி செய்து இரண்டு சாவிகளையும் நண்பர் வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது எந்த வகையில் ஒரு சாவி தொலைந்திருந்தாலும் உடனடியாக அந்த வீட்டுக்கு மாற்றுப் பூட்டு போட்டிருக்க வேண்டும்.
சாவியைக் கண்ட இடங்களில் வைப்பதும் தவறு. வீட்டுப் பாதுகாப்பு தொடர்பான வேறு சில ‘பாடங்களைக்கூட’ நாம் அறிந்து கடைப்பிடிப்பது நல்லது. வீட்டைப் பூட்டிக் கொண்டு செல்லும்போது உள்ளுக்குள் ஏதாவது ஓரிடத்தில் விளக்கை எரியவிட்டுச் செல்லுதல் நல்லது. இப்போதெல்லாம் விளக்கு எரிய வேண்டிய நேரத்தை முன்பாகவே செட் செய்து கொள்ளும் வசதி கொண்ட சிஸ்டம் என்பது அறிமுகமாகிவிட்டது. இதன் மூலம் நீங்கள் இல்லாதபோது பல அறைகளிலும் உள்ள பல்புகள் மாறி மாறி சிறிது நேரம் எரியும்படிகூட நீங்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு அலாரங்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றிற்கான சங்கேதக் குறிகளை நீங்கள் அவ்வப்போது மாற்றிவிட வேண்டும். தவிர அந்த அலாரம் பாதிப்படையாமல் இருக்கிறா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜன்னல் கண்ணாடிகளில் ஓட்டை விழுந்தால் அதைச் சரிசெய்வதில் தாமதம் கூடாது. ஏனென்றால், அந்த முழுக் கண்ணாடியையும் உடைப்பதும், உள்ளே செல்வதும், அதற்குப் பிறகு எளிதாகிவிடும்.
விலையுயர்ந்த நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான பெட்டிகளை இப்போது வீட்டில்கூட வைத்துக் கொள்ளலாம். மிக உறுதியான எஃகினால் இவை செய்யப்பட்டிருப்பதோடு குறிப்பிட்ட சங்கேத எண்களை அழுத்தினால்தான் இவற்றைத் திறக்க முடியும். இதுபோன்ற பாதுகாப்புப் பெட்டிகளை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
வீட்டின் முன்புறம் கிரில் கதவு, தேக்குமரக் கதவு என்றெல்லாம் பொருத்திவிட்டு பின்புறம் சாதாரணமான உளுத்துப்போன கதவு பொருத்தப்பட்டால் அது புத்திசாலித்தனமா? ‘அசைக்க முடியாத கோட்டை’ என்று நீங்கள் நினைத்திருக்கும் வீடு ஒரு நாள் உங்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். வீட்டின் பின்புறக் கதவு உறுதியானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வீட்டுச் சாவியை மட்டுமல்ல; கார் சாவியையும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே வையுங்கள். அது பாதுகாப்பான இடமாக இருக்கட்டும். வீட்டைச் சுற்றித் தோட்டம் வளர்ப்பதுகூட ஒருவிதத்தில் பாதுகாப்புதான். ஜன்னலுக்கு வெளிப்புறமாக அடர்ந்த செடிகள் இருப்பது திருடர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். ஆனால், இவை ஆளையே மறைக்கும் அளவுக்கு உயரமாக வளர்ந்து விடாமல் அவ்வப்போது ட்ரிம் செய்து விடுங்கள். முக்கியமாக இருசக்கர வாகனத்திலேயே அதன் சாவியை விட்டுச் செல்வது, வீட்டுக் கதவிலேயே அதன் சாவியை வைத்துவிட்டு மறந்து விடுவது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT