Last Updated : 24 Nov, 2018 11:32 AM

 

Published : 24 Nov 2018 11:32 AM
Last Updated : 24 Nov 2018 11:32 AM

வீட்டுக் கடன் கிடைக்காதது, ஏன்?

பலரின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கும் முக்கியமான அம்சமாக வீட்டுக் கடன் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், ஒரு வீட்டை வாங்குவதற்குப் பல லட்சங்கள் தேவைப்படுகின்றன. அதனால், வீட்டுக் கடன் உதவியில்லாமல் வீடு வாங்குவது என்பது நடுத்தரவர்க்கத்தினரைப் பொறுத்தவரை கடினமான விஷயம். கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களைப் பொறுத்தவரை, வீட்டுக் கடன் என்பது நீண்டகாலக் கடன். அதனால், கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் சக்தியைப் பொறுத்தே வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.

வீட்டுக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பை இழப்பதற்கு நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கின்றன. அந்தத் தவறுகளைக் களைந்துவிட்டால் வீட்டுக் கடன் பெறும்போது வரும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

பழைய இருக்கும் கடன்கள்

வீடு வாங்குவது என்பது உங்களைப் பொறுத்தவரை முதலீடு. ஆனால், வீட்டுக் கடன் என்பது பெரிய பொறுப்பு. நீங்கள் ஏற்கெனவே உங்கள் பெயரில் வேறு கடன்கள் வாங்கியிருந்தால், வீட்டுக் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகத்தான் அர்த்தம். அதிகமாகக் கடன்கள் வாங்கியிருந்தால் அதிகமான மாதத் தவனைகள் இருக்கும்.

அதனால், உங்களுக்குக் கடன் கொடுப்பவர் உங்கள் வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் வழங்குவதற்குத் தயங்கலாம். அதுவும் இல்லாமல், நிறைய கடன்கள் இருப்பது உங்கள் நிதிநிலையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் வீட்டுக் கடன் வாங்க முடிவுசெய்தால், எற்கனவே செலுத்திக்கொண்டிருக்கும் மற்ற கடன்களை முடித்துவிடுவது நல்லது.

பெரிய கடன்தொகை

வீடு என்பது வாழ்நாட்களைத் தாண்டி நிலைத்திருக்கக்கூடிய சொத்து. அதனால், வீடு வாங்கும்போது நாம் பல வசதிகளையும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துகொள்வோம். அவற்றின் விலையைக் கணக்கில் எடுத்துகொள்ள மறந்துவிடுவோம். ஆனால், உங்களின் சக்திக்கு மீறிய பெரிய தொகையை வீட்டுக் கடனாகப் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே வீட்டுக் கடனுக்குப் பெரிய தொகையைப் பெறுவதாக இருந்தால், இரண்டு பேராக விண்ணப்பிப்பது சரியாக இருக்கும். 

பெரிய தொகையைக் கடனாகப் பெறுவதற்கு இது வாய்ப்பாக அமையும். வருமானத்தைக் கணக்கில் கொண்டே வங்கிகள்/கடன் நிறுவனங்கள் கடனுக்கு ஒப்புதல் வழங்கும். எதிர்பார்க்கும் கடனுக்கான மாதத் தவணை உங்கள் மாத வருமானத்துடன் ஒப்பிடப்படும். அது அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புண்டு.

மோசமான கடன் மதிப்பெண்

வீட்டுக் கடன் பெறுவதற்குக் கடன் மதிப்பெண் (Credit Score) அவசியம். மூன்றிலிருந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை, வங்கியில் உங்கள் கடன் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்வது நல்லது. உங்களது கடன் மதிப்பெண் போதுமான அளவுக்கு இல்லையென்றால், உங்கள் வங்கியை அணுகி, நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்திவிடுவது அவசியம். வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இதைச் செய்வது நல்லது.

நம்பகமற்ற கட்டுநர்கள்

எந்தக் கட்டுநரிடமிருந்து நீங்கள் வீட்டை வாங்குகிறீர்கள் என்பதும் வீட்டுக் கடன் பெறுவதைத் தீர்மானிக்கும். ஏனென்றால், கட்டுநரின் நம்பகத்தன்மையைக் கடன் வழங்குபவர்கள் பாதுகாப்பாகக் கருதுவார்கள். ஒருவேளை, கடன் வாங்கியவரால் கடனைச் செலுத்த முடியவில்லையென்றால், கடன் வழங்கியவர் சொத்தை விற்று தான் அளித்த கடன்தொகையைப் பெற்றுகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. 

நீங்கள் வீடு வாங்கத் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுநர் நம்பகமானவராக இல்லை என்றால், நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்திருக்கும் வங்கி, உங்கள் வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் வழங்காது. அதனால், வீட்டை வாங்க முடிவு செய்வதற்குமுன், ரெரா (RERA)வின் ஒப்புதலைக் கட்டுநர் பெற்றிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. இதன்மூலம், கடைசி நேரத்தில் வீட்டுக் கடன் ரத்தாவதைத் தவிர்க்கலாம்.

வீட்டுக்கான அனுமதி

நிலம் வாங்கி வீடு கட்டுவதற்காகக் கடனுக்கு விண்ணப்பிக்க நினைப்போர், அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதியை வாங்கியிருக்க வேண்டும். சென்னை என்றால் சி.எம்.டி.ஏ.வில் ஒப்புதல் வாங்க வேண்டும். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு டிடிசிபியில் ஒப்புதல் வாங்க வேண்டும். பஞ்சாயத்து அனுமதி அளித்த நிலத்துக்கு வங்கிகள் கடன் அளிக்க முன்வருவதில்லை. அதனால் உரிய அங்கீகாரம் வாங்கியிருப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x