Published : 17 Nov 2018 11:33 AM
Last Updated : 17 Nov 2018 11:33 AM
வீட்டில் தூசு சேராமல் பார்த்துக்கொள்வது சுலபமானதல்ல. வீட்டின் பலவிதமான பொருட்களில் வெளிப்படையாகவும் மறைந்தும் இருக்கும் தூசு, உடல் நலத்தைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. சரியான பராமரிப்புமுறைகளைக் கையாண்டால், வீட்டில் தூசு சேர்வதைத் தவிர்க்க முடியும். வீட்டில் தூசு படியாமல் இருப்பதற்கான சில வழிகள்...
தூசு இல்லாமல் வீட்டைப் பராமரிக்க வேண்டுமென்றால் தினசரி ஏதொவொரு வகையில் சுத்தப்படுத்துவதை வழக்கமாக வைத்துகொள்ள வேண்டும். ஒருநாளில் ஒருமுறையாவது தரையைத் துடைப்பான் வைத்து சுத்தப்படுத்தவது நல்லது.
இதற்குத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். அத்துடன், பொருட்களில் படிந்திருக்கும் தூசுவை நீக்க ‘மைக்ரோஃபைபர்’ துணியைப் பயன்படுத்தலாம். வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்த்தால் அவற்றின் முடிகளையும், தோலையும் சிறந்த முறையில் பராமரிப்பது அவசியம்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தேவையில்லாத பொருட்களை வீட்டில் இருந்து அகற்றிவிடுவது குப்பைகளும் தூசுவும் சேர்வதைத் தடுக்கும். உங்களுடைய வீடு தூசு அதிகமாகப் படியும்படி சாலைப் பகுதிகளில் இருந்தால் காலை நேரத்தில் மட்டும் ஜன்னல்களைத் திறந்துவைத்துவிட்டு, மற்ற நேரத்தில் அவற்றை மூடிவைத்துவிடுவது நல்லது.
# பெரும்பாலும் ஷூ-ஸ்டாண்டை வீட்டுக்கு வெளியே வைக்க முயலுங்கள். இதனால் வெளியிலிருந்து காலணிகள் வழியாக வீட்டுக்குள் வரும் தூசைத் தவிர்க்க முடியும். அத்துடன், வீட்டு வாசலில் கனமான ஃபைபர் மிதியடியைப் போட்டுவைப்பது அவசியம். இந்த மிதியடியை வாரத்துக்கு ஒரு நாள் சுத்தப்படுத்துவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
# வீட்டில் அழகுக்காகப் போடப்படும் தரைவிரிப்புகள் தூசு உற்பத்தியாவதற்கான காரணமாக இருக்கின்றன. ஒருவேளை, தரைவிரிப்பு பயன்பாட்டைத் தடுக்க முடியவில்லையென்றால், அவற்றைத் தினமும் தூசு அகற்றும் கருவியால் (Vaccum Cleaner) சுத்தப்படுத்துவது அவசியம். மாதத்துக்கு ஒரு முறையாவது தரைவிரிப்பை அகற்றிவிட்டுத் தரையைச் சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்க.
# வீட்டில் தூசு சேர்வதைக் குறைக்க வேண்டுமானால் தேவையில்லாத பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம். அதிகமான அறைக்கலன்கள், அலங்கார பொருட்கள் போன்றவை வீட்டின் மூலைகளை ஆக்கிரமிக்கும்போது இயல்பாக தூசு படியும். அத்துடன் பழைய பத்திரிகைகள், செய்தித்தாள்களைச் சேர்த்துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றை அகற்றிவிடுவது நல்லது. ‘சாஃப்ட் டாய்ஸ்’ எனப்படும் மென்மையான பொம்மைகளில் தூசு அதிகமாகப் படியும். அவற்றைக் குழந்தைகள் வைத்து விளையாடுவது நல்லதல்ல. அதனால், மென்மையான பொம்மைகள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
# எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் மாசு அனைத்து இடங்களிலும் அதிகரித்திருக்கிறது. உங்களுடைய வீடு அதிகமான மாசு தொல்லை இருக்கும் இடத்தில் அமைந்திருந்தால் காற்று சுத்திகரிப்பான்கள் (air purifiers) அமைப்பது அவசியம். உங்களுடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்று மாசுவை வீட்டுக்குள் வராமல் இந்தச் சுத்தகரிப்பான்கள் தடுக்கும்.
# படுக்கைவிரிப்புகளையும், தலையணை, இருக்கை உறைகளையும் இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது கட்டாயமாகச் சுத்தப்படுத்துவது அவசியம். கனமான படுக்கைவிரிப்புகளை அவ்வளவு எளிதில் துவைக்க முடியாது. அதனால், அவற்றைக் குறிப்பிட்ட இடைவெளியில் சூரிய வெளிச்சத்தில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். மெத்தைகளுக்கும் இந்த விதி பொருந்தும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மெத்தைகளை வெயிலில் காயவைப்பதை வழக்கமாக்கி கொள்வது அவசியம்.
# இருக்கை உறைகள், குஷன்கள், திரைச்சீலைகள் ஆகியவற்றைச் சுத்தப்படுத்தாமல் விட்டால் அவற்றில் அதிகமாக தூசு படிந்துவிடும். அதனால் அவற்றைக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்திவிடுவது அவசியம்.
# வீட்டின் மூலைகளிலும், அறைக்கலன்களுக்கு அடியிலும் படிந்திருக்கும் தூசை ‘வேக்யூம் கிளினர்’ வைத்து சுத்தப்படுத்துவது நல்லது. ‘வேக்யூம் கிளினரைத்’ தேர்ந்தெடுக்கும்போது அதில் உயர் திறன்மிக்க துகள் நீக்கும் ஃபில்டர்கள்( HEPA filters) பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை விசாரித்து வாங்குவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT