Last Updated : 13 Oct, 2018 03:58 PM

 

Published : 13 Oct 2018 03:58 PM
Last Updated : 13 Oct 2018 03:58 PM

நொடிகளில் பொடியாகும் வானுயர் கட்டிடங்கள்

கட்டிடத்தைக் கட்டி முடிப்பதுதான் பெரும்பாடு என்பதில்லை. சில நேரம் அதை இடிப்பதுகூடப் பெரும் தொல்லையாக இருக்கும்.

சுனாமியோ நில நடுக்கமோ கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடங்களை இடித்துத் தள்ளி விடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை மனித முயற்சியில் இடிப்பது என்பது பெரும்பாடு. அதுவும் மிக உயரமான கட்டிடங்கள் என்றால் அவற்றை இடிப்பது மிகக் கடினம். இதைப் புதிய தொழில்நுட்பம் இலகுவாகியிருக்கிறது. இந்தத் துறை பொறியியல் துறையில் ஒரு புதுப் பிரிவாக வளர்ந்துள்ளது. இது தகர்க்கும் பொறியியல் (Explosives Engineering) என அழைக்கப்படுகிறது.

இந்தப் பொறியியல் நுட்பத்தின் அடிப்படையில்தான் 2016-ல் சென்னையில் மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு தகர்க்கப்பட்டது. 11 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு, மூன்று நொடிகளில் தகர்க்கப்பட்டது. நவீனத் தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பே 1983-ல் தென்னாப்ரிக்காவில் ஜோனஸ்பெர்க்கில் 20 மாடிக் கட்டிடம் ஒன்று 16 நொடிகளில் தகர்க்கப்பட்டது.

எப்படித் தகர்ப்பது?

கட்டிடத்தின் எந்தப் பகுதிகளில் வெடிமருந்துகளை வைப்பது என்பது முக்கியம். கட்டிடத்தைத் தாங்கும் முக்கியப் பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், இது எளிதான வேலை அல்ல. மிகத் துல்லியமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். தென்னாப்ரிக்கக் கட்டிடத்தை இடிக்க மைக் பெர்க்கின் என்ற பொறியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகத் துல்லியமானவை. அந்தக் கட்டிடம் இடிந்தபோது அதற்குப் பக்கத்திலிருந்த ஒரு ஷோ ரூமின் கண்ணாடித் தடுப்புகள்கூடச் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

நாம் பார்க்கும்போது சில நொடிகளில் இதுபோன்ற வானளாவிய கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. ஆனால், இந்தச் செயல்பாடு நிமிடங்களில் முடிவதில்லை. அதற்கு முன்பு பல மணி நேரம் - ஏன் பல நாட்கள்கூட -இதற்காகத் திட்டமிடுவார்கள். சில நேரம் ஆறு மாதங்கள்கூட இதற்குத் தேவைப்படுமாம். கட்டிடத்தை மிக நுட்பமாகப் பார்வையிடுவது, எந்தப் பகுதிகளை முன்னதாகவே நீக்குவது எனத் தீர்மானிப்பது ஆகியவை எல்லாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயங்கள். முதலில் கட்டிடத்தின் உட்புறமுள்ள தடுப்புச் சுவர்கள் பெயர்க்கப்படும்.

அடுத்ததாக கட்டிடம் எளிதாக உட்புறமாக விழுவதற்கு எந்தெந்தப் பகுதிகள் தடையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு அவை நீக்கப்படும். அவ்வளவு உயரமான கட்டிடம் இடிந்துவிழும்போது தூசிகளும் துகள்களும் (என்னதான் கவனமான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டாலும்) வெளிப்புறமாகச் சிதறும். எனவே, மொத்தக் கட்டிடத்துக்கும் மேற்புறமாக ஒரு பாதுகாப்பு உறையைப் போர்த்தி வைப்பார்கள்.

கட்டிடத்தில் பல முக்கியமான பகுதிகளில் துளையிடுவார்கள். கட்டிடத்தைப் பலவீனப்படுத்தவும் இது உதவும். வெடிமருந்துகளை இணைக்கும் மின் இணைப்புகளுக்கும் இந்தத் துளைகள் பயன்படும். மேற்படி கட்டிடத்தில் 2,000 துளைகள் இடப்பட்டன. சுமார் ஆறு மைல் தூரத்துக்கு வெடிகுண்டுக்கான மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. சற்றுத் தொலைவிலிருந்து அதைக் கண்காணித்தபடி மைக் பெர்க்கின் ஒரு ரிமோட்டை அழுத்த மொத்தக் கட்டமும் உள்வாங்கிக் கொண்டது.

நேர்ந்த விபத்து

சரியாகத் திட்டமிடவில்லை என்றால் விபரீதங்கள் நேரலாம். 1997-ல் ராயல் கான்பெர்ரா மருத்துவமனையின் கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டலாம் எனத் தீர்மானித்தார்கள். ஆனால், சரியான விதத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் அந்தக் கட்டிடம் உட்புறமாக இடிந்து விழுந்தபோது அதன் சில பகுதிகள் விசையுடன் வெளியேற ஒன்பது பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன. 12 வயது சிறுமி ஒருத்தி இதனால் இறந்தாள்.

‘அரை நிமிடத்துக்குள்ளே எல்லாம் முடிந்து விட்டது’ என்றனர் அதிசயத்துடன் பார்த்தவர்கள். அதற்கான முன்னேற்பாடுகள் எந்த அளவு தேவை என்பது இதுபோன்ற கட்டிடங்களை உட்புறமாகவே இடிக்கச் செய்யும் பொறியாளர்களுக்குதானே தெரியும்?

அப்புறம் இன்னொரு தகவல். அரை நிமிடத்துக்குள் கட்டிடம் உட்புறமாக இடிந்து விழும்தான். ஆனால், அந்த இடிபாடுகளால் வீழ்ந்து கிடக்கும் கட்டிடத் துண்டுகளை அங்கிருந்து அகற்றுவதற்கு இரண்டு மாதங்கள்கூட ஆகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x