Published : 13 Oct 2018 03:58 PM
Last Updated : 13 Oct 2018 03:58 PM
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைக்கும்போதும் அதிகரிக்கும்போதும் பல வணிக வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பதோ அதிகரிப்பதோ உங்களுக்குத் தெரிந்த சங்கதிதான். வட்டிக் குறைப்பு அல்லது அதிகரிப்பு மூலம் இஎம்ஐ-யில் மாறுபடும் விஷயங்களை அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
வீட்டுக் கடன் வாங்குவதற்காக வங்கிக்கும் வீட்டுக்கும் அலைவதெல்லாம் அந்தக் கடன் கிடைக்கும் வரைதான். வீட்டுக் கடனை வாங்கி பில்டரிம் கொடுத்ததும் எல்லாமும் முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்வோம். மாதாமாதம் போதுமான அளவு இ.எம்.ஐ. தொகை வங்கிக் கணக்கில் இருக்கிறதா என்பதோடு நிறுத்திக்கொள்வோம்.
ஈ.சி.எஸ். என்றழைக்கப்படும் ‘எலக்ட்ரானிக்ஸ் கிளியரிங் சர்வீஸ்’ மூலமே வீடு வாங்கியவர்கள் இ.எம்.ஐ.யைச் செலுத்திவிடுகிறார்கள் என்பதால், அதற்குமேல் வீட்டுக் கடனுக்கும் நமக்குமான பந்தம் ஒவ்வொரு மாதமும் முடிந்துவிடும். எனவே, வங்கிக்குச் செல்லும் வேலையே இருக்காது. பொதுவாக, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்போதோ அதிகரிக்கும்போதோ இ.எம்.ஐ. தொகையும் மாறும். அப்படி மாறுகிறதா என்பதைக்கூடப் பலரும் கவனிக்க மாட்டார்கள்.
இ.எம்.ஐ. தொகை சில நூறுகள் குறையும்போதோ அதிகரிக்கும்போதோ யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. சில ஆண்டுகள் கழித்து எவ்வளவு தொகை கழிந்திருக்கிறது என்று பார்க்கும்போதுதான் பலருக்கும் பல உண்மைகள் தெரிய வரும். வீட்டு கடனைக் கட்டி முடிக்கும்வரை இ.எம்.ஐ. செலுத்தும் விஷயங்களில் கண்காணிப்பு நிச்சயம் இருக்க வேண்டும். முதலில் வாங்கிய கடனில் நிலுவைத் தொகை எவ்வளவு?, செலுத்தும் மாதத் தவணைத் தொகை (இ.எம்.ஐ.) எவ்வளவு? இதில் வட்டியும் அசலும் தனித்தனியாக எவ்வளவு? வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது எவ்வளவு? என இந்தக் கேள்விகள் கடன் வாங்கியவர் மனதில் எப்போதும் எழுந்து கொண்டே இருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அதாவது, வட்டி விகிதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் அல்லது அதே நிலையிலேயே நீடிக்கலாம். இதை வைத்துதான் செலுத்தும் இ.எம்.ஐ. தொகையும் தெரியவரும்.
ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துவிட மாட்டார்கள். அதேநேரம் வட்டி விகிதம் உயர்ந்தால் உடனே உயர்த்திவிடுவார்கள். ஈ.சி.எஸ். மூலம் இ.எம்.ஐ.-யைச் செலுத்துவதால் சில நூறு தொகை இ.எம்.ஐ.-யில் மாறும்போது அது நமக்குத் தெரியாமலேயே போய்விடும்.
இன்னும் பல வங்கிகள் வட்டி விகிதம் உயர்ந்தால் இ.எம்.ஐ. தொகையை உயர்த்த மாட்டார்கள். இ.எம்.ஐ. செலுத்தும் காலத்தை நீட்டித்துவிடுவார்கள். வாடிக்கையாளரிடம் எந்த விருப்பத்தையும் கேட்காமலேயே அவர்கள் விருப்பத்துக்கேற்ப செய்துவிடுவார்கள்.
வட்டி விகிதம் உயர்ந்து உயர்ந்து 240 மாதங்கள் கட்ட வேண்டிய இ.எம்.ஐ.- தொகையை 340 மாதங்கள் கட்டிய கதையெல்லாம்கூட உண்டு. எனவே, வட்டி விகிதம் குறைந்தாலோ அதிகரித்தாலோ அது வங்கியில் எப்படி எடுத்தக்கொள்ளப்படுகிறது என்பதை வங்கிக்குச் சென்று விசாரித்து தெரிந்துகொள்வது அவசியம். இ.எம்.ஐ. தொகை குறைகிறதா அல்லது அதிகரிக்கிறதா?, இ.எம்.ஐ. காலம் குறைந்திருக்கிறதா அல்லது அதிகரித்திருக்கிறதா என்பதையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.
ஒரு சில ஆண்டுகள் முன்புவரை வங்கிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்தன. இப்போதோ ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்களை அதிகரித்துக்கொண்டே உள்ளன. எனவே, இப்போது இருந்தே நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ.-யில் கொஞ்சம் கவனம் காட்டுங்களேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT