Published : 09 Aug 2014 12:00 AM
Last Updated : 09 Aug 2014 12:00 AM
கட்டிடங்களைக் கட்டுவதற்குப் புதுப்புதுத் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. அத்தனையையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதைவிட நமக்கு உபயோகமானவை எவை என்பதைத் தீர ஆலோசித்து, அறிந்து அவற்றைப் பயன்படுத்தலாம். ஏழைகளின் பெருந்தச்சன் என கேரள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஆங்கிலேயரான லாரி பேக்கர் வலியுறுத்திய எலிப் பொறி பாணியில் அமைந்த செங்கல் சுவர்களை அமைப்பது நமக்கு உகந்தது.
எலிப் பொறிப் பாணியில் செங்கல்கள் நீளவாக்கிலும் அகலவாக்கிலும் வைக்கப்பட்டுச் சுவர் அமைக்கப்படும். இதனால் செங்கல் பயன்பாடும் குறையும் கட்டிடம் குளுமையாகவும் இருக்கும். வழக்கமாகச் செங்கல்லை ஒன்றின்மீது ஒன்று அடுக்கிக் கட்டாமல் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது கட்டிடம் பசுமைக் கட்டிட வரிசைக்கு நகர முடியும்.
இந்தப் பாணியில் சுவரை அமைக்கும்போது சுவரின் பூச்சுக்கு சாந்தாக சிமெண்டைப் பயன்படுத்தாமல் சுண்ணாம்பைப் பயன்படுத்துவது நல்லது. இதனுடன் ஃப்ளை ஆஷையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். சுண்ணாம்பு நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கும் பொருள், மேலும் அதன் விலையும் குறைவே. எனவே சிமெண்டால் ஆகும் அதிக செலவை இது வெகுவாகக் குறைத்துவிடும்.
தொழிற்சாலைக் கழிவுப் பொருளான ஃப்ளை ஆஷைப் பயன்படுத்துவதும் பசுமைக் கட்டிடத்தின் ஓர் அம்சமே. செங்கற்களிலும் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் வழக்கமான செங்கல்லின் உற்பத்தி முறை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும். செங்கல் சூளைகளில் செங்கல்லைச் சுடும்போது காற்று மாசுபடும். மாற்றுச் செங்கல்கள் வழக்கமான சூளைச் செங்கல்களைவிடத் திடமான, நீண்ட நாள் உழைக்கும் சுவரைத் தரும்.
பலன்கள்
எலிப் பொறி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 20 முதல் 35 சதவீதம் அளவுக்கு செங்கல்களைச் சேமிக்கலாம். பூச்சுக் கலவையின் செலவும் 30 முதல் 50 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே 9 அங்குல சுவரின் கட்டுமானச் செலவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க முடியும்.
வழக்கமான கட்டுமானத்தில் ஒரு கன மீட்டர் சுவரை அமைக்க சூளைச் செங்கல்கள் 550 தேவைப்படும் என்றால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 470 செங்கற்களே போதும்.
எலிப் பொறி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சுவரை அமைக்கும்போது கட்டிடத்தின் உள்ளே வெயில் காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.
இந்தச் சுவரை அப்படியே விட்டுவிடலாம். மேற்பூச்சோ, வண்ணப்பூச்சோ அவசியமல்ல. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
இந்தக் கட்டுமானத் தொழில்நுட்பம் எடையும் தாங்கும். எனவே எடையைத் தாங்கக்கூடிய இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். அறைகளைப் பிரிக்கும் சுவர் எழுப்ப வேண்டிய இடங்களிலும் இந்தப் பாணி கைகொடுக்கும்.
எலிப் பொறிப் பாணியிலமைந்த சுவர்கள் வழக்கமான சுவர்களைவிட 20 சதவீதம் குறைவான எடையையே பூமிக்குக் கடத்தும். எனவே முறையாக இந்தச் சுவரை அமைக்கும்போது அஸ்திவாரச் செலவும் கொஞ்சம் குறையும்.
அதிகச் செலவு பிடிக்கும் பொருள்களான செங்கல், சிமெண்ட், இரும்பு போன்றவற்றின் உபயோகத்தைப் பெருமளவில் குறைக்க இத்தொழில்நுட்பம் உதவும். சுற்றுச்சூழல் நோக்கில், பசுமை வாயுக்களின் உற்பத்தியையும் எலிப்பொறி தொழில்நுட்பம் குறைத்துவிடும்.
அதிகப் பாதுகாப்பு தேவை என்று நினைத்தால் சுவரின் இடைவெளிகளில் அஸ்திவாரம் வரையிலும் வலுவூட்டப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் பார்க்கும்போது, ஒரு கன மீட்டர் சுவர் அமைப்பதில் சிமென்ட் செலவு ரூ. 288 குறையும்; செங்கல் செலவு ரூ. 576 குறையும், மணல் செலவு ரூ. 13 குறையும் என்கிறார்கள். செலவைக் குறைக்கும் எலிப் பொறித் தொழில்நுட்பத்தில் கட்டிடம் அமைத்தால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது; நமக்கும் நல்லது என்கிறார்கள் கட்டிடக்கலை நிபுணர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment