Published : 28 Jul 2018 10:49 AM
Last Updated : 28 Jul 2018 10:49 AM
இந்து “உங்களுக்கென்று ஒரு வீடு. அது, உங்களுக்கான சொந்த வீடு. ஏழை குடும்பத்தின் முகத்தை மலரச் செய்யும் வீடு. அதை நிறைவேற்றுவதற்கான காலம் இது” என ஸ்பீக்கரில் குரல் ஒலிக்கிறது. இது ஒன்றும் ரியல் எஸ்டேட், லேண்ட் புரமோட்டர்ஸ் வகையறாக்களின் குரல் அல்ல. கிறிஸ்தவ தேவாலயத்தின் உள்ளே இருந்து ஒலிக்கும் குரல் அது.
கிறிஸ்துமஸ் நேரங்களில் அமைக்கப்படும் ஆடம்பர குடில்களின் ஆயுட்காலம் ஓரிரு வாரங்களே. ஆனாலும் போட்டி, போட்டுக் கொண்டு குடில்கள் அமைப்பது அமளிதுமளிப்படும். ஆனால் குமரி மாவட்டம், செந்தறையில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தின் பங்கு மக்கள் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதில்லை. வீடில்லாதவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் வீடு கட்டிக் கொடுக்கிறார்கள். செந்தறை பங்கு மக்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் மூலம் இரு வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளனர். இது இனி வரும் ஆண்டுகளிலும் தொடர உள்ளது.
‘’எனக்கு முன்பு இந்தத் தேவலாயத்தில் பங்குத் தந்தையாக இருந்த ஒய்சிலின் சேவியர்தான் இதற்கான விதையை விதைத்தார். அவரே ‘ஆண்டுக்கொரு ஏழைக்கு வீடு’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பொதுவாகவே எங்கள் செந்தறை பங்கு மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் அதிகம். அவர்களும் இப்பணிக்கு மனிதநேயத்தோடு தாராளமாக உதவுகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இது குறித்து தேவாலயத்தில் அறிவிப்பு செய்வோம். பங்குக்கு உட்பட்ட ஏழைகள் பலரும் விண்ணப்பிப்பார்கள். அதில் மிகவும் எளியவரைத் தேர்ந்தெடுப்போம். தேவாலயத்தில் அறிவிப்பு கொடுப்பதன் மூலம் நூறு ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை நன்கொடை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். இதேபோல் கிறிஸ்துமஸ் காலங்களில் வீடு, வீடாகப் போய் வாழ்த்துப் பாடல் பாடுவோம். அப்போதும் தேவாலயத்துக்குக் காணிக்கை செலுத்துவார்கள். அந்தக் காணிக்கையும் முழுக்க வீடு கட்டும் திட்டத்துக்கு ஒதுக்கி விடுகிறோம்” என்கிறார் செந்தறை புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை அருள் யூஜின்ராய்.
இவர்கள் மத பேதமின்றி இந்து, முஸ்லீம் என எல்லோர் வீட்டுக்கும் வாழ்த்துப் பாடல் பாடச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் மத பேதமின்றி மனமுவந்து நிதி அளித்துவருகிறார்கள்.
இந்தத் திட்டத்தில் மூலம் மஸ்லீன் என்ற கணவனை இழந்த பெண் பயன்பெற்றுள்ளார். இவர் முந்திரித் தொழிற்சாலையில் வேலை செய்து, தனது இரு குழந்தைகளையும் படிக்கவைத்து வருகிறார். நடப்பு ஆண்டில் செந்தறை பங்கு மக்கள் வீடு கட்டிக் கொடுத்த நெல்சன்_குளோரி தம்பதியினர் இப்போது பள,பளக்கும் டைல்ஸ் கல் பதித்த வீட்டில் வசிக்கின்றனர்.’’என் வீட்டுக்காரர் நெல்சன் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் சின்ன, சின்ன கூலி வேலைக்குப் போவாரு. கொத்தனாருக்கு, கையாள் வேலைக்குச் செல்வார். ஆனாலும் வருசம் முழுக்க வேலைக்கு போக அவரால் முடியாது. எனக்கு இதுவரை நான்கு ஆப்ரேசன் பண்ணிருக்க்கிறது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் எல்லாம் உண்டு. ஒரு மகள் படித்துவருகிறாள். எங்களுக்கு இருந்த சின்ன இடத்தில் குடிசை கட்டி இருந்தோம். மழைக்குத் தண்ணீர் ஒழுகும். இந்த நிலையில் தான் நான்கரை லட்சம் ரூபாய் செலவு செய்து எங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார்கள். எங்கள் நிலைமையைப் பார்த்து, என் மகளின் படிப்புச் செலவுக்கும் இன்னொரு பங்குத் தந்தை சாம் மேத்யூதான் உதவுகிறார்” என்கிறார் குளோரி.
செந்தறையின் கிறிஸ்துமஸ் காலம், ஏழைக் குடும்பங்களின் முக மலர்ச்சிக் காலம். ஏழையின் சிரிப்பில் கர்த்தரைக் காணும் இந்தத் திட்டம் வரவேற்க வேண்டியது.
படங்கள்: ராஜேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT