Published : 21 Jul 2018 11:03 AM
Last Updated : 21 Jul 2018 11:03 AM
சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்துவருவதுபோலவே அவற்றின் பாதுகாப்பு குறித்த விவாதங்களும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.
வருமுன் காக்கும் பழக்கம் இல்லாதது மட்டுமல்லாமல் வந்த பிறகும் மிகத் தாமதமாகவே எதிர்வினையாற்றும் நம் சமூகத்தில் அடுக்குமாடி வீடுகளை விற்பவர்களின் விளம்பரங்களில்கூட அவற்றின் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் முதன்மையாக இடம்பிடிக்காமல் போவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ‘24 நான்கு மணி நேரமும் செக்யூரிட்டி காவலர் இருப்பார்’, ‘சிசிடிவி கேமரா வசதி உள்ளது’ போன்ற தகவல்கள் மட்டுமே அந்த விளம்பரங்களில் இடம்பெற்றிருக்கின்றன. வீடுகளை வாங்குபவர்களும் அதைத் தவிர பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை.
சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செவித்திறன் குறைபாடு கொண்ட 11 வயது சிறுமி 18 பேரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த வாரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் அதைச் செய்தவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலர், பராமரிப்பாளர் உள்ளிட்டோர்.
இவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புப் பராமரிப்புப் பணிகள் செய்யும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். குறைந்த ஊதியத்துக்காகத் திறமையில்லாத வர்களை, விசாரிக்காமல் பணிக்கு அமர்த்துகிறார்கள். இது குறித்து அந்நிறுவனங்களுக்கும் அக்கறை இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கங்களும் அலட்டிக்கொள்வதில்லை.
காவலர்களின் தகுதியும் ஊதியமும்
இதுபோன்ற நிகழ்வுகளை வைத்து வீட்டுக் காவல் பணியில் இருக்கும் அனைவரும் தவறானவர்கள் என்று முடிவெடுத்துவிட முடியாது. அந்தப் பணியின் தேவையையும் மறுத்துவிட முடியாது. ஆனால், இதுபோன்ற பல அடுக்குகளையும் வீடுகளையும் கொண்டிருக்கும் ஒரு குடியிருப்பைக் காவல் காக்கும் வேலையில் அமர்த்தப்படுபவர்கள், அதற்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்களா, பொறுப்புமிக்க அந்தப் பணிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது பற்றியெல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் எத்தனை பேருக்கு அக்கறை இருக்கிறது என்று தெரியவில்லை.
சென்னையின் மையப் பகுதியான அண்ணாசாலைக்கு அருகில் ஒரு பிரபலமான தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறேன். நான் இருப்பது வாடகை வீடு. கடந்த நான்கு ஆண்டுகளில் குடியிருப்பின் காவல் பணியில் இருப்பவர்கள் எத்தனை பேர் மாறியிருக்கிறார்கள் என்ற கணக்கே இல்லை. ஒப்பந்தப் பணியாளர்கள் என்பதால் அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். ஆனால், சிலர் அவர்களை ஒப்பந்த செய்த நிறுவனங்கள், முறையாக ஊதியம் தராததால் வேலையைவிட்டு நின்றுவிடுவார்கள்.
அப்படி யாராவது திடீரென்று வேலையிலிருந்து நின்றுவிட்டால் அடுத்த சில நாட்களுக்குப் பகல் நேரம் இருப்பவரே இரவுப் பணியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். சில நேரம் இது வாரக் கணக்கிலும் தொடர்ந்திருக்கிறது. 24 மணிநேரமும் ஒருவரை வேலை பார்க்கவைப்பதில் உள்ள மனித உரிமை மீறலைத் தாண்டி அவர் அந்த வேலையை எப்படி ஒழுங்காகப் பார்க்க முடியும் என்ற பாதுகாப்பு சார்ந்த ஆபத்தும் இதில் இருக்கிறது.
மேலும் இவர்கள் என்ன மாதிரி யான தகுதியுடன் இந்தப் பணிக்கு வருகிறார்கள்? யாராவது குற்றவாளி நுழைந்தால் அவர்களை இந்தக் காவலர்கள் எப்படிக் கையாள்வார்கள் என்ற கேள்விகளுக்கும் விடையில்லை. இவ்வளவு குறைந்த சம்பளத்துக்கு வேறு எந்த வேலையும் கிடைக்காத, வயிற்றுப்பாட்டுக்காக ஏதாவது வேலை பார்த்தே ஆக வேண்டிய சூழலில் இருப்பவர்கள்தாம் வருவார்கள். ஒப்பந்ததாரர் நேரில் பார்க்காமல் தொலைபேசியில் மட்டும் பேசி அந்தப் பகுதியில் வசிக்கும் முதியவர்களை இதுபோன்ற வேலைகளில் அமர்த்துவதும் உண்டு.
இருப்பதற்குத்தான் சம்பளம்
எங்கள் குடியிருப்பில் இரவுக் காவல் பணி பார்ப்பவர்கள் 10 மணிக்கு மேல் போர்வையை விரித்துத் தூங்கிவிடுவார்கள். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இதைப் பற்றிக் கேட்டபோது, அவர்களுக்கு ரூ.4,000-ரூ.5,000தான் சம்பளமாகத் தரப்படுகிறது. அதுவும் ஒப்பந்ததாரரின் பங்கு போக மீதிதான் அந்தப் பணியாளருக்குத் தரப்படும் என்று தெரிந்துகொண்டேன். பல இடங்களில் குடியிருப்புகள் ஒப்பந்ததாரருக்கு ஊதியத்தை அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் அந்த ஊதியத்தில் பாதியை எடுத்துக்கொண்டு மீதியை மட்டுமே பணியாளருக்குத் தருகிறார்கள்.
எங்கள் குடியிருப்பைப் பொறுத்தவரை காவலர் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். அதற்குத்தான் அவருக்குச் சம்பளம். காவல் காப்பதற்கு அல்ல. அந்தப் பணியாளர்கள் மீது இரக்கப்பட்டு ‘டிப்ஸ்’ கொடுப்பவர்கள் மற்ற குடியிருப்புவாசிகளாலும், குடியிருப்புச் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களாலும் கண்டிக்கப்படுவார்கள். வீட்டுக் காவல் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களுக்குக் குறைவான பணம் கொடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்ற மனநிலையைச் சொந்த வீடு வைத்திருக்கும் பலரிடம் காண முடிகிறது. வாங்கும் சம்பளத்துக்கு அவர்கள் சரியாக வேலை பார்ப்பதில்லை என்ற எண்ணமும் பலரிடம் இருக்கிறது.
கானல்நீரான சிசிடிவி
காவலர்களின் நிலை இப்படி என்றால் அதைத் தாண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் அவசியம் குறித்த புரிதல்கூட பலருக்கு இல்லை என்பதையும் என் சொந்த அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும். எங்கள் பகுதியில் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்தன. கடந்த ஆண்டு காவல் துறையினர் வந்து எங்கள் குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டார்கள். அப்போது ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சிசிடிவி வைக்க வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தினார்கள்.
எங்கள் குடியிருப்புச் சங்கத்தின் நிர்வாகிகளும் உடனடியாக சிசிடிவி பொருத்துவதற்காக எல்லா வீடுகளிடமிருந்தும் பணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். நாங்கள் கொடுத்த பணம் ஒரு சில வாரங்களில் திருப்பித் தரப்பட்டது. கேட்டால் பலர் சிசிடிவி கேமராவுக்குப் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இது நடந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. எங்கள் குடியிருப்பில் இன்னும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்காதது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இது வீண் செலவல்ல
பாதுகாப்புக்குச் செய்யப்படும் செலவை ‘வீண் செலவு’ என்று பலர் நினைப்பதுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம். குடியிருப்பு வளாகத்தின் பராமரிப்பு உள்ளிட்ட பொதுச் செலவுகளுக்காக வசூலிக்கப்படும் மாதாந்திரத் தொகையை வைத்தே அனைத்துப் பொதுச் செலவுகளும் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.
எல்லாக் குடியிருப்புகளிலும் சில வீடுகளிலாவது நாள் முழுவதும் வீட்டில் முதியோர்களும் வீட்டு வேலை மட்டும் பார்க்கும் பெண்களும் இருக்கும் நிலை இருக்கிறது. இன்று குற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதும் கிட்டத்தட்ட இன்றியமையாததாக ஆகிவிட்டது. சிசிடிவி பொருத்திவிட்டாலும் 100% பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது என்பது வேறு விஷயம்.
ஆனால், இவை இப்போது பாதுகாப்பின் அடிப்படையான அம்சங்கள் ஆகிவிட்டன. இவற்றுக்குப் பணம் தருவது நமது பாதுகாப்பை அதிகரித்துக்கொள்வதற்கான செலவு. இதையெல்லாம் லட்சங்களையும் கோடிகளையும் செலவழித்து வீடுவாங்கியவர்கள், ஆயிரக் கணக்கில் வாடகை கொடுப்பவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
- முகிலன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT