Last Updated : 28 Jul, 2018 10:47 AM

 

Published : 28 Jul 2018 10:47 AM
Last Updated : 28 Jul 2018 10:47 AM

டெரகோட்டா டைல் பயன்படுத்தலாமா?

இடெரகோட்டா டைலைத் தரைத்தளத்துக்குப் பயன்படுத்தும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. ஆனால், இப்போது நகர்ப்புறங்களில் வீடு கட்டுபவர்கள் தரைத்தளத்துக்கு  விட்ரிஃபைடு, பீங்கான், கல் டைல் போன்றவற்றையே அதிகம் தேர்வுசெய்கின்றனர். வீட்டுக்குப் பாரம்பரிய தோற்றத்தை வீட்டுக்குக் கொடுக்க விரும்புபவர்கள் டெரகோட்டா டைலைப் பயன்படுத்தலாம். உள்ளூரில் கிடைக்கும் செங்கல், களிமண் ஆகியவற்றால் தயாரிக்கபடும் இந்த டைல், சூழலுக்கு உகந்தது. டெரகோட்டா டைலைத் தரைத்தளத்துக்குத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதன் சாதக, பாதகங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

இரண்டு வகை

பளிங்கிடாத டெரகோட்டா டைல், பளிங்கிட்ட டெரகோட்டா டைல் என இரண்டு வகையான டெரகோட்டா டைல்கள் இருக்கின்றன. இதில், பளிங்கிடாத டெராகோட்டா டைல், பாதுகாப்புப் பூச்சு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. அதனால், இந்த வகையான டைல் எளிதில் கறைபடுவதற்கும் உடைவதற்குமான சாத்தியங்களுடன் இருக்கின்றன. அதுவே, பளிங்கிட்ட டெரகோட்டா டைல், பாதுகாப்புப் பூச்சுடன் தயாரிக்கபடுகின்றன. இதனால், இவை நீர்புகாத் தன்மையுடனும், கரைபடாமலும் இருக்கின்றன. இந்த டைல் குளியலறைக்கும் சமையலறைக்கும் பயன்படுத்தலாம். வழுக்கும் தன்மையில்லாத பூச்சுடன் இந்த டெரகோட்டா டைலைக் குளியலறைக்குப் பயன்படுத்தலாம்.

நீண்டகாலம் உழைக்கும்

டெரகோட்டா  டைல், நீண்ட காலம் உழைக்கும் தன்மையுடன் இருக்கின்றன. இந்த டைல் தரைத்தளத்துக்குப் பயன்படுத்தும்போது ஊடுருவும் பூச்சுடன் பயன்படுத்துவது சிறந்தது. எபோக்ஸி காரையை டெரகோட்டா டைலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், இந்தக் காரை, டெரகோட்டா டைலுக்குள் ஊடுருவிச் சென்று, தரைத்தளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உள்புறம், வெளிப்புறம்

டெரகோட்டா டைலைச் சரியான பாதுகாப்புப் பூச்சுடன் பயன்படுத்தினால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் என இரண்டு இடங்களிலுமே பயன்படுத்தலாம். சூரிய வெளிச்சம், புற ஊதா கதிர்களால் டெரகோட்டா டைல் பாதிக்கப்படுவதில்லை. அத்துடன், டெரகோட்டா தரைத்தளத்தில் நடப்பது இயற்கையான இடத்தில் நடப்பதைப் போன்ற உணர்வைத் தரும்.

வடிவமைப்புகள்

டெரகோட்டா டைல், மங்கலான தோற்றத்தில் பலவிதமான வடிவமைப்புகளிலும் அமைப்புகளிலும் கிடைக்கின்றன. இந்த இயற்கையான வண்ணங்களில் தயாரிக்கப்படுவதால், டெரகோட்டா டைல் வீட்டுக்கு உயிர்ப்பான தோற்றத்தைக் கொடுக்கின்றன. கைவினையாகவும், ‘மெஷின்கட்’ முறையிலும்  தயாரிக்கப்படுவதால், இயற்கை எழிலுடன் இருக்கின்றன.

சூழலுக்கு ஏற்றது

டெரக்கோட்டா டைல் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படுவதால் சூழலுக்கு ஏற்றதாக இருக்கின்றன. வீட்டைச் சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்க நினைப்பவர்கள், தாராளமாக டெரகோட்டா டைலைத் தேர்ந்தெடுக்கலாம்.

நுண்துளைகள்

டெரகோட்டா டைல் நுண்துளைகளுடன் இருப்பதால், எளிதில் நீரை உறிஞ்சும் தன்மையுடன் இருக்கின்றன. ஒருவேளை, பாதுகாப்புப் பூச்சு இல்லாமல் பயன்படுத்தினால், நீர் புகுந்து சில காலத்தில் பாசி உருவாகுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அதனால், தரைத்தளத்தில் பாதுகாப்புப் பூச்சில்லாத டெரகோட்டா டைல் பயன்படுத்தியிருந்தால், அவற்றில் நீரோ எண்ணெயோ கொட்டாமல் பார்த்துகொள்வது நல்லது. அப்படியே கொட்டினாலும் உடனடியாகத் துடைத்துவிடுவது சிறந்தது.

பராமரிப்பு

டெரகோட்டா டைலைப் பயன்படுத்தும்போது, அவற்றைக் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிக்க வேண்டியது அவசியம். டெரகோட்டா டைல்ஸில் ஏற்படும் நுண்துளைகளைக் குறிப்பிட்ட காலஅவகாசத்தில் மூட வேண்டும். இது டைலின் வண்ணங்கள் மாறாமல் இருக்கவும், அழுக்காகாமல் இருக்கவும் உதவும். வெளிப்புறத்தில் பயன்படுத்தியிருக்கும் டெரகோட்டா டைலுக்குக் கூடுதல் கவனம் செலுத்திப் பராமரிக்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x