Published : 06 Jul 2018 07:05 PM
Last Updated : 06 Jul 2018 07:05 PM
ந
கரங்களில் வீடு வாங்குபவர்கள் குறைந்த விலையில் பெரிய குடியிருப்புகளை எதிர்பார்ப்பது அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில், குடியிருப்புப் பகுதிகளின் சராசரி அளவின் தேவை 4 சதவீதம் அதிகரித்து 1,300 சதுர அடியாகியிருக்கிறது. ‘ஹவுசிங்.காம்’, ‘மகான்.காம்’ ஆகிய தளங்கள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 5.1 சதவீதம் உயர்ந்து அதிகரித்துவரும் விருப்பங்களாலும், மாறும் வாழ்க்கைமுறைகளாலும் இந்தியாவில் வீடு வாங்குபவர்கள் பெரிய, சிறந்த வீடுகளை எதிர்பார்க்கிறார்கள். 1,300 சதுர அடி அளவில் வீடுகளை எதிர்பார்க்கும் இந்தியர்கள் ஜனவரி-மார்ச் 2018 காலகட்டத்தில் நான்கு சதவீதம் அதிகரித்திருக்கிறார்கள் என அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வசதிகளுடன்கூடிய பெரிய வீடுகள்தாம் இப்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மாறிவரும் இந்தப் போக்குதான் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் போக்காகவும் இருக்கிறது. ஹைதராபாத், புனே, சென்னை ஆகிய நகரங்களில் பெரிய வீடுகளின் தேவை அதிகரித்திருப்பதாகக் கூறும் அந்த அறிக்கை, பெரிய அளவிலான நகரமயமாக்கலும் நடுத்தர வர்க்கத்தின் வருமான அதிகரிப்பும் அதற்கான காரணங்கள் என முன்னிறுத்துகிறது.
ரியல் எஸ்டேட் துறையினர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளவும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும், திறமையான உத்திகளைக் கையாளவும் வேண்டியிருப்பதையும் அறிக்கை உணர்த்துகிறது. இந்த ஆய்வின்படி, குறைந்த விலையில் பெரிய வீடுகள் என்ற இந்தப் போக்கைப் பயன்படுத்தி அதிக அளவிலான தேவையை ஹைதராபாத் உருவாக்கியிருக்கிறது. இந்த நகரத்தில், கடந்த ஆண்டு, 1,710 சதுர அடியாக இருந்த குடியிருப்புப் பகுதியின் தேவை இந்த ஆண்டு 1,757 சதுர அடியாக அதிகரித்திருக்கிறது.
புனேவில், இந்தத் தேவை 5.2 சதவீதம் உயர்ந்து 1,027 சதுர அடியாகவும், சென்னையில் 5.1 சதவீதம் உயர்ந்து 1,186 சதுர அடியாகவும் இருக்கிறது. அளவைப் பொறுத்தவரை, குருகிராம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நகரத்தில் வீடு வாங்குபவர்கள் சராசரியாக 1,600 சதுர அடி அளவிலான வீடுகளை எதிர்பார்க்கிறார்கள். அதேபோல், பெங்களூருவாசிகளும் 1,409 சதுர அடி அளவில் பெரிய வீடுகளை எதிர்பார்க்கிறார்கள்.
நொய்டாவில் 1,322 சதுர அடி அளவிலான வீடுகளையும் கிரேட்டர் நொய்டாவில் 1,319 சதுர அடி அளவிலான வீடுகளையும் எதிர்பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில், சென்ற ஆண்டு டெல்லியும் 1.5 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. டெல்லி குடியிருப்புப் பகுதிகளின் அளவு 900 சதுர அடியிலிருந்து 1,000 சதுர அடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால், மும்பையில் குடியிருப்புப் பகுதிகளும் அதன் அளவும் 8.2 சதவீதம் குறைந்து, 875 சதுர அடியாக இருக்கிறது.
பெங்களூரு, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகிய நகரங்கள் இடத் தேவைகளைக் குறைத்திருக்கின்றன. ஆனால், இந்த நகரங்களில் பெரிய வீடுகளின் (தேசிய சராசரி அளவைவிட அதிகம்) தேவை இன்னமும் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
சில நகரங்களில் பெரிய வீடுகளின் தேவையைக் கட்டுநர்கள் கணக்கில் எடுத்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. 2018-ம் ஆண்டில், பெங்களூரு வீடுகளின் சராசரி அளவு 1,409 சதுர அடியாக இருக்கிறது. இந்தியாவின் ‘சிலிகான் வேலி’யில் வீடு வாங்குபவர்களின் தேவையை உணர்ந்து விநியோகத் தரப்பில், குடியிருப்புப் பகுதிகளை 1,428 சதுர அடியில் உருவாக்குகிறார்கள்.
சென்னையிலும் கட்டுநர்கள் பெரிய வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். சராசரி அளவான 1,186 அடியைவிட அதிகமாக 1,210 சதுர அடியில் குடியிருப்புப் பகுதிகளை விநியோகிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், சில நகரங்களில் விநியோகத் தரப்பினரால் இந்தத் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. டெல்லியில் 900 சதுர அடியில் சிறிய வீடுகளின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், கட்டுநர்கள் இந்தத் தேவையைப் பொருட்படுத்தாமல், 1,227 சதுர அடி அளவில் பெரிய வீடுகளைத் திட்டமிடுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. இனி வரப்போகும் காலகட்டம் குறைந்த விலையில் விசாலமான வீடு என்ற போக்கு சென்னையிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT