Published : 14 Jul 2018 09:41 AM
Last Updated : 14 Jul 2018 09:41 AM
பழங்காலத்து வீடுகளில் மர அலங்காரம் கம்பீரமாக இருக்கும். கதவு, ஜன்னல், உத்திரம் என எல்லாப் பக்கங்களிலும் வீட்டு அலங்காரம் எழிலாக இருக்கும். இடையில் மர அலங்கார வழக்கம் சற்றுத் தொய்வடைந்துபோயிற்று. இப்போது மீண்டும் வீட்டு அலங்காரத்தில் மரத்தின் பயன்பாடு பிரபலமாகிவருகிறது.
நீண்ட காலம் உழைக்கக்கூடிய மர அலங்காரம், பாரம்பரியம் பேசும் மர அலங்காரம், கவர்ச்சி தரும் மர அலங்காரம், பட்ஜெட் மர அலங்காரம் என விதவிதமான அலங்காரத்தைச் சாத்தியப்படுத்த முடியும். ஒரே வீட்டில், பலவிதமான மர வகையைப் பயன்படுத்தியும் அலங்காரம் செய்ய முடியும். இந்த மர அலங்காரத்தைச் செய்வதற்கான ஆலோசனைகள்:
மூன்று நிறங்கள்
ஓர் அறையில், மூன்று விதமான மர நிறங்களைப் பயன்படுத்துவது போதுமானது. இது அறைக்குத் தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும். தரைத் தளத்துக்கு வெளிர் நிற மரத்தையும் அலமாரிகளுக்கு அடர் நிற மரத்தையும் அறைக்கலன்களுக்கு மிதமான மர நிறத்தையும் பயன்படுத்தலாம். இது அறைக்குச் சமநிலையான தோற்றத்தைக் கொடுக்கும்.
இந்த விதிகளை இப்படிப் பின்பற்றப் பிடிக்கவில்லையென்றால், உங்கள் ரசனைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஏனென்றால், மரத்தின் நிறங்கள் எப்படிப் பயன்படுத்தினாலும் அறைக்கு அடர்த்தியான தோற்றத்தையே கொடுக்கும். அறையில் ஒழுங்குமுறையை விரும்புபவர்கள் மேலே சொன்ன மூன்று விதிகளைப் பயன்படுத்தலாம்.
நிற வேறுபாடுகள்
பலவகையான மரப் பொருட்களை ஒரே நிறத்தில் வாங்கி அதை அறையில் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த மர அலங்காரத்தைப் பிரதிபலிக்கும் வழிதான். மரப் பொருட்களில் இருக்கும் சின்ன நிற வேறுபாடுகூட அறைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கும்.
புதுமையான அமைப்பு
மர அமைப்பில் (Texture) கவனம் செலுத்தினால், அறையின் தோற்றத்தில் இன்னும் புதுமையை உருவாக்கலாம். கடினமான மர மேற்பரப்பையும் மென்மையான மர மேற்பரப்பையும் ஒரே அறையில் வேறுபடுத்திக்காட்டும்படி அமைக்கலாம். உதாரணத்துக்கு, அறையில் மேற்கூரையைக் கடினமான மரத்திலும் தரைத்தளத்தை மென்மையான மரத்திலும் அமைக்கலாம்.
அதேமாதிரி, மரப் பலகைகளை வைத்து மேசை, பெஞ்சை உருவாக்கி, முனைகளைச் சீர்செய்யாமல் அப்படியே பயன்படுத்தலாம். இந்த மேசையும் பெஞ்சும் அறைக்கு ஓர் ஆழமான தோற்றத்தைக் கொடுக்கும். இதை மென்மையான தரைத் தளத்தில் பயன்படுத்தும்போது, அறை கூடுதல் அழகுடன் தெரியும்.
பலகைகள்
மரப் பலகைகளை விதமான ‘பேட்டர்ன்களில்’ வடிவமைத்து, அதை அறையின் சுவர் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். மரச் சுவர்கள் அறைக்குப் புதுப்பொலிவைக் கொடுக்கும். அத்துடன், இந்த அமைப்புடன் தரைத் தளத்தையும் நாற்காலிகளையும் இணைக்கலாம். இந்த மரப் பலகைகளை அப்படியே பயன்படுத்தப் பிடிக்கவில்லையென்றால் வண்ணமடித்துப் பயன்படுத்தலாம்.
காட்டேஜ் வடிவமைப்பு
ஒருவேளை, அறையில் எங்கே பார்த்தாலும் மர அலங்காரத்தின் தாக்கம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், அறையில் சிறு மாறுதல்களைச் செய்தால், அறையை ‘காட்டேஜ் ஸ்டைலி’ல் மாற்றலாம். உதாரணத்துக்கு, மரத் தரைத் தளத்தில் தரை விரிப்பைப் பயன்படுத்தலாம். அந்தத் தரைவிரிப்புடன் பொருந்தும் வண்ணங்களில் அறைக்கலன்களை வடிவமைக்கலாம். இந்தக் கலவை அறைக்கு ‘காட்டேஜ்’ தோற்றத்தைக் கொடுக்கும்.
உண்மையான மரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மரத்தின் தோற்றத்தைத் தரும் மார்பில்கள், லெதர், டெரக்கோட்டா போன்ற தரைத் தளங்களையும் அமைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT