Published : 28 Jul 2018 10:44 AM
Last Updated : 28 Jul 2018 10:44 AM
கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்து சில உயரமான கட்டிடங்களைக் கண்டு வியந்திருக்கிறோம். அவற்றை எப்படிக் கட்டுகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? வழக்கமான கட்டிடம்போல ஒவ்வொரு தளத்திலும் சாரங்களில் அமர்ந்தபடி மேஸ்திரியும், கொத்தனாரும் அதை எழுப்புவது சாத்தியமா என்ன?
தவிர இதுபோன்ற மிக உயரமான கட்டிடங்கள் அதிகப்படி சிறப்புத்தன்மைகள் கொண்டவையாக இருக்க வேண்டும்.
அது தன் பிரம்மாண்டமான எடையைத் தாங்க வேண்டும். பெரும் காற்றின் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க வேண்டும். ஆக பொறியாளர்களுக்கும் கட்டிடக் கலைஞர்களுக்கும் வானுயர் கட்டிடங்களை எழுப்புவது ஒரு சவால்தான்.
முதலில் அதற்கு மிக ஆழமான அஸ்திவாரம் தேவை. கட்டிடத்தின் அதீதக் கனத்தைத் தாங்கும் அளவுக்கு அது இருக்க வேண்டும்.
சரி, அஸ்திவாரம் எழுப்பிய பிறகு எப்படிக் கட்டுவார்கள்?
வார்ப்புகளுக்குள் ஈரமான கான்கிரீட்டை நிரப்புவார்கள். அந்த கான்கிரீட்டை உள்ளே நன்கு அடைப்பார்கள். சிறிது நேரத்தில் கான்கிரீட் உறுதிப்பட்டுவிடும். அப்போது அந்த வார்ப்பை நீக்கிவிடுவார்கள். இந்த மொத்த வார்ப்பும் ஏற்கெனவே எழுப்பப்பட்ட சுவர் மீது நிலைநிறுத்தப்படும். இப்படியே மேலே மேலே என்று கட்டிக் கொண்டே செல்வார்கள்.
ஆனால், மிக அதிகத் தளங்கள் கொண்ட கட்டிடம் என்றால் இந்த வார்ப்புகளை நீக்க மாட்டார்கள். அதற்குள்ளே இருக்கும் கான்கிரீட் கெட்டிப்பட்ட பிறகு அந்த வார்ப்பை அப்படியே மேலெழும்பச் செய்து அதற்குள் புதிய கான்கிரீட்டை ஊற்றுவார்கள். அதுவும் கெட்டிப்பட்டதும் வார்ப்பை இன்னும் கொஞ்சம் மேலெழுப்புவார்கள். இப்படியே அந்தக் கட்டிடம் மேல்நோக்கி உருவாகும். இந்த வார்ப்புகளைச் செங்குத்தான ஸ்டீல் கம்பிகளில் தொங்கவிட்டிருப்பார்கள். இதற்காக வெகு விரைவில் உலரக் கூடிய சிமெண்ட் பயன்படுத்தப்படும். அது தான் இறுகும்போது அதன் வார்ப்புகளுக்கும் சப்போர்ட் கொடுக்கும்.
‘ஹைட்ராலிக் ஜாக்’கின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வார்ப்புகள் மேலெழும்பும். இப்படிக் கட்டுவதை ‘Slip forming’ என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த வகைக் கட்டுமானத்தில் இரு விஷயங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒன்று, மிகத்தரமான கான்கிரீட். இரண்டு, வேலையைத் தொடங்கி விட்டால் அது தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் மிகமிக உயரமான கட்டிடங்களின் கட்டுமானப்பணி இரவு, பகல் என்று 24 மணி நேரமும் நடைபெறுகின்றன.
அடுத்த முறை வானுயர் கட்டிடங்களைப் பார்க்க நேர்ந்தால் அந்தக் கட்டுமானத் தொழில்நுட்பத்தையும் எண்ணி வியப்பீர்கள் அல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT