Published : 09 Jun 2018 11:01 AM
Last Updated : 09 Jun 2018 11:01 AM
பெ
ரும்பாலான நடுத்தர வீடுகளிலும், அடுக்ககங்களிலும் மக்கள் விருப்பப்படும் ஆனால் இல்லாமல் போகிற ஒரு வசதி பூஜை அறை. ‘தனியாக ஒரு பூஜை அறை இருந்தால் நன்றாக இருக்கும். அதில் விழுந்து தொழுவதற்கான நீளம் கொண்டதாக இருந்தால் மேலும் நல்லது’. இப்படிப்பட்ட விருப்பம் பலருக்கும் இருந்தாலும் நடைமுறையில் அது அவ்வளவாக நிறைவேறுவதில்லை. ஏதாவது ஓர் அறையின் ஒரு பகுதியாக (சமையல் அறை உட்பட!) அது இருக்கும்படி ஆகிவிடுகிறது. இத்தனையையும் மீறி பூஜை அறை ஒன்றைத் தனியாகக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தால் இதோ சில ஆலோசனைகள்.
பூஜை அறைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் மிதமானதாக இருப்பது நல்லது. அழுத்தமான பளீரென்ற வண்ணங்களைத் தவிர்த்து விடுங்கள். பூஜை செய்யும்போது மனம் அமைதியாக இருப்பதே நல்லது. அதற்கு மிதமான வண்ணம்தான் ஏற்றது. வெள்ளை, வெளிர் நீலம், க்ரீம் போன்ற வண்ணங்கள் இதற்குத் தோதானவை.
மின்சார சர விளக்குகளைப் பூஜை அறையில் மாட்டும்போது அவை ஆடம்பரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டாம். சிலரது வீட்டில் சாமிப் படங்களுக்கும், உருவங்களுக்கும் பூ வைப்பார்கள். ஆனால் அவற்றைச் சுலபத்தில் நீக்க மாட்டார்கள். வாடிய பூ தொடர்ந்து சில நாட்களுக்குக் காட்சியளிக்கும். இது தவறு. நிர்மால்யம் எனப்படும் இந்த வாடிய மலர்களை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். முடிந்தவரை பூஜை அறை என்பது கழிப்பறையிலிருந்து தள்ளி இருக்க வேண்டும். அப்போதுதான் விரும்பத்தகாத நாற்றங்கள் பூஜையின்போது உங்கள் கவனம் சிதறாமல் இருக்கும்.
பூஜை அறை என்பது ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடு. வாஸ்து சாஸ்திரம் என்பதும் வேறொரு நம்பிக்கையின் வெளிப்பாடு. இரண்டையும் இணைத்துப் பார்ப்பவர்கள் உண்டு. வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு அல்லது வடக்கு திசையில் பூஜை அறையை அமைப்பது நல்லது என்கிறார்கள். வீட்டின் மேற்படி திசை கொண்ட மூலைகளில் தனியாக ஒரு பூஜை அறையைக் கட்டமுடியவில்லை என்றால் ஏதாவது ஒரு அறையின் மேற்படி திசை மூலைகளிலாவது பூஜை அறையைக் கட்டலாம்.
பூஜை அறையில் பூஜை அறைக்கான சாமான்கள் மட்டுமே இருக்க வேண்டும். புதிய சாமி படங்களை நீங்கள் வாங்கினால் அவை ஒரே அளவு கொண்டதாக இருந்தால் பூஜை அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கொசகொசவென்று எக்கச்சக்கமாக தெய்வப் படங்களையோ, தெய்வத் திருவுருவங்களையோ வைத்து நிரப்புவதைவிடக் கண்ணுக்கு நிறைவாக இருக்கும் குறைந்த எண்ணிக்கையோடு இவற்றை நிறுத்திக் கொள்வது நல்லது (அல்லது உங்கள் பூஜை அறை விசாலமானதாக இருக்க வேண்டும்). ஒரு தெய்வத்தின் ஒரு படமோ ஒரு திருவுருவமோ இருந்தால் போதுமே. அதிகப்படியாக இருப்பதை யாருக்காவது கொடுத்து விடலாமே.
மிகவும் விலை உயர்ந்த உருவங்களை (தங்கம், நவரத்னக் கற்கள் போன்றவற்றினால் ஆனவை) பூஜை அறையில் வைக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.
உடைந்த மற்றும் கீறல் விழுந்த கடவுள் உருவங்களை நீக்கிவிடலாம். இப்போதெல்லாம் நடமாடும் பூஜை அறைகள் வந்து விட்டன. இது நடுத்தர மக்களுக்குப் பலவித வசதிகளைக் கொடுக்கிறது. வசதியான இடத்தில் வைத்து பூஜை செய்ய முடிகிறது. வேறு வீட்டுக்கு மாறும்போதும் இதைச் சுலபமாக எடுத்துச் செல்ல முடிகிறது. இது குறித்தும் யோசிக்கலாம் – முக்கியமாக சிறு அடுக்ககங்களில் வசிப்பவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT