Last Updated : 26 May, 2018 11:33 AM

 

Published : 26 May 2018 11:33 AM
Last Updated : 26 May 2018 11:33 AM

வீடுகள், வண்ணங்கள்

ரண்டு வருடங்களுக்கு முன்பு வியட்நாம் நாட்டின் தம் தன் (Tam Thanh) கிராமம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது அந்நாட்டு சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது தம் தன் கிராமம். இதற்கு முக்கியக் காரணம் அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் வண்ண ஓவியங்களாய்க் காட்சியளிப்பதுதான்.

ஆசியக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று வியட்நாம். சுற்றுலாதான் இங்கு முக்கியத் தொழில். மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருக்கும் வியட்நாமில் வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடியும்.

ஆனால் மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ள தம் தன் கிராமம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்தது. இந்நிலையில் இந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்காக வியட்நாம் – கொரியாவின் கூட்டு முயற்சியின் ஒருபகுதியாக அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஓவியம் வரைய முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து இருநாட்டு ஓவியர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இணைந்து இங்குள்ள வீடுகளில் ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினார்கள். ‘ஓவியத்தால் சிறப்பான சமுதாயத்தை உருவாக்குவோம்’ என்ற கருத்துடன் தொடங்கப்பட்ட இந்த ஓவியத் திட்டம் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கலைஞர்களின் இரண்டு வாரக் கடின உழைப்பால் தம் தன்னில் உள்ள அனைத்து வீடுகளும் தற்போது ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாதாரண மீனவ கிராமாக இருந்த தம் தன் தற்போது ஓவிய கிராமமாக மாறியுள்ளது. தற்போது தம் தன் கிராமத்தின் ஒவ்வொரு சாலையும் கண்காட்சிகளில் வைக்கப்படும் ஓவியங்களைப் போல் காட்சியளிக்கின்றன.

இங்குள்ள வீடுகளில் வரையப்பட்ட ஒவ்வொரு ஓவியமும் அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையையும், இயற்கைக் காட்சியையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஓவியத் திட்ட பணி முடிந்த சில மாதங்களிலேயே இந்தப் புதுமையான ஓவிய கிராமத்தைப் பார்வையிடுவதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்தனர்.

மேலும் தம் தன் கிராமம் கடற்கரையில் அருகில் அமைந்துள்ளதால் அந்த ஓவிய வீடுகளில் வசிக்க சுற்றுலாப் பயணிகள் விரும்புவதால், அந்த வீடுகளை கிராம மக்கள் சில நாட்களுக்காக வாடகைக்கு விடுகிறார். இதன் மூலம் அவர்களது வருவாயும் அதிகரித்துள்ளது.

இதேபோன்று ஓவியத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள மற்ற இடங்களுக்கும் எடுத்துச்செல்ல வியட்நாம் அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டு சுற்றுலாத் துறை நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x