Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM
தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் மந்தமாக உள்ளது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுவருகின்றன. இதனால் பத்திரப் பதிவு, கட்டிடப் பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிக் கடன் சதவீதம்கூடக் குறையும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 210 கோடி ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வாங்கப்பட்ட நில மதிப்பில் இதுதான் மிக அதிகம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் சென்னையில் ரியல் எஸ்டேட் புதிய உத்வேகம் பெற்றுள்ளது என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் சென்னையின் முக்கியமான பகுதியான போட் கிளப் பகுதியில் இருந்தது. கிட்டத்தட்ட இரு வருடங்களாக எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் இருந்த அந்த நிலத்தை அசோக் லேலண்ட் நிறுவனம், அந்நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஜா ரியாலிட்டி வென்சர்ஸ் லிமிடேட்டிடம் ஒப்படைத்துவிட்டது.
அந்நிறுவனம் அதை விற்கும் முயற்சியில் இறங்கியது. அதையடுத்து அந்த நிலத்தை சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஒரு கிரவுண்ட் நிலம் 11.57 கோடிக்கு முடிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் மொத்த சதுர அடி 2,400. “எங்களுக்குச் சொந்தமான இந்த நிலம் ரூ.210-க்கு விற்கப்பட்டுள்ளது” என அசோக் லேலண்ட் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
2007-ல் போர்ட் கிளப் பகுதியில் இதற்கு முன்பு ஷியாம் கோத்தாரி 2.39 ஏக்கர் நிலத்தை 175 கோடி ரூபாய்க்கு வாங்கியதுதான் அதிகபட்சமாக இருந்தது. இதற்கு முன்பு சென்னையில் பரிமாறப்பட்ட அதிக பட்ச நில மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும். சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனர் ரவி அப்பாசாமி, அம்பத்தூர் கிளாத்திங் நிறுவனத்தின் உரிமையாளர் விஜூ மக்ட்னியிடம் இருந்தி 9.5 கிரவுண்ட் நிலத்தை ரூ.100 கோடிக்கு வாங்கினார்.
இந்த இரு நிலப் பரிமாற்றங்களும் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கே உற்சாகம் அளித்ததுள்ளதாக ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் சென்னையில் கடந்த ஒன்றரை வருடத்தில் கிட்டதட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப் பரிமாற்றம் இதுவரை நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதன்மையான நிறுவனமான எக்ஸாண்டர் நிறுவனம் பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் ப்ராபர்டிக்குச் சொந்தமான சொத்தை 690 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. கடந்த வருடம் லேண்ட்மார்க் பில்டர்ஸ் 14.61 ஏக்கர் நிலத்தை 490 கோடி ரூபாய்க்கு பின்னி மில்லிடம் இருந்து விலைக்கு வாங்கியது.
சீப்ரோஸ் நிறுவனம் வைஸ்ராய் ஹோட்டலை 480 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அதுபோல விஜிஎன் பில்டர்ஸ் டாட்டா கம்யூனிகேஷனிடம் இருந்து 1.43 ஏக்கர் நிலத்தை 195 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ரியல் எஸ்டேட் தேக்கமடைந்துள்ள நிலையில் இம்மாதிரியான நிலங்கள் பரிமாறப்பட்டுள்ளது ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாக உள்ளதாக அத்துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment