Published : 12 May 2018 11:53 AM
Last Updated : 12 May 2018 11:53 AM
வீ
டு கட்டும்போது ஒவ்வோர் அறைக்கும் மின்விசிறியைப் பொருத்துவோம். பெரும்பாலும் ‘சீலிங் ஃபேன்’ எனப்படும் கூரை மின்விசிறியைதான் பொருத்துவோம்.
இந்தக் கூரை மின்விசிறிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? எவ்வளவு அறைகளில் பொருத்த வேண்டுமோ அந்த எண்ணிக்கையில் ஒரே மாதிரியான மின்விசிறிகளை வாங்க வேண்டியதுதான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கூரை மின்விசிறிகளை வாங்குவதற்கு முன் சில தெளிவுகள் தேவை.
அறையின் அளவுக்குத் தகுந்தபடிதான் மின்விசிறியின் அளவு இருக்க வேண்டும். பெரிய கூடத்துக்குச் சிறிய மின்விசிறியைப் பொருத்துவது தவறு. சிறிய அறைக்குப் பிரம்மாண்டமான மின்விசிறியைப் பொருத்துவது அபத்தம். மின்விசிறியை வாங்கச் செல்வதற்கு முன் அறையின் நீள, அகல, உயரங்களைத் துல்லியமாக அளந்து கொண்டு செல்லுங்கள். சில மின்விசிறிகளின் மேல் அட்டையிலேயே எந்த அளவு கொண்ட அறைக்கு எந்த அளவுக்கு நீளமான இறக்கைகளின் பரப்பு (Blade span) தேவை என்று போட்டிருப்பார்கள். அப்படி இல்லையென்றாலும் அந்தக் கடையில் உள்ள அனுபவமிக்க விற்பனையாளர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.
சிறந்த மின்விசிறிக்கும் அப்படியில்லாத மின்விசிறிக்கும் இடையே உள்ள வித்தியாசமாக அதன் மோட்டார் என்பது இருக்கவே வாய்ப்பு அதிகம். தொழில்நுட்பப்படி முறையாக உருவாக்கப்பட்ட மோட்டார் என்றால் மின்விசிறி இரைச்சல் இல்லாமல் சுற்றும். இலகுவாகச் செயல்படும். போதிய காற்றோட்டத்தை அளிக்கும்.
சிலர் குளியலறைகளுக்குக்கூட மின்விசிறியைப் பொருத்துகிறார்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஈரம் அதிகமுள்ள அறையில் பொருத்தப்படும் மின்விசிறிகள் துருவுக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்ட பெயிண்ட் அடிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். குளியலறையில் மின்விசிறி பொருத்தவில்லையென்றால் இந்த ஆலோசனையைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று இருந்து விடாதீர்கள். கடற்கரைப் பக்கமாக உள்ள வீடுகள் அனைத்தும் மின்விசிறியைத் துருப்பிடிக்க வைக்கக் கூடியதுதான். கவனம் தேவை.
மின்செலவைச் சேமிக்கும் வகையிலான மின்விசிறிகள் உண்டு. இவற்றைப் பொருத்தினால் மின்சாரச் செலவு பாதியாகக் குறையவும் வாய்ப்பு உண்டு. வரவேற்பறை, கூடம் போன்ற பலரும் வந்து அமரக்கூடிய பகுதிகளில் அழகான, கம்பீரமான மின்விசிறியைப் பொருத்துங்கள்.
எந்தவகை சுவிட்சுகளை நீங்கள் மின்விசிறிகளுக்குப் பொருத்துகிறீர்கள் என்பதும் முக்கியம். பழங்கால மின்விசிறிகளில் ரெகுலேட்டர்களை இயக்கும்போது அதிக வேகத்தில் மின்விசிறியைச் சுற்றாலும் அதே அளவு மின்சாரம்தான் செலவாகும். இப்போதைய மின்னணு சுவிட்சுகள் வேகத்துக்குத் தகுந்தாற்போல் மின்சாரம் செலவாகும்.
சிலர் நான்கு இறக்கைகள் (Blades) கொண்ட மின்விசிறி என்றால் அதிகக் காற்று கிடைக்கும் என்பதாக எண்ணிக் கொள்வார்கள். இது தவறு. அறையின் உயரம் குறைவானது என்றால் நீங்கள் Flush Mount வகை மின்விசிறியை வாங்கலாம். இவற்றை ஹக்கர் (Hugger) மின்விசிறிகள் என்றும் கூறுவதுண்டு. இவை கிட்டத்தட்ட அறையின் மேல் கூரையை ஒட்டியே இருக்கும். அதாவது மின்விசிறி கீழே தொங்காது.
எட்டு அடியைவிடக் குறைவான சீலிங் கொண்ட அறைகளுக்கு இந்த வகை மின்விசிறிகள் பொருந்தும். தோராயமாகச் சொல்ல வேண்டுமானால் சுமாரான அளவு மற்றும் ஓரளவு பெரிய அறைக்கு வழக்கமான மின்விசிறியே போதுமானது. அதாவது 50-லிருந்து 56 அங்குல இறக்கை அளவு கொண்ட மின்விசிறியைப் பொருத்தினாலே அறை முழுவதும் அந்த மின்விசிறி காற்றை அளிக்கும்.
அறை பெரிதாக இருந்தாலும் மின்விசிறியின் கீழே உட்காருபவர்களுக்கு அதிகக் காற்று கிடைத்தால் போதுமென்றால் மீடியம் அளவு மின்விசிறியே போதுமானது.
மிகப் பெரிய அறைகளுக்கு ஒரு மிகப் பெரிய மின்விசிறியையும் பொருத்தலாம் (60-லிருந்து 72 அங்குலம் இறக்கை அளவு கொண்டது) அல்லது இரண்டு சிறிய அல்லது சாதாரண அளவு கொண்ட மின்விசிறிகளையும் பொருத்தலாம். வீட்டில் யார் மிக உயரமானவரோ அவர் நன்கு கையை மேலே தூக்கும்போது மின்விசிறியின் கீழ்ப்பகுதிக்கும் அவரது விரல் நுனிகளுக்குமிடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்.
மின்விசிறியும் மின் விளக்கும் இணையாகவே வருவதையும் இப்போது பார்க்கிறோம். உங்கள் மின்சுற்றுக்கு இந்த இரண்டையும் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதை அனுபவமுள்ள எலக்ட்ரீஷியனைக் கேட்டு முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
வாங்கிய கொஞ்ச காலத்திலேயே, மின்விசிறியை ஆன் செய்தால் ஹம்மிங் ஒலி கேட்டுக் கொண்டிருந்தால் அது தரமற்ற மின்விசிறி. மின்விசிறியைப் பொருத்திய பிறகு சில வருடங்களுக்குப் பிறகு மின்விசிறியை இயக்கும்போது கடகடவென்று சத்தம் வந்தால் அதிலுள்ள பால் பேரிங் தேய்ந்து விட்டது என்றும் அதை மாற்ற வேண்டும் என்றும் அர்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT