Published : 05 May 2018 10:45 AM
Last Updated : 05 May 2018 10:45 AM
வீ
ட்டை வாங்குவதிலிருக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்று பட்ஜெட். அதனால், உங்கள் நிதிநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பலவிதமான கட்டுமான நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமானது.
தொடக்கநிலையில் இருக்கும் வீடுகள்
விலையைப் பொறுத்தவரை, தொடக்கநிலையில் (Pre-Launch) இருக்கும் சொத்துகளுக்குக் குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதற்குக் காரணம், கட்டுமான நிதி தேவைக்காகக் கட்டுநர்கள் அதிகமான குடியிருப்புப் பகுதிகளை விற்க வேண்டும் என்று நினைப்பதுதான். அத்துடன், இந்தக் கட்டத்தில் வீடு வாங்கும்போது சில இலவசங்களும் தள்ளுபடியும் கிடைக்கும்.
கட்டுமானத்தில் இருக்கும் வீடுகள்
கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டால், விலை சற்றுக்கூடும். ஆனால், இந்தக் கட்டத்தில் உங்களுக்குப் பிடித்த குடியிருப்புப் பகுதியைத் தேர்வுசெய்யும் வாய்ப்பிருக்கும்.
தயார்நிலையில் இருக்கும் வீடுகள்
இந்த வீடுகளுக்கு நிச்சயமாக அதிகமான விலை நிர்ணயம்செய்யப்பட்டிருக்கும். ஆனால், உடனடியாக குடிபெயர முடியும் என்பதால் வாடகைச் செலவை உங்களால் குறைக்கமுடியும்.
விலையைப் பொறுத்தவரை, தொடக்கநிலையில் இருக்கும் வீடுகளும், கட்டுமானத்தில் இருக்கும் வீடுகளும் 25 முதல் 30 சதவீதம் வரை குறைவான விலையில் கிடைக்கும். ஆனால், இதில் காத்திருப்புக் காலம் அதிகமாக இருக்கும். இந்த அம்சம் உங்கள் நிதிநிலையில் எதிரொலிக்கும். வீட்டுக் கடன், வாடகை என இரண்டுவிதமான நிதிச்சுமையை உங்களுக்கு ஏற்படுத்தும்.
தயார்நிலையில் இருக்கும் சொத்துகளுக்கு, ஜிஎஸ்டி கிடையாது. ஆனால், கட்டுமான நிலையில் இருக்கும் சொத்துகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி கட்டவேண்டியிருக்கும்.
வரிச் சலுகைகள்
வீட்டுக் கடன் பெறுவதால் பல்வேறு வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. வருமான வரிச் சட்டத்தின்படி, வீட்டுக் கடனுக்காகக் கட்டப்படும் முதல் பிரிவு ‘80 C’யின் கீழ் உங்கள் வருமானத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. அதேநேரம், வீட்டுக்கடனுக்கான வட்டி பிரிவு ‘24 (B)’ –ன் கீழ் பிடிக்கப்படுகிறது. நீங்கள் வாங்கும் வீடு தயார்நிலையில் இருக்கும்பட்சத்தில்தான், உங்களால் இந்தப் பிடித்தங்களைத் திரும்பப் பெற முடியும். கட்டுமான நிலையில் இருக்கும் வீடுகளுக்கு ஒருவரால் முதலில் பிடிக்கப்படும் ஒரு லட்சம் ரூபாயைக் கோரமுடியாது. கட்டுமானம் நிறைவடைந்தவுடன்தான் வட்டியில் ஐந்து தவனையாகப் பிடிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்தத் தொகையையும் கடன்கொடுக்கப்பட்ட மூன்றாவது நிதியாண்டின் இறுதியில்தான் கோரமுடியும். கட்டுமானத் திட்டங்கள் முடிவடைய தாமதமாவது இப்போது அதிகரித்துவருகிறது. இந்தத் தாமதத்தால் வரிச்சலுகைகளை நீங்கள் இழக்க நேரிடும். நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கும் காலத்தில் வீட்டு வாடகை அலவன்ஸை பெறமுடியும்.
இந்த அம்சங்களையெல்லாம் கணக்கில்வைத்து, எந்தக் கட்டுமான நிலையிலிருக்கும் வீட்டை வாங்கப்போகிறீர்கள் என்று தீர்மானிப்பது சரியானதாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT