Published : 05 May 2018 10:45 AM
Last Updated : 05 May 2018 10:45 AM
கோ
யம்புத்தூர் என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருவது ‘ஏனுங்கோ’ என்று மரியாதையுடன் அழைக்கும் அந்த மக்களின் சிரித்த முகம்தான். நொய்யல் ஆற்றங்கரையில் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ வீற்றிருக்கும் கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையைக் கொண்டது இந்நகரம்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் அளவுக்கு பருத்தித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நகரம். அது மட்டுமல்லாது இயந்திரங்கள் உற்பத்திசெய்வதிலும் கோவை சிறந்து விளங்குகிறது. அந்நகர மக்களால் தயாரிக்க முடியாத பொருள் எதுவுமில்லை என்று பெருமையாகச் சொல்லப்படுவதும் உண்டு.
உற்பத்தியில் மட்டுமல்லாமல், வணிக வளத்திலும் செல்வச் செழிப்பிலும் அந்நகரம் சிறந்து விளங்கி உள்ளது. இன்றும் சிறந்து விளங்குகிறது. அதற்கு அந்நகரில் இருக்கும் ஒப்பனக்காரத் தெரு சான்று.
ஒப்பனக்காரத் தெரு, கோயம்புத்தூரிலிருக்கும் மிகப் பழமையான தெருக்களில் ஒன்று. அதுபோல கோவையில் அதிக அளவில் வியாபாரம் நடக்கும் தெருவும் இதுதான். அதனால் இந்தத் தெருவைப் பணக்காரத் தெரு எனச் சொல்லலாம். மிகப் பெரிய வர்த்தகத் தெரு இந்தத் தெருவைப் பற்றிய செய்திகள் 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விஜய நகர அரசர்களின் ஆட்சியின்போதும் 15-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சியின்போதும் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
கோயம்புத்தூரில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் மிகப் பரபரப்பான வணிகத் தெருவாக உள்ளது ஒப்பனக்காரத் தெரு. அங்கே பல வணிக நிறுவனங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கட்டிடங்களும் இருக்கின்றன. கோயம்புத்தூரில் முதன்முதலாக மின் இணைப்பு வசதி பெற்ற தெரு என்ற பெருமையும் அதற்கு உண்டு.
ஒப்பனக்காரத் தெரு கோயம்புத்தூர் நகராட்சிக் கட்டிடத்துக்கும் டவுன் ஹாலுக்கும் அருகில் உள்ளது. இந்தத் தெருவின் ஒருபுறம் தெற்கு ஒக்கடமும் மறுபுறம் மில் ரோடும் உள்ளன. ஊக்கு விற்கும் சிறு தெருவோரக் கடைகள்முதல் தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யும் பெரும் நகைக் கடைகள்வரை பல கடைகள் அந்தத் தெருவில் உள்ளன. இந்தியாவில் ஜவுளித்தொழிலின் மையமாக கோயம்புத்தூர் திகழ்வதால், இந்தத் தெருவின் பெரும் பகுதியை ஜவுளிக்கடைகள்தாம் ஆக்கிரமித்து உள்ளன.
தமிழகத்தின் முக்கியமான ஜவுளிக்கடைகள் எல்லாம் அங்கே கிளை விரித்துள்ளன. பண்டிகைக் காலத்தில் இந்தத் தெரு மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். அப்போது அந்தத் தெருவின் நடைபாதைகளில் எல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் இந்தத் தெருவில் நுழைந்து வெளிவருவது பெரும் சவால்தான்.
அந்தத் தெருவில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க அத்தர் ஜமாத் மசூதி 1860-ல் கட்டப்பட்டது. அது திருநெல்வேலி பேட்டையிலிருந்து அங்கே குடியேறிய 52 வாசனைத் திரவ வியாபாரிகளின் குடும்பங்களால் கட்டப்பட்டது. அதனால்தான் அந்த மசூதி அத்தர் மசூதி என்றழைக்கப்படுகிறது. அத்தர் என்றால் தமிழில் வாசனைத் திரவியம் என்று அர்த்தம்.
இந்த மசூதிக்கு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு வந்துள்ளார். அவர் தவிர, ரஷ்யாவின் பிரதமர் குருஷ்ஷெவ் உட்படப் பல உலகத் தலைவர்கள் அங்கு வருகை புரிந்துள்ளனர். குருஷ்ஷெவ் 1953-ம் ஆண்டு ரஷ்யாவின் பிரதமர் ஆவதற்கு முன்பாக இந்த மசூதிக்கு வந்துள்ளார்.
ரம்ஜான் புனித நோன்பின்போது அந்த மசூதியில் வழங்கப்படும் நோன்புக் கஞ்சி மிகவும் பிரசித்தி பெற்றது. கோயம்புத்தூரின் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக அந்த மசூதியைக் குறிப்பிடலாம். இன்றும் தங்கள் மத நம்பிக்கையை மீறி பல்வேறு சமயத்தினரும் அங்கே கூடுகின்றனர். அங்கு விற்கப்படும் மோதிரங்களையும் தாயத்துகளையும் வாங்கிச் செல்வது அங்கு வருவோரின் வாடிக்கையாக உள்ளது.
இந்தத் தெரு ஏன் ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுகிறது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. வணிகத்தில் செழித்து விளங்கும் செல்வந்தர்கள் இந்தத் தெருவில் அதிகம் இருப்பதால், ‘ஓ பணக்காரத் தெரு’ என்பதே மருவி ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுவதாகச் சிலர் நகைச்சுவையாகச் சொல்வதும் உண்டு. ஒப்பனைக்காரர்கள் அந்தத் தெருவில் வசித்து வந்ததால் அது ஒப்பனக்கார தெரு என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் சொல்கின்றனர்.
ஆனால், மக்களிடம் வரி வசூலித்த பலிஜா நாயுடு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசித்துள்ளனர். அதனால்தான் அது ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுகிறது என்பதுதான் பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஒப்பனக்காரர்கள் என்றால் தமிழில் வரி வசூலிப்பவர்கள் என்று அர்த்தம். தெலுங்கில் அது ஒப்பனவாரு என்று அழைக்கப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தால் என்ன? கோயம்புத்தூரின் தொன்மையான வரலாற்றையும் பழமையின் சிறப்பையும் வணிக வளத்தின் செழிப்பையும் இந்தத் தெரு இன்றும் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT