Published : 19 May 2018 11:34 AM
Last Updated : 19 May 2018 11:34 AM
வீட்டுக் கட்டிடக் கலையில் பிரபலமானது ‘நாலுகெட்டு’ வீடு. அது பலவிதமான உள்ளடுக்குகளைக் கொண்டது. இப்போது இந்தக் கட்டிடப் பாணியை மையமாகக் கொண்டு வில்லாக்கள் கட்டப்பட்டுவருகின்றன.
‘நாலுகெட்டு’ வீடு என்பது நான்கு புறம் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளி உள்ள வீடு. அதன் நான்குபுறமும் வாசல்கள் இருக்கும். வடக்கினி,தெக்கினி, கிழக்கினி, படிஞ்சாட்டினி என அந்த நான்கு வாசல்களும் அழைக்கப்படும்.
இதிலும் பலவிதமான அம்சங்கள் உண்டு. படிப்புரா, பூமுகம், சுற்று வெரந்தா, சாருபடி, ஆம்பல் குளம், நடு முற்றம், பூஜை அறை ஆகிய பகுதிகள் அடங்கியிருக்கும்.
படிப்புரா என்பது வீட்டின் வெளிப்புறச் சுவரின் நுழைவு வாசலின் இருபக்கமும் உள்ள தூண். இரு தூணும் மேல் பகுதி, கேரளக் கோயிலின் கட்டிடக் கலையைப் போன்று இணைந்திருக்கும். வீட்டுக்குக் கம்பீரமான அழகைத் தரும் இந்த அமைப்பு வீட்டுக்கு வருபவரைக் கைகூப்பி வணக்கம் செலுத்தும் வண்ணம் இருக்கும். அதுபோல் பூமுகம், வீட்டின் முன்புறப் பகுதி. முன்பகுதியில் வண்டிகளில் வந்து இறங்குவதற்குத் தோதான இட வசதி கொண்டது. அது போல வீட்டின் பெரியவர் முன்புறம் அமர்வதற்கான சாய்வு நாற்காலி இந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இப்போது கட்டப்பட்டுவரும் வீடுகளில் இந்த அமைப்பைக் காண முடியும்.
பூமுகத்தில் இருந்து நான்கு புறமும் பிரிந்து செல்லும் வெளிச் சுற்று வரந்தா என அழைக்கப்படுகிறது. இதுவும் கோயில் கட்டிடக் கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தச் சுற்று வரந்தாவைச் சுற்றி மரத்தால் வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த அமைப்பைச் சாருபடி என அழைக்கிறார்கள். இதன் வழியாக வரும் சூரிய ஒளி வீட்டுக்கு ஆரோக்கியத்தையும் வெளிச்சத்தையும் கொண்டுவரும். வீட்டின் நடுவில் உள்ள வானவெளிதான் நடு முற்றம்.
வெயிலும் மழையும் இந்த நடு முற்றத்தில் விழுந்து வீட்டுக்கு இயற்கை சக்தியைக் கொண்டுவரும்.வ்நாலுகெட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைக்கப்பட்டிருக்கும். உள்ளே சிலைகள் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருக்கும். நாலு கெட்டு வீடு போல எட்டு கெட்டு வீடும், பதினாறு கெட்டு வீடும் உள்ளது. இன்றும் கேரளத்தில் நாலுகெட்டு வீடு பரவலாகக் கட்டப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இதுபோல நடுமுற்றம் வைத்து வீடு கட்டும் வழக்கம் வந்துள்ளது. http://www.tips.homepictures.in/ என்ற இணையதளத்தில் நாலுகெட்டு வீட்டின் வடிவமைப்பு மாதிரியைக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலவிதமான வீட்டின் மாதிரித் திட்டம் இந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT